பையில காசு கையில வேலை
என் உறவினன், அண்ணாமலை பல்கலைகழகத்தில் கணிப்பொறியியல் படித்துவிட்டு, வேலைதேடும் படலத்திற்காக சென்னை வந்துள்ளான். என்னிடம் வந்து “இங்க பார், நான் ரொம்ப பிராக்டிகல். நிறைய பணம் செலவுபண்ணி B.E முடிச்சிருக்கேன்”. “எனக்கு இந்த Job Satisfaction, மனசுக்குப்பிடிச்ச வேலை மண்ணாங்கட்டியில்லாம் நம்பிக்கையில்லை. எனக்குத் தேவை காசு. அவ்ளோதான். அதுக்கு ஒரு வழிய சொல்லு”, என்று ஒரு போடுபோட்டான். அனைத்தையும் ஜீரணித்துக்கொண்டு, தற்போது Job Marketன் பொன்முட்டையிடும் வாத்தான Mainframe கோர்ஸினை பரிந்துரைத்தேன்.
அவனும் சென்னையிலுள்ள பிரபலமான mainframe training center அனைத்திற்கும் சென்று விசாரித்துவந்து எனக்கு ஒரு Field Report கொடுத்தான். அவனுக்கு நல்ல பிசினஸ் மூளை, ஊரில் (அரியலூர்) அவன் தந்தை மளிகை வியாபாரம் செய்பவ்ர். இவனுக்கும் நேக்காக பேசி, விஷயத்தை கறக்கும் திறமை உண்டு. இவன் சொன்ன விஷயம் தான் அதிர்ச்சிக்குரியதாக இருந்தது. நாம் இப்போது பெருமைப்பட்டுக் கொண்டுருக்கும் தகவல் தொழிநுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில் (IT Services companies like Infosys, TCS, CTS, Wipro, etc) இருக்கும் அவலநிலை தெரிந்தது.
பொதுவாக Mainframe கணிணி சம்பந்தவேலை என்பது ஒரு வற்றாநதி போன்றது, என்று அனைவருக்கும் ஒரு நம்பிக்கை. கோடிக்கணக்கில் டாலரில் முதலீடு செய்து, முப்பது, முப்பத்தைந்து வருடங்கள் முன் செய்த மென்கலன்களை டிஜிடல் புரட்சி, வளர்ச்சி, என்ற பெயரில் குப்பையில் கொட்டிவிட்டு, மைக்ரோசாஃப்ட், சன், ஆரக்கிள் போன்ற நிறுவனங்கள் தரும் மென்கலனுக்கு மாற துட்டு செலவு செய்ய முடியாமல் இருக்கும் நிறுவனங்கள் , நம் இந்திய சேவை நிறுவனங்களின் காமதேனுக்கள். “உங்கள் பழைய மென்கலங்களினால் புதிய தொழிநுட்பத்திற்கு ஈடு கொடுக்க முடியாது, அதை புதியதாக மாற்றித்தருகிறோம் (Development/Transition)” என்றும், அந்நிறுவனங்கள் வேண்டாம் என்று கூறினால் , “உங்கள் பழைய மென்கலங்களில் உள்ள ஓட்டையினை சரி செய்து தருகிறோம்(Maintenance)” என்று கூறியே பல நிறுவனங்கள் ( இந்திய நிறுவனம் மட்டும் அல்ல EDS , Accenture போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும் கூட) பிழைப்பை நடத்துகின்றன.
இந்த சேவை நிறுவனங்கள் புதிதாக வேலை/கஸ்டமர் பிடிப்பதற்கு, தங்களிடம் உள்ள பணியாளரின் எண்ணிக்கை (Resource Count) என்பது(ம்) ஒரு முக்கிய அம்சம். பல பெரிய நிறுவனங்கள் (Ford, GM, Wal-Mart, போன்றவை) தங்களின் பணியினை செய்யும் நிறுவனத்தில், தங்களின் சேவையினை செவ்வனே செய்வதற்கு போதுமான ஆட்கள் உள்ளனரா என்பதையும் ஒரு selection criteria வாக கொள்வார்கள். அதனால்தான் அடிக்கடி, இந்த நிறுவனத்திற்கு இவ்வளவு ஆட்கள் தேவை , சீக்கிரமாக தொடர்பு கொள்ளவும் போன்ற செய்திகள் அடிபடுகின்றன.
