அமிர்தசரஸ், சோளக்கருது, வாகா மற்றும் நாற்காலிகாரர்

சென்ற வாரம், ஒரு சுற்றுலாவிற்காக தில்லி மற்றும் அமிர்தசரஸ் நகரங்களுக்கு சென்றிருந்தேன். அமிர்தசரஸிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அட்டாரி-வாகா எல்லை. அந்தப் எல்லைப்பகுதியிலிருந்து லாஹூர் வெறும் இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கே தினமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டுக் கொடிகள், ஒரே சமயத்தில் காலையில் ஏற்றப்பட்டு, ஒரே சமயத்தில் மாலையில் இறக்கப் படுகிறது. அந்த எல்லையில் நடந்த சில கூத்துக்களும், என் அனுபவமும் இங்கே.

அதற்கு முன் ஒரு பீடிகை மற்றும் சுயதம்பட்டம். நாட்டுப்பற்று என்றால் தேசியகீதத்தினை நன்றாக தெரிந்துவைத்துக் கொள்வது, எந்த சூழ்நிலையிலும் நாட்டை விட்டுக்கொடுக்காமல் இருப்பது (தன் நாடு தவறு செய்திருந்தால் கூட) என்று என் நண்பர்கள் பலர் கூறுவார்கள். அதற்கு எதிர்வினையாக நானோ, தேசியகீதமும், பழம்பெருமைகளும் ஒருவன் அறியவேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை, செயலில் உருப்படியாக செய்து காட்டுவதே சிறந்தது என்று நான் வாதிடுவேன். இது அடிக்கடி நிகழும் எங்கள் விவாதங்களில் ஒன்று. சில சமயம் விவாதங்களில் என்னை ஒரு anti-nationalist என்றும், விசால பார்வை என்ற பெயரில் நாட்டுப்பற்று அற்றவன் என்றும் நண்பர்கள் என்னை குறை கூறுவார்கள். சரி விஷயத்திற்கு வருவோம்.

என் பெற்றோர்களோடு அமிர்தசரஸ் பொற்கோயிலை கண்டுவிட்டு, வாகா எல்லைக்கு மாலை சுமார் நான்கு மணியளவில் சென்றோம். கிரிக்கெட் மாட்ச் காணவந்த ரசிகர்கள் போல இந்திய கொடியுடன் அங்கே செம கும்பல். மாலை ஆறு மணியளவில் அங்கே நடக்கவிருக்கும் ஒரு parade க்காகத் தான் இவ்வளவு கூட்டம். ஐந்து மணியளவில் கதவை திறந்து அங்கிருந்த ஒரு பெரிய கேலரியில் அமர வைத்தனர். சுமார் ஆயிரத்தி ஐநூறு பேர் உட்காரும் அளவிற்கு, பெரிதாக இருந்தது.

ஒரு பெரிய இரும்புக் கதவு, அதனருகே ஒரு நுழைவாயில் போன்ற சின்னம். இதுதான் அந்த வாகா எல்லை. எல்லையின் மற்ற பக்கத்தில் மின்சாரம் பாய்கின்ற இரும்பு முள்வேலி நீண்டு இருக்கிறது. இந்திய கேலரியில் இருந்து பார்த்தால் பாகிஸ்தான் நுழைவாயிலும், அங்கே அருகே உள்ள ஒரு சிறிய தோட்டமும் தெரிகிறது. பாகிஸ்தான் பக்கமும் அதைப் போலவே ஒரு கேலரி, ஐநூறு பேர் அமரும் வசதியோடு இருந்தது. ஆனால் ஆண்களும் பெண்களும் தனித்தனி பகுதியில் அமர்ந்திருந்தனர்.

