கலங்கப் போவது யாரு…..
நம் உடலின் குண்டலினி சக்தியினை மூலாதாரத்திலிருந்து ஆக்கினைக்கு எழுப்பிவிட முடியும், காலை ஒன்பது மணிக்கு டூ-வீலரில் மத்திய கைலாஷில் இருந்து டைடல் பார்க்குக்கு பத்து நிமிடத்தில் கூட போய்விட முடியும், ஏன் நம்ம முருகன் இட்லி கடையில் போனவுடனேயே உட்கார இடம் கிடைத்தாலும் கிடைத்துவிடும், ஆனால் ப்ளஸ் டூ மாணவர்களுக்கான பொறியியல் கவுன்ஸிலிங் மட்டும் எப்போது நடக்கும் என்று யாராலும் கூற இயலாது. இந்த வருட +2 முடித்த மாணவர்களின், இப்போதைய நிலை, அதுவும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு மாணவர்களின் நிலை படுமோசம். கவுன்சலிங் பற்றி clueless ஆக இருக்கிறார்கள்.
இதனுடைய பின்புலத் தகவல்களை ஒரு நடை பார்த்துவிடுவோம்.
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல்/மருத்துவக் கல்லூரிகளுக்கு TNPCEE மதிப்பெண்கள் மிக அவசியமானத் தேவை என்பது நீங்கள் எல்லோரும் அறிந்ததே. சென்ற இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழ்நாட்டில் இருந்த இருநூற்றுச் சொச்ச பொறியியல் கல்லூரிகளுக்கு, TNPCEE தேர்வு ஒன்றே போதுமானதாக இருந்தது. நமது பொறியியல் கல்லூரிகளின், பரிணாம வளர்ச்சியின் காரணமாகவும், வியாபாரத்தை நன்றாக வளர்த்துக் கொள்ளவும், நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களாக (deemed university) மாறத்துவங்கின. அதாவது “எங்க கடையில் பொறியியல் மட்டும் அல்ல, கலை, அறிவியல், ஜோதிடவியல் என்று சகலைத்தையும் வைத்திருக்கிறோம். எங்களுக்கு எந்த பல்கலைக்கழகததிலும் affiliation கிடையாது. ஆகையால் TNPCEE என்ற மோடி வித்தையெல்லாம் வேலைக்கு ஆகாது, ஐநூறு ரூபாய் கொடுத்து அப்ளிகேஷன் வாங்குங்க, அதுக்கப்பறம் இரண்டரையோ, மூன்றோ கொடுத்து கல்லூரியில் சேருங்க, சேருங்க, சேர்ந்துகிட்டே இருங்க” என்ற ரீதியில் வியாபாரம் சூடாகப் போய் கொண்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நம் மத்திய அரசு, AIEEE என்ற ஒரு தேர்வினைக் கொண்டுவந்து, நிகர்நிலைப் பல்கலைகழகங்கள் AIEEE மதிப்பெண்கள் வைத்துதான் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று போராடி, ஒரு வழியாக நடைமுறைப்படுத்தியது.
ஆனால் இந்த வருடம் நடந்த தமிழ்நாட்டில் நடந்த குளறுபடிகள் கணக்கில் அடங்கா. இதைத் தவிர BITS, Pilani குழப்பம் வேறு. BITS, Pilani என்ற கல்லூரி, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாணவர்களுக்காக ராஜஸ்தானில் பிர்லா கட்டியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கல்லூரியில் அட்மிஷன் வாங்க ஒருவர் செய்யவேண்டியது ரொம்ப சிம்பிள். ப்ளஸ் டூ தேர்வில் 1220க்கு 1160 மேல் எடுத்தால் மட்டும் போதுமானது. பிலானியில் படிக்கும் கனவோடு, தேர்வுக்காக நன்றாக தட்டி, தேர்வில் மிக நன்றாக கொட்டி வைத்திருந்தவர்களின் கனவில் இந்த வருடம் மண் விழுந்தது. ராஜஸ்தான் நீதிமன்றம், பிலானியில் AIEEE வழியாக தான் அட்மிஷன் செய்ய வேண்டும் என்று ஒரு ஆணை பிறப்பித்தது. இரண்டு வாரம் மாணவர்கள் திண்டாடிய பிறகு, ராஜஸ்தான் நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு. அதன் முடிவாக, இந்த வருடம் AIEEE வேண்டாம், எப்போதும் போல அட்மிஷன் நடத்துங்கள், அடுத்த வருடம் பார்ப்போம் என்று தீர்ப்பு வந்தது.
முதலில் TNPCEE மதிப்பெண்கள் குழப்பம். சில கேள்விகள் தவறு, அதற்கு ஏற்றார் போல் விடைகளுக்கான மதிப்பெண்களை சரியாக வழங்கவில்லை என்று ஒரு வழக்கு. இந்த வழக்கு தொடுக்கும் முன்பே TNPCEE rank வெளிவந்தது. வழக்கின் தீர்ப்பின் காரணமாக மதிப்பெண்கள், மறுகணிப்பு செய்யப்பட்டது. இந்த மறுகணிப்பால், மாணவர்களின் பொறியியல் ராங்க் அதிகமாக மாறவில்லை, மருத்துவ அட்மிஷனக்காக காத்திருந்த மாணவர்களுக்கான ராங்க் தாறுமாறாக மாறியது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் விசாரணை எல்லாம் முடிந்து தீர்ப்பு இன்னும் வரவில்லை.
