‘மிர்ச்சி’ சுசித்ராவும் எருமையும்
இன்று காலையில் நம்ம ரேடியோ மிர்ச்சியில், சுசித்ரா இந்திய சமுதாயத்திற்கு சேவை செய்யும் விதமாக நேயர்களிடம் ஒரு கேள்வி கேட்டார். (அங்கங்கே ஒருமாதிரி இழுத்துக்கொண்டும், சத்தமாகவும், மிதமிஞ்சிய சந்தோஷத்துடன், கொஞ்சம் சரளமாகவும் படிக்கவும்…சுருக்கமாக சொன்னால் ‘மிர்ச்சி சுச்சியினைப்’ போல் படிக்கவும்)
“நம்ம லல்லு பிரசாத் யாதவ், ரயில்வே மினிஸ்டர் ஆனாதக்ப்ப்பறம் பல அதிரடி திட்டம் செஞ்சிருக்காருங்க. அதுல்ல்ல்ல்லே ஒன்னுதான், ரயில்வே ஸ்டேஷன்லயும், ட்ரேய்ன்லயும் மண் கப் ல டீ, காபி சேர்வ் பண்ற திட்டம்ங்க. வருங்காலத்துல டிரேயின்ல பில்லோ கவரும், பெட்ஷீட்டும் காதி மெட்டீரியல் செஞ்சதுதான் யூஸ் பண்ணபோறாங்களாம். நீநீநீங்ங்ங்க நம்ம லல்லுவுக்கு இதைப்போல ஒரு யோசனை சொல்லும்னா, என்ன சொல்லுவிங்கே…. நீங்க டிபன் சாப்பிடாட்டாலும் பரவாயில்லை, ஷேவ் பண்ணாட்டாலும் பரவாயில்லை, எந்த முக்கியமான வேலையினயும் செய்யாம, உங்க பதிலை எனக்கு 55509990 நம்பருக்கு போன் பண்ணிசொல்லுங்க.உங்க பதில் மிர்ச்சியா இருந்தா ஒரு மிர்ச்சி காபி மக் உண்டுங்ங்ங்ங்க !!!” என்று சுப்ரபாதம் படித்துக்கொண்டிருந்தார். (நானும் என் தம்பியும் இதை முக்கியமாக கேட்டுக்கொண்டிருந்தோம்).
சரி, என் தம்பி அந்த மிர்ச்சி காபி மக் வேண்டும் என்று ரொம்பநாள் தொலைபேச முயன்று சோர்ந்திருந்தான். நான் அவனிடம் பந்தையம் வைத்துவிட்டு பதில் சொல்லலாம் என்று டயல் செய்தேன். முதல் தடவையே கிடைத்தது. நான் , ” பிளாஸ்டிக் பொருளினால் செய்த கோப்பைகளால் மாசுபாடு அதிகரிக்கிறது, அதனால் மண் பாண்டம் உபயோகிப்பது நல்லது. அதேபோல டீசல் இஞ்சினால் சுற்றுசூழல் பாதிக்கப்படுகிறது ஆகையால் டிரேயினை இழுப்பதற்கு ஐந்து எருமைகளும், தள்ளுவதற்கு ஐந்து காளைகளும் உபயோகிக்கலாம். மாசுக்கட்டுப்பாடு பிரச்சனை ஒழியும், அப்படியே வந்தாலும் உரமாகவும் உபயோகித்துக்கொள்ளலாம். என்ன புகைவண்டிக்குள்ளே உள்ளே ஒரு 400-500 எருமைகள் இருக்கும். நம்ம ஓட்டுநர் மற்றும் தள்ளுனர் எருமை கொஞ்சம் அஜீஸ் பண்ணிக்கனும்” என்று சொல்லாம் என்று எண்ணியிருந்தேன். மறுமுனையில் ஃபோன் எடுத்தவர், என் தொலைபேசி எண் வாங்கிக்கொண்டு , “சுசித்ரா உங்களைக் கூப்பிட்டாலும் கூப்பிடுவார்” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார். காபி மக்…டமால்.