இந்திய கேலரியில் இரண்டு பெரிய ஸ்பீக்கர் வைத்து , பல தேசபக்தி பாடல்கள் hi-volumeல் ஒலித்துக் கொண்டிருந்தது. பலர் கைகளைத்தட்டிக் கொண்டு குழுவாக அதே பாடலைப் பாடிக்கொண்டிருந்தனர். இதுவரை எல்லாமே நன்றாக இருந்தது. அதுக்கப்பறம் தான் ஆரம்பித்தது கூத்து. பாகிஸ்தான் கேலரியில் இதை போன்ற ஒரு ஸ்பீக்கரோ எதுவும் இல்லை. அங்கே அமைதியாக அனைவரும் உட்கார்ந்துக் கொண்டிருந்தனர். இந்திய கேலரியில் ஸ்பீக்கர் அலறிக் கொண்டிருந்த அறையில் இருந்து ஒரு ஆள், கையில் மைக்கோடு வந்தார். உச்சஸ்தாயியில் ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத், சாரே ஜஹான்ஸே அச்சா, வந்தே மாதரம் என்று அவர் சொல்ல, இந்திய மக்களும் சொன்னார்கள். பிறகு பாடல் திரும்ப ஒலிக்கும். இது போல ஐந்து முறை நடந்தது. ஆறவது முறை அனைவரும் கத்தி முடிக்க, பாகிஸ்தான் பக்கதிலிருந்தும் மக்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கத்தினர் (அங்கே மைக் மற்றும் ஸ்பீக்கர் இல்லை). ஆனால் இங்கிருந்தோ மக்கள், உடனே அவர்களை கேரோ செய்வது போல் ஊஊஊ…ஹிஹிஹி என்று கூவினர். இதைப் போலும் ஒரு மூன்று முறை நடந்தது. என் அருகில் இருந்த சில இளைஞர்கள், முர்தாபாத்..முர்தாபாத்” என்றும் கூவினார்கள். நம் மக்கள் செய்தது கண்றாவியாக இருந்தது.

இது எல்லாம் அடங்கி ஒய்ந்த பின்னர் அந்த கொடியிறக்க நிகழ்ச்சி ஆரம்பித்தது. நம் இந்திய மேஜர் ஒரு, மைக்கில் சென்று எதோ ஒரு கமேன்டை உரக்க கத்தினார். (ந.முத்துசாமியின் நாற்காலிக்காரர் என்ற நாடகத்தில் ஒருவர் ராணுவத்தில் கட்டளையிடும் முறையினை கிண்டல் செய்யும் வகையில் பரே…….ட் தத்தக்….கா புஸ்கா என்று கத்திவிட்டு, மார்ச் ஃபாஸ்ட் செய்வார். இந்த சமயம் பார்த்து அந்த நாடகம் நியாபகத்தில் வந்து தொலைத்தது). பிறகு இரு நாட்டு வீரர்களும் காலை தலைவரைக்கும் நிமிர்த்தி, மார்ச் ஃபாஸ்ட் செய்து, எல்லைக் கதவுகளை திறப்பார்கள், இரு நாட்டு மேஜர்களும் (மேஜர் என்று தான் நினைக்கிறேன்) ஒரு சமிக்ஞைக்குப் பிறகு கைகுலுக்கி விட்டு, மேலும் சில ஃபார்மாலிட்டீஸ் முடிந்த பிறகு. ஒரே சமயத்தில் கொடியினை இறக்குவார்கள். பின்னர் இரு நாட்டு எல்லைக் கதவுகளும் மூடப்படும்.

எதற்காக இந்த சடங்கு என்று எனக்கு கொஞ்சமும் புரியவில்லை. இந்த கொடியிறக்கத்தினை பார்க்க வரும் மக்களினால் அங்கே சோளக்கருது, பொறிஉருண்டை, கோலா விற்கும் வியாபாரிகளுக்கும், டேக்ஸி ஓட்டுநர்களுக்கும் தான் லாபம். மற்றபடி அதன் மகத்துவம் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.

ஆனால் இது எல்லாம் முடிந்த பிறகு என்னை உருத்தியது, என் அருகில் இருந்த அந்த முர்தாபாத் இளைஞர்களும், கேரோ ஆசாமிகளும் தான். எதற்காக இன்னமும் நம் மக்கள், பாகிஸ்தான் மக்களை வெறுக்க வேண்டும். அரசியல்வாதிகளை வெறுப்பதில் வேண்டும் என்றால் அவரவர்களுக்கும் ஒரு நியாயம் இருக்கலாம். மக்களை வெறுப்பதற்கான காரணம் எனக்கு இன்னும் விளங்கவில்லை. நம் தலைமுறையினர் 1947 பிரிவினையினால் ஏற்பட்ட காயங்களை இன்னமும் சொறிந்துக் கொண்டு இருக்கிறார்களா, இல்லை ஒட்டு மொத்த பாகிஸ்தான் மக்களும் தான் காஷ்மீர் பிரச்சினைக்கு காரணம் என்று எண்ணுகிறார்களா?. எனக்கு தெரியவில்லை.


Date
September 11, 2004