கேஸப்ளாங்கா
நான், இந்த வாரம் ஒரு நல்ல ஆங்கிலப் படத்தினை கண்டேன். படம் கேஸப்ளாங்கா (Casablanca). இதுவரை வந்த ஆங்கிலப் படங்களில் உள்ள சிறந்த வசனங்கள், என்ற ஒரு ஃபார்வார்ட் அஞ்சலில் தான் கேஸப்ளாங்காவினைப் பற்றி அறிந்திருந்தேன். பாலாஜி (பி.பி) வலைப்பூவில் அதைப் பற்றி எழுதியதைப் பார்த்து இன்னும் ஆர்வம் அதிகரித்தது. பிறகு இணையத்தில் மேய்ந்ததில், பல தகவல்கள் கிடைத்தன. இதைப் பற்றி எங்கோ “Best love story ever made on the big screen” என்று படித்ததாகவும் ஒரு ஞாபகம்.
1942ல் வெளிவந்தபடம் என்பதால், “கண்ணே உன்னைக்காண நான் ஓடோடி வந்தேன். உந்தன் மலர்விழி பார்வை என் மேல் விழாதா”, என்று நாடகத்தன்மையுடன் கொஞ்சம் exaggeration ஆக இருக்கும், என நினைத்தேன். ஆனால் அந்த திரைப்படமோ மிக யதார்த்தமாகவும், அழகாகவும், முக்கியமாக நல்ல நகைச்சுவையோடும், இத்தனை நாள் இதைப்பற்றி அறியாத என் சினிமா அறிவை எள்ளிநகையாட வைத்தது.
ரிச்சர்ட் (ஹம்ஃப்ரி போகர்ட்) என்கிற , கொள்கை பிடிப்புள்ள (போராளியும் கூட) , மனிதன் பாரிஸில் இல்ஸா (இங்க்ரிட் பெர்க்மன்) என்ற பெண்ணிடம் காதல் வயப்படுகிறான். இரண்டாம் உலகப்போரில் பாரிஸ், நாஜியின் பிடிக்குள் வருகிறது. அங்கிருந்து தப்பிக்க இருவரும் முடிவுசெய்கின்றனர். பாரிஸில் இருந்து தப்பித்து வேறு நாட்டிற்கு ரயிலில் பயணம் செய்ய முடிவுசெய்கின்றனர். ரிச்சர்ட் ரயில் நிலையத்தில் அவளுக்காக காத்துக்கொண்டிருக்கிறான், ஆனால் அவள் வரவில்லை. மிகுந்த ஏமாற்றத்துடன் அவனும், அவனுடைய நண்பன் சாம், இருவரும் பாரிஸிலிருந்து தப்பித்து செல்கின்றனர். பின்னர் மொரொக்கோவில் உள்ள கேஸப்ளாங்காவில் ஒரு கஃபே ஒன்றினை நடத்திக் கொண்டிருக்கிறான். ரொம்ப நாள் கழித்து , தன்னுடைய கஃபேயில் தற்செயலாக இல்ஸாவினை சந்திக்கிறான். இல்ஸா, தன்னுடைய போராளி கணவன் விக்டருடன், ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டு இருக்கிறாள். ரிச்சர்டுக்கு இல்ஸாவின் மீது கடும்கோபம், ஆனால் இல்ஸா இன்னமும் ரிச்சர்டினை காதலிப்பதாக சொல்கிறாள். மேலும் ரிச்சர்ட் அங்கு இருப்பது தெரிந்தால், கண்டிப்பாக வந்திருக்க மாட்டேன் என்றும் சொல்கிறாள். இறுதியில் ரிச்சர்ட், இல்ஸா, விக்டர், எப்படி சிக்கலில் இருந்து விடுபடுகிறார்கள் என்பதுதான் கதை.
படத்தில் மிகவும் பிடித்தது ரிச்சர்ட் மற்றும் இல்ஸாவின் நடிப்பு. கொஞ்சமும் மிகைப்படுத்தாமல், இப்போது உள்ள நடிகர்களின் யதார்த்தமான நடிப்பினை போல மிகவும் இயல்பாக இருந்தது. இப்படத்தின் ஒளி அமைப்பும், படமாக்கியவிதமும் அருமை. வசனங்கள் கேட்கவே வேண்டாம். நகைச்சுவை மட்டுமல்லாமல் காதல் மற்றும் ஏனைய காட்சிகளிலும், மிக இயல்பாகவும் இருந்தது.
