எஸ்.ராமகிருஷ்ணன் - துணையெழுத்து
செல்லப் பிராணிகளை வளர்ப்பது, அதை ஜுஜ்ஜு என்று கொஞ்சுவது என்று எதையும் விரும்பாதவன் நான். குறிப்பாக பிரபலங்கள், ஊடகங்களில் வந்து, “என் வீட்லே, 5 பூனை , 2 டாபர்மேன் , 1 மாருதி (காரா , குரங்கா ?) வச்சிருக்கேன். எல்லாரும் ஒரு செல்லப்பிராணியாவது (புருஷனைத்தவிர) வளர்க்கனும். அதுகளுக்கு யார் அன்புகாட்டுவா ?.” என்று மேனகா காந்தி ஸ்டைலில் பேசுவதைக் கண்டால் எரிச்சல் தான் வரும். அதில் குறிப்பாக மேனகா, தூர்தர்ஷனின் ஒரு தொடரில் (விலங்குகளைப் பற்றி ஒரு விழிப்புணர்வு தொடர்) , சீன் விடுவதைப்பார்த்தால் பற்றிக்கொண்டு வரும். 20 நிமிடம் விலங்குகளைப்பற்றி பல நல்ல தகவல்களை சொல்லிவிட்டு, கடைசி பத்து நிமிடம் நேயர்களிடம் இருந்து வந்த கடிதங்களைப் படிப்பார். அதைப் படிக்கும் போது , அந்த நேயர் காப்பாற்றிய பிரணியின் முந்தைய நிலைப்பற்றி ஒரு முதலைக் கண்ணீர் விட்டுவிட்டு, பின்னர் அவருடைய செயலினை சிலாகித்துப்பேசுவார். மிகவும் போலித்தனமாக இருக்கும். அவர் மீது இருந்த வெறுப்பினாலேயே, என் தம்பி வீட்டில் நாய்க்குட்டி வளர்க்க வேண்டும் என்ற போது, அது நடுவீட்டிலே அசிங்கம் பண்ணிடும், அப்புறம் நீதான் அதை சுத்தம் செய்யவேண்டும் என்று கூறி முன்னொரு காலத்தில் ப்ரேய்ன் வாஷ் செய்து வைத்திருந்தேன். ஆனால் ஒரு மாதமாக என்னிடத்திலே ஒரு சிறு மாற்றம். விகடன் துணையெழுத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய இந்த கட்டுரையினை படித்த பிறகு எஸ்.ராமகிருஷ்ணன், தன் நண்பர் ஒருவரைப்பற்றியும் , அணில்களைப்பற்றியும், மிக நுட்பமாக, தனக்கே உரிய கூறுமுறையில் எழுதியிருந்தார். மிகவும் ரசித்த கட்டுரை (விவரணை ??) அது. (Updates : ஆனந்த விகடன் தளத்தில் இருந்து அந்த கட்டுரைக்கு சுட்டி கொடுக்க முயன்றேன் முடியவில்லை. மறுபடியும் முயற்சி செய்து பார்க்கிறேன்) .
எங்கள் வீட்டில் அழையாவிருந்தாளியாக ஒரு பூனை 2 வாரங்களுக்கு முன் வந்தது. இரவு சுமார் ஒன்பது மணி அளவிற்கு எங்கள் வீட்டு ஜன்னலில் வந்து அமர்ந்து மிக உரிமையோடு மியாவியது (!!!). என் தம்பிக்கு ஒரே குஷி, அதை தடவிக்கொடுத்துவிட்டு , வீட்டில் இருந்து எவர்சில்வர் கிண்ணத்தில் பால் கொண்டுவந்து வைத்தான். தலைவரும் நக்கி நக்கி உறிஞ்சி விட்டு ஒடிப்போயிட்டார். மறுகாலை பேப்பர் எடுப்பதற்காக கதவைத்திறந்தால் தலைவர், எங்கள் வீட்டு கால்மிதியில் ஜம்மென்று அனந்த சயனித்திருக்கிறார். தலையினை குப்புறமாக தொங்கப்போட்டுக் கொண்டு ஹாயாக படுத்திருந்தார். அதைப்பார்த்ததும், அருவருப்போ கோபமோ வரவில்லை, மாறாக சிரிப்புதான் வந்தது. பேப்பர் எடுத்துக்கொண்டு முன்னாலிருக்கும் இரும்புக் கதவினை சாத்தும் சத்ததில் தலைவர் எழுந்துகொண்டார். நானோ “ச்சூ ! போ.. போ” என்று கூற, ஒரு விநாடி என்னை பார்த்துவிட்டு, சோம்பேறித்தனத்துடன் மறுபடியும் சயனம். ச்சே பூனை கூட நம்மை மதிக்கமாட்டேங்குது, நம்மைப் பார்த்து பயப்படமாட்டேங்குதே என்று நொந்து கொண்டு உள்ளே சென்றேன். என் தம்பியிடம் சொன்னேன், ஆர்வமாக கிண்ணித்தில் பாலுடன், மியாவாத்மாவின் திருப்பள்ளியெழுச்சிக்கு சென்றான்.
இப்போது தலிவர், எங்க வீட்டில் உள்ள அனைவருக்கும் ஜிகிடி தோஸ்தாயிட்டார். என் அம்மாவோ, ” என்னடி (அது டியா..டாவான்னும் எனக்கு தெரியலே) .. என்ன வேணும்..உனக்கு பால் வேணுமா.. உள்ள வந்தே உதைவிழும்” என்ற ரேஞ்சுக்கு கொஞ்ச (பொம்பளைங்கல்லாம் இப்படித்தான் கொஞ்சுவாங்களா?? ) ஆரம்பித்துவிட்டார். என் தம்பியோ நான் விரும்பித்திண்ணும் ப்ரிட்டானியா டைகர் பிஸ்கட்டினை அதுக்கு போட ஆரம்பித்து விட்டான். என் தந்தை அலுவலகத்திற்கு தயாராகி வெளியே சென்று நிற்பார், உடனே நம்ம தலைவர், அப்பாவின் கால்கள் நடுவிலே சென்று தன் முதுகினை மெதுவாக தேய்த்துக்கொள்வார். என் அப்பாவும் அது தேய்க்கும் வரை நின்று விட்டு பிறகு செல்வார். நம்மகிட்ட தான் தலைவர் கொஞ்ச டிஸ்டன்ஸ் மெய்ண்டேய்ன் செய்கிறார். பரவாயில்லை. நானோ எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரையினைப் படித்துவிட்டு, எனக்குள் இருந்த அந்த வெறுப்பு எங்கே போனது என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.