ரிச்சர்ட் லிங்க்லேட்டர்

ரிச்சர்ட் லிங்க்லேட்டர் என்ற பெயர் ஸ்கூல் ஆஃப் ராக் படம் பார்த்த போது தான் எனக்கு அறிமுகம். ஜாக் ப்ளாக்கும் சில வாண்டுகளும் சேர்ந்து ராக் இசைக்குழு ஆரம்பிக்கும் கதையினை ஜாலியாக எடுத்திருந்தார். ஒரிரு பிங்க் ஃப்ளாய்ட், வீ வில் ராக் யூ தவிர வேறு ஏதும் தெரியாத ராக் இசை அறிவிலியான எனக்கு ராக் ஹிஸ்டரி, பங்க், சைக்கடெல்லிக், ஆன்க்கோர் ( அப்படீன்னா ஃப்ரெஞ்ச்சில் ஒன்ஸ்மோர் ) போன்ற பதங்களை உதிர்க்க மிக எளிமையாக அறிமுகம் செய்திருந்தார். மேலும் இவரோட பெயர் சென்ஸஸ் ஆஃப் சினிமாவில் இடம் பெற்றிருந்தது. இதில் வந்தால் பெரிய பருப்பான இயக்குநர் என்று கேள்விப்பட்டு, மற்ற படங்களை தரவிரக்கம் செய்ய ஆரம்பித்தேன். Before Sunrise - வியன்னாவில் காலை எட்டு மணிக்கு ஸ்டீஃபன் தேவாலயத்தில் ஆரம்பித்தால், ஸிஸ்ஸி அருங்காட்சியகத்தில் தங்கத்தால் ஆன ஜட்டி தவிர மற்றது எல்லாம் இருப்பதை வாய்பிளந்து ரசித்துவிட்டு, ஸ்பானிஷ் குதிரையேற்ற பள்ளியில் குதிரை சாணி போடும் காட்சிகளை அறுபது யூரோ கொடுத்து பார்த்துவிட்டு, மதியம் நான்கு யூரோவில் பீட்ஸா மற்றும் கோக் குடித்துவிட்டு, பொடிநடையாக அங்கிருக்கும் மற்ற சில கடியான அருங்காட்சியகத்திற்கு சென்று விட்டு, அருகே உள்ள மாளிகை முன் நின்று ஆர்க்குட் ஆல்பத்தில் போட சில படங்களை எடுத்துக்கொண்டு, அங்குள்ள கடைவீதிகளில் இந்தியன் ரெஸ்த்தோரந்தில் தால்-வாங்கினால்-சாதம்/சப்பாத்தி-இலவசம்” சாப்பிட்டுவிட்டு, வேகவேகமாக ரயிலேருவது தானே map-marking செய்யும் நமது வெளிநாட்டு சுற்றுலா பழக்கம்.

இதையெல்லாம் செய்யாமல், ரயிலில் சந்திக்கும் ஜேம்ஸ்-செலினா என்ற ஜோடி வியன்னாவில் ஒரு நாள் என்ன செய்கிறார்கள் என்பதை அழகாக காட்டியுள்ளார். நிஜ வாழ்க்கைக்கு மிகவும் அருகாமையில் இருக்கிறது இந்த திரைக்கதை. தனக்கு பிடித்தது, தனது பால்ய பருவம், தன் எண்ணங்கள் என இருவரும் சுவையாக பேசிக்கொண்டே இருப்பதை ஒரு voyeurஆக பார்க்கும்போது, ஏதாவது ஆங்கிலம் தெரிந்த ஐரோப்பா ஃபிகர் கிடைத்தால் இப்படித் தான் மடக்கனுமோ என்று தோன்றுகிறது (தமிழ்நாட்லயே ஒரு வழியும் காணோம் - மனசாட்சி). வெறும் உரையாடல்களை வைத்தே இவ்வளவு சுவாரஸ்யமாக படம் எடுக்கமுடியுமா என்று வியப்பாக இருக்கிறது. செலினாவாக வரும் ஜூலி டெல்ப்பி எளிமையாக ஆனால் கொள்ள்ள்ளை அழகாக இருக்கிறார். இறுதி க்ளிஷே: இரு நடிகர்களும் கதைமாந்தர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். லிங்க்லேட்டரின் மற்றோரு படமான Before Sunset அடுத்த வாரம் பார்க்கவேண்டிய பட்டியலில் முதலிடம். (தல சன்ரைஸ்ஸைவிட சன்செட் சூப்பர்ன்னு வேற சொல்லிட்டாரு)

அடுத்த முறை ஐரோப்பா செல்லும் போது ரயிலடிகளிலும், பூங்காக்களிலும் ஈருடல் ஒருமுகமாக இருக்கும் காட்சிகளைப் பார்த்தால் பொறாமை வராது, புன்னகை தான் பொறாமை மட்டும் வராது, புன்னகையும் தான்.

பின்குறிப்பு: இந்த படத்தில் வரும் காட்சி எந்த தமிழ் படத்தில் வந்துள்ளது என்று சரியாக பதில் கூறும் அதிர்ஷ்டசாலிகளுக்கு, கனவில் ஜூலி டெல்ப்பி வந்து அருள்பாலிப்பாராக !

Link


Date
May 14, 2008