இரண்டாவதாக, மறுமுறை தேர்வெழுதும் மாணவர்கள் வழக்கு. எப்போதுமே, மருத்துவ அட்மிஷனில், சுமார் 50% மறுதேர்வு எழுதும் மாணாக்கர்கள் தான் சீட் கிடைக்கும். ஆனால் இந்த வருடம், மறுதேர்வு எழுதியவர்கள் மருத்துவ கவுன்சிலிங்கில் அனுமதிக்க கூடாது என்று வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் கொடுமை என்னவென்றால், இந்த வழக்கு மருத்துவ கவுன்சிலிங் முடிந்த பிறகு தொடுக்கப்பட்டது. ஆகையால் கோர்ட், மறுதேர்வு எழுதியவர்களுக்கு மட்டும் அவர்களுடைய அட்மிஷனுக்கு ஒரு stay கொண்டுவந்தது. இதை எதிர்த்து, இரண்டு மறுதேர்வு எழுதிய மாணவிகள், வக்கீல்கள் யாரும் இல்லாமல், நீதிமன்றத்தில் அவர்களுடைய நிலைமையை தெளிவாக எடுத்துவைத்தனர். அவர்கள் பக்கம் இருந்த நியாயத்தை உணர்ந்து நீதிமன்றம் வழக்கை மறுவிசாரணை செய்து கொண்டிருக்கிறது.
இந்த மருத்துவ கவுன்சிலிங்கில் உள்ள குளறுபடியால், அது மறுமுறை கூட நடக்கலாமோ என்ற காரணத்தாலோ, அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கவுன்சிலிங்கை காலவரை எதுவும் சொல்லாமல் ஒத்திவைத்தது. இன்று நாள் வரை அதன் நிலை என்னவென்று யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.
மூன்றாவது, பிரச்சினை. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் management seat என்ற quota உண்டு. ஒரு பொறியியல் கல்லூரியில் 100 காலியிடம் இருந்தால், 50 காலியிடத்தை அண்ணா பல்கலைகழகம் நிரப்பும். மீதி 50 காலியிடங்களை அன்றைய சந்தை நிலவரப்படி எவ்வளவு ரேட்டோ, அதை வாங்கிக்கொண்டு கல்லூரி நிர்வாகமே காலியிடத்தை நிரப்பிக் கொள்ளும். தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைந்த மாணவர்கள், அல்லது கவுன்சிலிங்கில் கிடைக்கா விட்டாலும் பராவாயில்லை அந்த ஒரு கல்லூரியில் தான் படிப்பேன் என்ற கொள்கைப்பிடிப்பு உடையவர்கள், இரண்டு முதல் ஐந்து லகரம் வரை capitation fee கொடுத்து management quotaவில் சேருவார்கள். அவர்கள் கனவிலும் இந்த வருடம் மண் விழுந்தது.
Management Quota விற்கு TNPCEE நுழைவுத்தேர்வு நடத்தி அவர்களுக்கும் தனி கவுன்சிலிங் வைக்கவேண்டும் என்று அரசு பணித்தது. அதை எதிர்த்து சுயநிதி பொறியியல் கல்லூரி வசூல்ராஜாக்கள் வழக்கு தொடர்ந்தனர். கடைசியில் TNPCEE மதிப்பெண்களை எல்லாம் நாங்கள் எடுத்துக் கொள்ள முடியாது, நாங்கள் தனியாக ஒரு நுழைவுத்தேர்வு நடத்தி அதன் வழியாக நியாயமாக அட்மிஷன் செய்வோம் என்று வசூல்ராஜாக்கள் சங்கம் கூறியது. வியாபாரிகள் தனித்தேர்வு வைத்தாலும் கவுன்சிலிங் வைத்து (capitation fee இல்லாமல்) அட்மிஷன் செய்யவேண்டும் என்று ஒரு வழக்கு போட்டனர். அது முடியாது (அப்புறம் இந்த வருட பிஸினஸ் பாழாய் போய்விடுமே) என்று வியாபாரிகள் வாதாடிக்கொண்டு இருக்கின்றனர்.
வினாத்தாள் குழப்பம் செய்த அண்ணா பல்கலைகழகத்தை குறை சொல்வதா, தீர்ப்பு வழங்குவதில் மெத்தனம் காட்டும் நீதிமன்றத்தை குறை சொல்வதா, நம் கல்லூரி வியாபாரத்தை மேம்படுத்த வேண்டும் விரிவாக்க வேண்டும் என்ற strategyயினை வைத்திருக்கும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சங்கத்தை குறை கூறுவதா. ஒரு மண்ணும் தெரியலை.