அமிர்தசரஸில் சில “ஆத்மி”க்கள்
என்னுடைய ப்ராத்மிக் ஹிந்தி அறிவினையும், என் தம்பியின் ராஷ்ட்ரபாஷா அறிவினையும் நம்பி இரு ஆத்மாக்கள் அமிர்தசரஸ் வரை சென்று வரலாம் என்று ரிஸ்க் எடுத்தார்கள். என் தம்பியும் நானும் ஒரளவு ஹிந்தி பேத்தி அமிர்தசரஸ் வரை சமாளிச்சிட்டோம். அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே உள்ளே தங்குமறைக்கான அலுவலகத்தின் அருகே அனைவரும் தூக்கக் கலக்கத்தில் நின்று கொண்டிருந்தோம்.
அப்பாவோ, என் தம்பி மற்றும் என்னுடைய ஹிந்தி உதவி இல்லாமலேயே சமாளிக்கலாம் என்று அந்த அலுவலகத்தில் உள்ள ஒரு கவுண்ட்டருக்குச் சென்று தன் “யுனைட்டட் இந்தியா இன்ஷூரன்ஸ்” விசிட்டிங் கார்டினைக் காட்டி , “We want room” என்றார்.
ஆனால் அங்கே இருந்த சர்தார்ஜி, அதைப் பார்க்காமல், ஹிந்தியில் (பஞ்சாபியாக கூட இருந்திருக்கலாம்) எதோ சொன்னான்.
என் அப்பாவோ, “No. Hindi, only English”
சர்தார்ஜி, என்ன நினைத்தாரோ என்னவோ, உரத்த குரலில் “கித்னி ஆத்மி ?” என்றார்.
என் தந்தை ரொம்பவும் அறிவாளித்தனமாக, “No. I’m not from Army. I’m insurance”.
அங்கிருந்த இன்னொரு சர்தார்ஜியுடன் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தனர். பிறகு, ““கித்னி ஆத்மி ?” என்று கூறினார்.
என் தந்தை விடாக்கண்டன் , “No. Army, insurance, insurance”
ரெண்டு சர்தார்ஜிக்களும் ரொம்ப சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
தூக்கக் கலக்கத்தில் இருந்த நான் விழித்துக்கொண்டு, ஆகா அப்பா மானம் கப்பலேறுதே என்று அரக்க பரக்க சென்று. “ச்சார் ஆத்மி. கம்ரா ஹேனா ?”, என்று தத்துபித்தி சமாளித்தேன்.