Performance Appraisal
நான் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கும் எனது பொறியியல் கல்லூரிக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. எங்கள் கல்லூரியில், அஸெஸ்மெண்ட் கமிட்டி ஏதாவது வந்தால் போதும். கல்லூரி ஜொலிக்க ஆரம்பித்துவிடும். புது சுண்ணாம்புப் பூச்சு, மெஸ்ஸில் அறுசுவை நடராஜன் சாப்பாடு என்று அலங்காரமாகிவிடும். அதைப் போலவே, எங்கள் அலுவலகத்தில் வெளிநாட்டு க்ளையண்ட் யாராவது வந்தால் போதும், பூத் பங்களா போல் இருக்கும் எங்களது ஒயிட்ஸ் ரோடு அலுவலகம் அசத்தலாகிவிடும். சிவப்பு கம்பளமென்ன, பூந்தொட்டிகளில் ஒரு வார வாடகைக்கு எடுத்துவந்த அலங்கார செடிகள் என்ன, ஷூ பாலிஷ் போடும் மெஷின் என்ன, எங்களுடைய மேஜைகளுக்கு திடீரென வந்த சுத்தம் தான் என்ன. அப்பப்பா.
அதைப்போல இன்னொன்று தேர்வு. செமஸ்டர் தேர்வு நெருங்கி வந்தால் போதும். அப்போது தான் சிலபஸ் புரட்ட ஆரம்பித்து, எதை படிக்காமல் விடலாம் என்று முதலில் யோசித்து, எதைப் படிக்க வேண்டுமோ அதை படிக்காமல், முன்பே படித்தவனிடம் கொஞ்சம் கதை கேட்டு, தேர்வில் போய் hints develop செய்து மார்க் வாங்கிவிடலாம். இந்த ( 1 , 2 ) இரண்டு பேர்தான் நான் எழுதும் தேர்வுகளின் கதையாசிரியர்கள்.
இந்த தேர்வினைப் போலவே, அலுவலகங்களுக்கு என்ன என்று தேடினால், பொதுவாக டிசம்பர் மாதங்களில் நடக்கும் performance appraisal. டிசம்பர் நெருங்கும் நேரம் வந்தாலே போதும். பிரமோஷன் கிடைக்க/எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எல்லா team leadersக்கும், project leadersக்கும் projectன் மேல், அதில் உள்ள மக்களின் மேல் ஒரு அளவுகடந்த அன்பு வழிய ஆரம்பித்துவிடும். அடிக்கடி மீட்டிங் போட்டு team building என்ற பேரில் கடியை போடுவார்கள். ஊக்கமளக்கிற வகையில் பேசுகிறேன் என்று கூறி தூக்கம் வரவைப்பார்கள் (ஆகா, கவித கொட்ட ஆரம்பிச்சுடுச்சே…த்ஸு..த்ஸு). Projectன் best practices எல்லாம் exhibit செய்ய வேண்டும் என்று சொல்லி மணிக்கணக்கில் மைக்ரோஸாஃப்ட் ஆஃபிஸில் வேலையைக் கொடுப்பார்கள். மற்ற leadersகளிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக் காட்ட பல கிலோபைட் கணக்கில் ப்ரெஸெண்டேஷன்களையும், டாக்குமெண்ட்களையும் அடித்து தள்ளுவார்கள்.
சரி நான் என் மேட்டருக்கு வரேன். இந்த performance appraisal , in spirit ஒரு மிக நல்ல concept. அதை ஒழுங்காக செயல்படுத்தினால், நம்மைப் பற்றி ஒரு நல்ல அகத்தாய்வினையும் செய்ய முடியும், திறமைகளை வளர்த்து சீக்கிரம் முன்னேறவும் முடியும்.
நான் இந்த வருட ஆரம்பத்தில், ஒரு டாக்குமெண்ட்டில் நான் பார்த்த திரைப்படங்கள், நாடகங்கள், படித்த புத்தகங்கள் பற்றி குறிப்பு எடுப்பதை ஒரு வழமையாகக் கொண்டிருந்தேன். ஆக நான் பார்த்த அந்த திரைப்படங்களினைப் பற்றிய ஒரு பார்வைதான் இது. (இதுக்குத் தான் இவ்ளோ பில்டப்பு)
இந்த வருடம், இன்று வரை சரியாக அறுபது திரைப்படங்களினைப் பார்த்திருக்கிறேன். ஒரு திரைப்படத்திற்கு சராசரியாக நாற்பது ரூபாய் என்று வைத்துக் கொண்டால் கிட்டத்திட்ட 2500 ரூபாயினை, என் ஒரு மாத சம்பளத்தின் ஏழில் ஒரு பகுதியினை இதற்காகவே செலவு செய்திருக்கிறேன்.
