Bernard Bate

இன்று காலை கலைஞர் தொலைக்காட்சியில், ரமேஷ் பிரபாவுடன் ஒருவர் அழகான தமிழில் உரையாடிக்கொண்டிருந்தார். பார்க்க வெற்றுநாட்டவர் போல இருந்ததால், அலுவலகம் கிளம்புவதை சற்றே தள்ளிப்போட்டுவிட்டு பார்க்கத்தொடங்க்கினேன். அந்த மனிதர், பெர்னார்ட் பேட் என்ற யேல் பல்கலைக்கழக பேராசிரியர். தமிழின் மேடைப்பேச்சு பற்றியும், திராவிட கட்சிகள் வந்த பிறகு அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும், மிக அழகான தமிழில் (செந்தமிழ் அல்ல பேச்சுவழக்குதான்), ஆர்வத்தோடு கேட்கத் தூண்டுமாறு உரையாடிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன கருத்துக்கள் சில: 

  • திராவிடக் கட்சிகள் வந்த பிறகுதான் மேடையில் செந்தமிழில் பேச ஆரம்பித்தனர். மக்களுக்கு சற்றே அந்நியமான இந்த மொழிநடையே அவர்களின் வெற்றிக்கு ஒரு காரணமோ என்றெண்ணும் வகையில் மக்களிடம் மிக வரவேற்பு பெற்றுள்ளது.

  • டீக்கடை அரசியல் கலாச்சாரம் என்பது, மற்ற நாட்டு மக்களுக்கு மிகவும் புதிதானது, விசித்திரமானது. இங்குள்ள எழுத்தறிவில்லாத மக்கள் பல செய்திகளை, டீக்கடை விவாதம் மூலமாக மட்டு அறிந்து கொண்டுள்ளனர். ஒபாமா பற்றி நுணுக்கமாகவும், சிங்கள இனவாதம் பற்றியும் எழுத-படிக்க தெரியாத ஆட்டோ ஓட்டுநர்கள் கூட, தன்னிடம் ஆர்வத்தோடு விவாதிக்கின்றார்கள் என்று ஆச்சரியப்பட்டார்.

நானோ, ஆங்கில சொற்கள் பலவற்றை தவிர்த்து, சரளமாக பேசும் இவர் மொழிநடையைக்கண்டு வியப்பில் ஆழ்ந்திருந்தேன். இருபது ஆண்டுகளுக்கு முன்னரே மதுரை வந்து தமிழ் கற்றுக்கொண்டதாகவும், தமிழ் மொழியின் இனிமை தன்னை கவர்ந்தது என்றும் என் இனிய தமிழ் மக்களே என்று பாரதிராஜா போல குரல் மாற்றி பேசி, உங்களுக்கு பிடித்த உணவு எது என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் ஒரு படத்தில் சொல்வாரே, அது போல நேத்தி வச்ச மீன்குழம்பு தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றெல்லாம் அவர் கதைத்துக்கொண்டிருக்கையில் நான் எதனால் மிகவும் சந்தோஷம் அடைந்தேன் என்று எனக்கே தெரியவில்லை.

இவரைப்பற்றி இணையத்தில் தேடியதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிட்டின. சுந்தர ராமசாமியின் அடைக்கலம் , அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமையலரை போன்ற சிறுகதைகளை, ஜாம்பவான் ஏ.கே.ராமானுஜனுடன் இணைந்து மொழிபெயர்த்துள்ளார். பண்பாட்டு அசைவுகள் என்ற அருமையான கட்டுரைத் தொகுப்பு எழுதிய முனைவர். தொ.பரமசிவம் அவர்களின் மற்றொரு நூலான அறியப்படாத தமிழகம் தனை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்துக்கொண்டிருக்கிறார்.

இந்த உரையாடலின் வீடியோ கிடைத்தால் பிறகு பதிவு செய்கிறேன்.


Comments (2)

யாத்ரீகன் 16 years ago · 0 Likes

please do share the video when you come across it

ரவிசங்கர் 15 years ago · 0 Likes

வெளிநாட்டவர்களின் தமிழ்க் காதல், அறிவின் ஆழம் வியக்கத்தக்கது. கண்டிப்பா அந்த நிகழ்படம் கிடைச்சா பதியுங்க http://www.muelangovan.blogspot.com/ தளத்தில் இத்தகைய அறிஞர்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வராங்க


Date
March 17, 2009