சேவை நிறுவனம், தன் மனித வளத்துறையினை (HR) அணுகி , எனக்கு இந்த பணிக்கு, இந்த தேதிக்குள், இவ்வளவு அனுபவம் மிக்க ஆட்கள் தேவை என்று கூறும். மனித வளத்துறை, பல கன்சல்டன்சிகளையும், இணையத்தில் மேய்ந்து , ஆட்களை பிடிக்கும் அல்லது பிடிக்கப்பார்க்கும். Mainframe என்பது அரதபழசான கணிணி என்பதால், புதிதாக கல்லூரியில் இருந்துவரும் மக்களிடம் , இதைப்பற்றிய அறிவு மிகவும் குறைச்சல். ஆகையால் சேவை நிறுவனங்களின் Mainframe சம்பந்தப்பட்ட , கீழ்நிலை வேலையினை செய்வதற்கு ஆட்கள் கம்மி. இந்த Mainframe training center இல் பயிற்சி எடுக்கும் மாணவர்களுக்கு, சேவை நிறுவனங்களில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு கொஞ்சம் அதிகம்.
இங்குதான் பிரச்சனையே ஆரம்பம். (ஆகா அப்ப இவ்ளோ நேரம் சொன்னது என்ன ? … அது, வந்து , ஹி..ஹி). அனைத்து பயிற்சி நிறுவனங்களும் 18,000 முதல் 35,000 வரை வாங்குகின்றன. இதில் ஒரு நிறுவனத்தில் (பெயர் சொல்லலாமா என்று தெரியவில்லை) , “இங்க பாருங்க..18 ரூவா கட்டினீங்கனா..டிரெயினிங் தருவோம்..அதுக்கு மேல வேலை வேண்டும்னா..75 கொடுக்கனும்.” . மெனு கார்டு போல், ஒரு லிஸ்ட் கொடுத்து (எல்லாம் உண்மையாகவே ரேஞ்சான கம்பெனி ) , “இதுல இருக்கிற, எந்த கம்பெனில வேணும்னு சொல்லுங்க , நாங்க ஏற்பாடு பண்றோம்.. ஆனா ஒரு கன்டிஷன், எங்க இன்ஸ்டிடியுட்லதான் டிரெயினிங் எடுக்கணும்”.
இரண்டு அல்லது மூன்று வருடம் வேலை தேடி, கிடைக்காத ஆட்களுக்கு இவர்கள்தான் ஆபத்பாந்தவர்கள். இரண்டு மாதம் டிரெயினிங் கொடுத்துவிட்டு, ஒரு போலி அனுபவ சான்றிதழை (இது கொஞ்சம் சீப், ரூ.2000 போதும். பிரபலமான நிறுவனத்தின் அனுபவ சான்றிதழ் என்றால் கொஞ்சம் அதிகம்) சேவை நிறுவனத்தின் மனித வளத்துறைக்கு கொடுத்துவிட்டு, கூடவே கொஞ்சம் வெட்டிவிட்டு, நிறுவனத்திற்குள் நுழைந்துவிடுகின்றனர்.அப்புறம் என்ன , புது காரு, புது வீடு என்று கலக்கல்தான் (நிறுவன முதலாளிகளுக்கு வயிற்றில் கலக்கல்).
இது போன்ற சமாச்சரங்களில் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று , இந்த நிறுவனங்கள் தங்களுடைய brand image/value வை பொத்திப் பொத்தி வளர்க்கின்றன. இதற்கு எதேனும் பங்கம் வந்தால் அவ்வளவுதான், டங்கு டணால் ஆகிடும். Economic Times, Business Line அல்லது Financial Express போன்ற பத்திரிக்கைகள் எதாவது ஒரு Sting (ஆகா… இதற்கு தமிழ்ல என்னனு தெரியலயே) மூலம் வெளிக்கொண்டு வந்தால்தான் இதற்கு ஒரு விடுவுகாலம் பிறக்கும். கூடிய சீக்கிரம் அது நடக்கும் என்று நம்புவோம்.