ரீல் சுத்தலாம் வாங்க - Recently Watched Movies

சமீபத்தில் பார்த்த மான்ஸ்டர், அழகிய தீயே பற்றிய என் கருத்துக்கள்

மான்ஸ்டர் !!!

புள்ளி புள்ளியாக முகம் முழுவதும் கொஞ்சம் தேமல், கொஞ்சம் கருப்பும் கொஞ்சம் மஞ்சள் நிறமும் கலந்த கறையோடும், கோணல்மானலாக இருக்கும் பற்கள், கொஞ்சம் சதைப் போட்ட உருவம், கொஞ்சம் ஆண்மைக் கலந்த நடை மற்றும் ஆண் போன்ற பாவனைகள் என இருந்து தொடர் கொலை செய்யும் ஒரு விலைமாது, எய்லோவாக நடித்துள்ளார் சார்லீஸ் தேரோன். அவர்தான் படத்தின் உயிர் நாடி.

கதை என்று பார்க்கப் போனால், அவருக்கு ஒரு பெண் நட்பு கிட்டுகிறது. அந்த பெண்ணோடு தனியாக வாழ்கிறாள். எய்லோவிற்கு விலைமகள் தவிர வேறு வேலை எதுவும் கிடைக்காததால், அதைத் தொடர்ந்து செய்ய முயற்சிக்கிறார். ஒரு நாள் கசப்பான சம்பவம் நடக்கிறது, அதிலிருந்து தப்ப ஒரு கொலை செய்கிறார். பிறகு சந்தர்ப்பங்களால் பல கொலைகள் செய்து போலீஸில் பிடிபட்டு electrocute செய்யப்படுகிறாள்.

கொஞ்சம் மெதுவாக செல்கிறது படம். எய்லோ, அன்பு மறுக்கப்பட்ட சமுதாயத்தால் தான் அந்த நிலைமைக்குள்ளாகி இறக்கிறார், என்பதை நடுநிலைமையில் சொல்ல முயற்சிக்கிறார் இயக்குநர். ஆனால் நமக்கு அது புரிந்தாலும், அவளுடைய சில கொலைகளும் கொடூரங்களும், எய்லோவின் மீது பரிதாப்பட முடியாமல், அவளை வெறுக்கச்செய்கிறது. படத்தில் கடைசி பதினைந்து நிமிடங்கள் தான் உணர்ச்சிக் குவியலான தருணங்கள். சார்லீஸ் தேரோன், அசத்தியிருக்கிறார். படம் ஆரம்பித்த சில நேரத்திலேயே, அவரைப் பார்த்ததும் ஒரு வெறுப்பு வருகிறது. பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, பச்சாதாபம் வருவது போன்ற தருணத்தில், அவருடைய ஒரு செயலால் எரிச்சலும் கோபமும் பீறிட்டு எழுகிறது. அதுதான் சார்லீஸ் தேரோனின் வெற்றி என எண்ணுகிறேன்.

அழகிய தீயே !!!

என்னடா ரொம்ப ரொம்ப டீஸண்டான படம் என்றேல்லாம் சொல்கிறார்களே, அப்படி என்னத்தான் இருக்கிறது என தெரிந்து கொள்ள சென்றேன். படம் ஆரம்பித்து பத்தாவது நிமிடம் ரம்பா தொப்புளைக் காட்டிக் கொண்டு ரொம்ப அசிங்கமாக இல்லாமல் கொஞ்சம் அசிங்கமாக ஆடுகிறார். இது தேவையே இல்லை, இந்த பாடல் இல்லாமலேயே படம் நன்றாக வந்திருக்கும்.

படத்தில் ஒரு இடத்தில் கூட சிகரெட் பிடிக்கும் காட்சி கிடையாது. அவ்வளவு ஒழுக்கமான படம் என்று சொன்னார்கள். ஆனால் பிரகாஷ் ராஜ், ஹீரோ அவரது நண்பர்கள், ஹீரோயின் முன் ஒரு பார்ட்டியில் மது அருந்துகிறார்கள். ஏன் இந்த முரண்பாடோ. இதையும் தவிர்த்திருக்கலாம்.

பிறகு நாய்க்குட்டி என்று நினைத்துக் கொண்டு ஒரு விலைமாதுவின் வீட்டுக்கு போய், குட்டி என்று ஒரு ஐந்து நிமிடம் , so called காமெடி ஒன்று நடக்கிறது. இதையும் தவிர்த்திருக்கலாம்.

குற்றம் கண்டுபிடிக்காமல், மேற்கூறிய மூன்றினையும் தவிர்த்துப் பார்த்தால் படம் ரொம்பவே டீசண்டான படம். நாம் என்ற ஒரு மிக நல்ல படத்தினை எடுத்து, அது வந்ததற்கான சுவடே தெரியாததால், இந்தப் படத்தினை கொஞ்சம் அதிகமாகவே மார்க்கெடிங் செய்திருக்கிறார். என்ன செய்வது சுள்ளான், நோஞ்சான் கிட்டே போட்டி போடனுமே. கதைப்பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். ரொம்பவும் மிகைப்படுத்தாமல் ஒரு துணை இயக்குநரின் வாழ்க்கையினை படம் பிடித்துள்ளார் இந்த இயக்குநர்.

ஆனால் ஒன்று இந்த திரைப்படத்தின் இயக்குநர், ரொம்பவும் ரசித்து ரசித்து படத்தின் சில காட்சிகளை அமைத்திருக்கிறார். வசனமும் அதே போல் (அக்னி குண்டம், கறந்த பால், …. ). இரண்டு பாடல்கள் மட்டுமே மனதில் நிற்கிறது. மென்மையான சில வசனங்களும், மெலிதான நகைச்சுவை இழைந்தோடுவது தான் இந்த படத்தின் வெற்றி, சுவாரஸ்யம்.

ஆனால் ஒன்று சுள்ளானோடும், மச்சியோடும் ஏனைய பிற படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இது எத்தனையோ மேல். அதற்காக இதைப் பார்க்கலாம்.

நன்றி : வலைப்பூ


Date
August 24, 2004