March of the Penguins

சமீபகாலமாக விவரணை படங்கள் மீது எனக்கு காதல்.   அதைப்பற்றி எழுதலாம் என்று எண்ணம். எனக்கு மிகவும் பிடித்த, மனதை தைத்து நின்ற March of the Penguins”ல் துவங்குகிறேன். அண்டார்ட்டிக்காவில் பென்குவின்களோடு பென்குவின்களாக ஒன்பது மாதம் எலும்பை ஒடிக்கும் கடும்குளிரில் வாழ்ந்து படம்பிடித்துள்ளனர். நூற்றுக்கணக்கான் எம்ப்பரர் பென்குவின்கள் ஒரு இடத்தில் குவிந்து, அவைகள் தன்னுடைய துணையினை தேர்ந்தெடுத்து, குழந்தை ஈன்று, பிரிந்து செல்லும் ஒரு காதல் கதையினை அருமையாக பதிந்துள்ளனர்.

பருந்துகள் அண்டாத, பனிக்கட்டிகள் சீக்கிரம் உடையாத, கடலில் இருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் ஒரு சிறிய தீவில் அனைத்து பென்குவின்களும் கூடுகின்றன. ஆண்களும் பெண்களும் இரண்டு மாதம் தத்தம் துணையினை தேர்ந்தெடுத்து காதல் செய்து முட்டை போடுகின்றது. அந்த முட்டை பனியில் வெகுநேரம் விழுந்தால் உள்ளிருக்கும் கரு உறைந்து போகக்கூட்டும். அதை தன்னுடைய காலுக்கும் தொப்பைக்கும் நடுவில் வைத்து வெதுவெதுப்பாக வைத்திருக்கிறது பெண். முட்டை வந்தவுடன் மிகக் கவனமாக (பனியில் வெகுநேரம் விழுந்தால் உள்ளிருக்கும் கரு உறைந்துவிடும்), ஆணிடம் அதை ஒப்படைத்துவிட்டு இரை தேடி நூறு கிலோமீட்டர் தொலை பயணம் மேற்கொள்கிறது. அதுவரை கடுங்குளிரிலும், பனிப்புயலிலும் முட்டையினை உண்ணாவிரதம் செய்துகொண்டே (முட்டையினை தன் தொப்பைக்கும் காலுக்கும் நடுவில் சுமந்து வெகு தூரம் செல்ல ஏலாது) அடைகாத்துக் கொண்டிருக்கிறது ஆண்.

இரண்டு மாதம் கழித்து, மீன்களை தன் வயிற்றில் நிரப்பிக்கொண்டு, தன் கணவனையும் குழந்தையினையும் தேடிக்கொண்டு வரும் நூற்றுக்கணக்கான பெண்களை, அதனுடைய குரலினை வைத்தே கண்டுபிடித்துவிடுகிறது. அதற்குள் முட்டை பொறிந்து குட்டி பசியோடு தயாராக இருக்கிறது. தன் மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு தன் உண்ணாவிரதத்தை முடிக்க நூறு மைல் தாண்டி செல்கிறது ஆண்.

தன் வயிற்றில் இதுவரை தேக்கி வைத்திருந்த உணவினை தன் குட்டிக்கு தந்து, குளிரில் தன் குட்டியினை இழந்த கோபமான அம்மா பென்குவின்களிடமிருந்தும், இரைதேடி அலையும் பருந்துகளிடமிருந்தும் தன் குட்டியினை காப்பாற்றி, உண்ணாவிரதத்தினை முடித்துவிட்டு வரும் தந்தையினை அதனுடைய குரல் மூலம் அடையாளம் காட்டி, நன்றாக நடக்க ஆரம்பித்தவுடன் ராஜா, இனிமேல் பொழச்சுக்கவேண்டியது உன் சாமார்த்தியம் என்று தன்னுடைய பயணத்தை தொடரும் இந்த பென்குவின்களின் கதைக்கு முன்னாடி மற்ற கதையெல்லாம் சப்பை. தன்னுடைய பெருத்த உடலினை இருபக்கமும் ஆட்டிக்கொண்டும், சில சமயம் தன் தொப்பை மூலம் பனியில் சறுக்கிக் கொண்டும் செல்லும் இந்த எம்ப்பரர் பென்குவின்களின் அழகிற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் ஆஸ்கர் விருதினை கொடுக்கலாம்.


Comments (1)

Ravishankar 16 years ago · 0 Likes

அட இன்னிக்குத் தான் இந்தப் படம் பார்த்தேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுங்க வாழ்க்கையைப் பார்த்தா நாம வாழ்றதெல்லாம் ஒரு வாழ்க்கையான்னு போயிடுது ! உங்க tweetஐப் பார்துத Of Penguins and Menம் பார்த்தேன். breathtaking !

நிறைய படங்களைத் தேடிப் பார்கிறீங்க என்பதால் படத்தை நுணுக்கமா அலசுவீங்கன்னு பார்த்தேன். கதை மட்டும் சொல்லி விட்டுட்டீங்க. ஒரு வேளை, மனசைத் தொடுற படங்களைப் பத்தி ரொம்பப் பேச மனசு வருவதில்லையோ?

இந்தப் படம் பற்றிய இன்னொரு அழகான விவரிப்பு - http://anjalisplace.wordpress.com/2006/09/10/march-of-the-penguins/

உங்களுக்குப் பிடிக்கக் கூடிய இன்னொரு விவரணப் படம் - http://en.wikipedia.org/wiki/Story_of_the_Weeping_Camel

** நன்றாக எழுதிய பல தமிழ் வலைப்பதிவர்கள் காணாமல் போய் காற்று வாங்கிக் கொண்டிருந்தது. நீங்கள் மீண்டும் வந்து தொடர்ந்து எழுதத் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி. ஆனால், முன்பு இருந்து எழுத்தோட்டத்தைக் காணாதது போல் இருக்கிறது :( சரி, ஒன்னு இரண்டு இடுகைகள்ல விட்ட நடையைப் பிடிச்சிடுவீங்கன்னு நினைக்கிறேன்


Date
May 5, 2008