” Kiss me as if it were the last time ” என்று சொல்வதற்கு முன்னால் பெர்க்மன் காட்டும் முகபாவங்கள். காதலன் பாரிஸை விட்டு போகின்றான். ஆனால் தான் இறந்துவிட்டதாக கருதிய, தன் கணவன், குற்றுயிராக ஊர் எல்லையில் துடித்துக்கொண்டிருப்பதாக செய்தி வருகிறது. இதை நினைக்கும் போது வந்த கண்ணீரை, போகர்ட் பார்த்தவுடன் அவருடைய தோளில் முகம் புதைத்துகொண்டு சமாளிப்பார்.
“Play it once, Sam, for old times’ sake” என்று பெர்க்மன் கூறுவார். சாம் பியானோ வாசிக்கும் போது பெர்க்மேன் அதை முதலில் புன்னகையுடன் பார்ப்பார். இரண்டு அல்லது மூன்று நொடிகளில், அவருடைய பழைய காதல் நினைவுகள் வந்ததும் கண்ணில் நீர் கொஞ்சமாக பனிக்கும். போகர்ட் அங்கே வந்து “சாம், இதை வாசிக்காதேன்னு எவ்ளோ தடவை சொல்லிருக்கேன்” என்று கோபமாக சொல்வார். சாம், பெர்க்மன் இருப்பதை ஜாடையால் காட்டுவார். பெர்க்மனை பார்த்ததும் போகர்ட் திக் என்று நிற்பார். அப்போது போகர்ட்டின் நடிப்பு அருமை. கேமராவும், லைட் எஃபெக்கடும் சூப்பர். பெர்க்மன் , சான்ஸே இல்லை. கொள்ளை அழகு. மிகவும் எளிமையான, பாந்தமான முகம், இவருக்காகவே போன வாரம் இருமுறை இந்த திரைப்படத்தினை பார்த்தேன். இதை இன்னும் அழகாக பிபி இங்கே சொல்லியிருப்பார். (இவர் 20ஆம் நூற்றாண்டின் அழகான பெண்கள் பட்டியலில் இடம் பெறவில்லையாம். என்ன விளையாட்டு !!!!)
“I stick my neck out for nobody” என்று நாமும் சொல்ல நினைக்கின்ற வசனத்தினை ஒரு இறுகிய முகபாவத்துடனும், “Here’s looking at you, kid” என்று ஒரு தீவிர காதலனாக , ஒரு லயத்துடன் சொல்லும் போகர்ட் simply superb.
ஜெர்மன் மேஜர் இறந்தவுடன், “Round up the usual suspects” என்றும், “It’s a little game we play. They put it on the bill. I tear up the bill. It is very convenient” சொல்லும் ஃப்ரெஞ்ச் கேப்டன் கிச்சுகிச்சு மூட்டுகின்றார்.
அமெரிக்கா செல்ல நினைக்கும் இரு வயதான இத்தாலிய தம்பதிகள், அங்கே சுளுவாக இருக்கும் என்பதால் ஆங்கிலம் கற்றுகொள்கின்றனர். அமெரிக்காவுக்கான விசா (எக்ஸிட் பாஸ்) கிடைத்ததும், ரிச்சர்டின் கஃபேயில் உள்ள கார்லிடம் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த இத்தாலிய கணவன், தன் மனைவியிடம் ஆங்கிலத்தில் மணி என்ன என்று கேட்கிறான்.அதற்கு கணவன், “How watch ?” என்கிறான். மனைவியோ, “Oh..ten watch” என்கிறாள். கணவன் அதற்கு “That much” என்று பதிலளிக்கிறார். கார்ல் நக்கலாக , “நீங்க அமெரிக்காவுல பொழச்சுப்பீங்க” என்று சொல்லிவிட்டு என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிறார். இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த படத்தினை அனைவரும் மிகச்சிறந்த காதல் திரைப்படம் என்று பில்டப் கொடுத்தனர். ஆனால் எனக்கு அப்படி தெரியவில்லை, ஒரு வேளை அந்த romance quotient எனக்கு சைபர் என்பதால் அப்படி தோன்றியிருக்கலாம். காதலைக் கொச்சைப் படுத்தாமல், கதாபாத்திரத்துக்காக கதையினை சமரசம் செய்யாமல், கருப்பு வெள்ளையில் ஒரு கவிதையினைப் போல திரைக்கதையினை சொல்லியதும், இயல்பு பிறழாமல் (நகைச்)சுவையாகவும் சொல்லியதால் இந்தப் படம் என் மனதில் நீண்ட நாட்கள் தேங்கியிருக்கும். இங்க்ரிட் பெர்க்மனின் அழகுக்காகவும், ஹம்ஃப்ரி போகர்ட்டின் dialogue delivery க்காகவும் இப்படத்தினை இன்னும் இருமுறைகூட பார்க்கலாம்.