இந்த வருடம் நான் பார்த்ததிலே எனக்கு மிகவும் பிடித்த படங்கள் :
- Casablanca - இதற்கான காரணம்
- Raging Bull - ராபர்ட் டி நிரோவின் பிரமாதமான நடிப்பு, Martin Scorcese வின் இயக்கம்
- The Insider - உண்மைக் கதை, ரஸ்ஸல் க்ரொவ் மற்றும் அல் பசினொவின் நடிப்பு
- The Messenger - ழான் எனப்படும் Joan of Arc பற்றிய கதை
- Midnight Cowboy - ராபர்ட் டி நிரோ மற்றும் ஜான் வாய்ட்டின் நடிப்பு
- The Last Samurai - சமுராய்கள் பற்றிய கதை மற்றும் டாம் க்ரூஸ் மற்றும் கென் வாட்டனபேவின் நடிப்பு
- Passion of the Christ - தெரிந்த கதைதான் என்றாலும் படமாக்கிய விதம் எனக்கு பிடித்திருந்தது
- Lock Stock and Two Smoking Barrels - டாரண்டினோ பாணியில் சொல்லப்பட்ட சில தாதாக்களின் கதை
- Wonderboys - மைக்கல் டக்ளஸ் மற்றும் டாபி மெகையர் இருவரின் அலட்டலில்லாத நடிப்பு, தெளிவான மற்றும் எளிமையான திரைக்கதை
- Scarface - தலைவர் அல் பசினோ தான் காரணம்
- Paycheck - நல்ல த்ரில்லர் மற்றும் ஒரு Sci-fi
- Finding Nemo & Shrek 2 - காரணமே வேண்டாம், இரண்டு முறை பார்த்தாலும் அலுக்காது
- Morning Raga - நல்ல கதை, ஷபனாவின் நடிப்பு, மணி ஷர்மா மற்றும் அமித் ஹேரியின் அற்புதமான இசை
- விருமாண்டி - வித்தியாசமான கதை சொல்லும் பாணி (மோசமான கிளைமேக்ஸ் என்றாலும் கூட), இளையராஜாவின் இசை, கமலின் இயக்கம்.
- ஆய்த எழுத்து - மாதவன், பாரதிராஜா மற்றும் மீரா ஜாஸ்மீனின் நடிப்பு, எனக்கு மிகவும் பிடித்த கதை, கொஞ்சம் வித்தியாசமான திரைக்கதை
- 7/G ரெயின்போ காலனி - (ரொம்ப சூப்பரான கதை இல்லையென்றாலும்) நல்ல திரைக்கதை, யுவன் ஷங்கர் ராஜாவின் அசத்தலான இசை
- கனவு மெய்ப்பட வேண்டும் - பாராட்டப் படவேண்டிய படம், நல்ல கதை, மகேஷின் இசை, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மோகனசுந்தரம் கதாபாத்திரம்
- கில்லி - பாப்கார்ன் கோக்கோடு சென்று மூளையினை உபயோகிக்காமல் அனுபவிக்க வேண்டிய மசாலா படம்
- வசூல்ராஜா - முன்னாபாய் பார்க்கவில்லை அதனால் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது
- த்வீபா (Dweepa - Kannada) - கிரீஷ் காசர்வள்ளியின் படம் இது. சௌந்தர்யாவின் அருமையான நடிப்பும், கிரீஷின் திரைக்கதை மற்றும் இயக்கம்
- தேவ் - ஓம் பூரி, அமிதாப்பின் நடிப்பு, கோவிந்த் நிஹ்லானியின் “அனல் பறக்கும்” வசனம் மற்றும் இயக்கம்
- லக்ஷயா & நாச் - சிம்பிளான கதை ஆனால் சொல்லப்பட்ட விதம் பிடித்திருந்தது
- காக்கி - சூப்பர் மசாலா
ஒரு ஃப்ரேமாக வெறுத்து வெறுத்து பார்த்த படங்கள்:
- Gothika - தலைவலி
- ஜெய் - கண்றாவி
- மன்மதன் - நினைப்புதான்,குப்பையிலும் கடைந்து எடுத்த குப்பை. வித்தியாசமாம், மண்ணாங்கட்டி.
- எங்கள் அண்ணா - பாதியிலே ஓடிவந்துட்டோம்
- ருத்ராக்ஷ் - கொடுமைடா சாமி
சில படங்கள் மற்றவர்கள் சூப்பர் என்றார்கள், ஆனால் என் மனதில் அவ்வளவாக ஒட்டவில்லை. அவை (Sanjuro , The Guns of Navarone, Monster, Troy, Mary Poppins, ஆட்டோகிராஃப்)
மற்றபடி காசையும் வீணாக்கியோ அல்லது தூக்கத்தை கெடுத்தோ பார்த்தவை (Veer Zaara, Chameli, அருள், M.குமரன், எதிரி, செல்லமே, பேரழகன் Once upon a time in Mexico, Spiderman 2, ……)
இதைப்போல் கண்டமேனிக்கு படம் பார்த்து வைத்திருக்கிறேன் நான். பொதுவாக தீபாவளி வந்தால் இப்படித்தான் கண்டபடி பலகாரம் தின்றுவிட்டு மலங்க மலங்க முழிக்கும் போது, பாட்டி கருப்பு நிறத்தில் குமட்டிக் கொண்டு வரவைக்கும் ஒரு லேகியத்தினை வாயில் திணித்து வயிற்றை சரி செய்வாள்.
அந்த வகையில் கன்னாபின்னாவென படம் பார்த்து வைத்திருக்கிறேன். அதிர்ஷ்ட வசமாக வெங்கட் சாமிநாதனின் “திரை உலகில்” என்ற லேகியத்தினையும் தின்று விட்டேன். அடுத்த பதிவில் என் வாசிப்பு அனுபவத்தினையும், இந்த performance appraisal மூலம் வந்த முடிவினையும் அடுத்த பதிவில் எழுதுகின்றேன்.