காக்டெயில் - வாசக அனுபவம்
“நாவல் வடிவமானது இறந்துவிட்டது. இனி கதை எழுத்து என்ற சொல்லாடல் களமானது, தன்னிலிருந்தே ஓடிப் பெருகுவதாய் தன்னையே திரும்பச் சொல்லி பதிவு செய்து கேலி செய்து மறுத்து உருவாகும். எழுதப்படும் போது உருவாவதாய் இருக்கும்” என்ற ரேமண்ட் ஃபெடர்மானின் சொற்களோடு துவங்குகின்றது இந்நாவல்.
நாவல் என்பது வாழ்க்கையின் தேடலில் வெளிப்பாடு, ஆன்மிக நோக்குடன் இருக்கவேண்டும் என்று நினைப்பவரானால், உங்களுக்கான நாவல் இதுவல்ல. (நான் பார்த்த அளவில்) டாரண்டினோ போன்றவர்களின் திரைப்படங்களில் கதையோ, தேடலோ ஒரு மண்ணும் இருக்காது, ஆனால் திரைப்படம் மிகவும் வசீகரமாக இருக்கும். அதற்கு காரணம், கதை சொல்லும் நடை, பாங்கு, (இப்போ புதுசா வந்த சொல்லான) ஒயில் (Style) என்று தான் சொல்லமுடியும். அதைப் போலவே இந்நாவலின் நடைதான் இதன் அழகிற்கு காரணம். வாசகர்களை மெல்லிதாக நக்கலடித்து, கவனத்தை ஈர்த்து, சப்பையான விஷயத்தை அழகாக சொல்லும் முறையில் வெற்றி அடைகின்றது இந்நாவல்.
பாசு என்ற எழுத்தாளன் ஒருவனைப் பற்றியது. எல்லா எழுத்தாளர்களைப் போல, தான் மட்டும் தனித்துவமானவன் என்ற தனித்துவமின்மையினை, தனித்துவமாகக் கொண்ட எழுத்தாளன். ஃபோட்டோஷாப் மற்றும் டி.டி.பி மென்கலன்களை இயக்கத்தெரிந்த கொஞ்சம் ஹைட்டெக்கான, பணம் சம்பாதிப்பது வாழ்க்கையின் endsம் அல்ல meansம் அல்ல என்பது போன்ற அதி அற்புத தத்துவங்களை பழகும் மனிதன். தன்னளவில் தன்னை விட்டேத்தி என்று எண்ணிவாழ்பவனின் கதை, காக்டெயில். உபேந்திரா போல, “யாக்கே கூல்ட்ரிங்கு” என்று கூறி பீரைக் குடித்து தண்ணீரை சேமியுங்கள் அற்பப் பதர்களே என்பதைக் கூறாமல் கூறி, அதை கடைபிடிக்கும் தகையனார் நம் பாசு என்கிற பாலசுப்பிரமணியம்.
சமீபத்தில் படித்ததில், என்னை மிகவும் கவர்ந்த நாவல். இந்நாவலின் கதையினை சொல்லி உங்கள் கழுத்தையறுக்கப் போவதில்லை. ஏனென்றால் கதை என்று அப்படி பெரிதாக ஒன்றும் இல்லை. எனவே இந்நாவில் இருந்து பெற்ற சில போதனைகள், சில fundaக்கள், சில சுவாரஸ்யமான triviaக்கள் இங்கே:
கோல்கொண்டா ரூபி ரெட் ஒயினும், கிங்ஃபிஷர் பியரும் எடுத்துக் கொள்ளவும். ஒரு சாதாரண கண்ணாடி தம்ளரில், ஒரு லார்ஜ் அளவுக்கு ஒயின் ஊற்றுங்கள். பிறகு அந்த தம்ளர் நிறையும் அளவு பியர் ஊற்றுங்கள். இப்போது, பியரின் கசப்புச் சுவை முற்றிலும் மறைந்து, வைனின் துவர்ப்பும் முற்றிலும் மறைந்து, அளவான இனிமைபோடு நாவில் ஒட்டும் பதத்தில், சிறுபிள்ளையும் சப்புக்கொட்டி சாப்பிடும் பதார்த்தம் போல இருக்கும். (இது லெதர் பாரிலேயே பழி கிடக்கும் எழுத்தாள நண்பர் (வேறு யாரு…சாரு நிவேதிதா என்று தான் நினைக்கிறேன்) சொல்லிகொடுத்ததாம்)
ஒரு லார்ஜ் என்பது அறுபது மில்லிமீட்டர். ஸ்மால் என்பது முப்பது மில்லி. மூன்று லார்ஜ்களை கொண்டது ஒரு குவார்ட்டர் (180 மில்லி). ஆனால் ஒரு ஹாஃப் என்பது 360 மில்லி, என்று நினைத்தீர்கள் என்றால், ஜன்ம சாபல்ய மற்று போக மாட்டீர்கள். So get your basics right. ஒரு ஹாஃப் என்பது 375 மில்லி. அதே போல ஃபுல் என்றால் ஒரு லிட்டர் என்று அப்பாவித்தனமாக எண்ணாமல், 375 X 2 = 750 மில்லி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (டீம் பார்ட்டிகளில் சகாக்கள் அனைவரும் நாற்றம்பிடித்த கிங்ஃபிஷர் பீரை அடித்துக் கொண்டு, அதற்கே மப்பேறி உளர்வதை, குடிப்பழக்கம் இல்லாத காரணத்தால் Tropicana ஆப்பிள், பைனாப்பிள், தர்பூஸ், முலாம் பழம் என்று குடித்து என்னைப் போல bladderஐ நிரப்பிக் கொண்டு பார்க்கும் தன்மை கொண்டவர் என்றால், மேற்கூரிய இந்த இரண்டு பாயிண்டுகளும் அடுத்த டீம் பார்ட்டியில் பிஸ்து காட்டுவதற்கு உபயோகப் படலாம் )
ஃபுல் மப்பில் யமஹா ஒட்டிக்கொண்டு, தாறுமாறான வேகத்தில், ஃபளைஓவரில் செல்லவும், எப்படியாவது தட்டுதடுமாறி ஃப்ளைஓவரின் ஒரத்தில் இடித்து கீழே விழவும். பின்னர் உங்களுடை, அரதப் பழைய பைக்/டூ-வீலர் சாகசத்தை மனதில் நினத்துக் கொள்ளவும், ஏதாவது ஒரு பெண்ணிற்கு ரூட் போடுவதற்காகவோ, அல்லது சீன் விடுவதற்காகவோ, அல்லது தற்செயலாக செய்யப் போன வாகன சாகசத்தில் இருந்து, அதிர்ஷ்ட வசமாக தப்பிக்கொண்டதை மனதில் நினைத்துக் கொள்ளவும். அதை உங்கள் திறமையால் தப்பித்ததாக எண்ணிக்கொள்ளவும். ஆக இப்போது நீங்கள் ஒரு இருசக்கர வாகனம் ஓட்டுவதில் தில்லாலங்கடி. ஃப்ளைஓவரில் மூலையில் இருந்து எழுந்து கொண்டு, ஃப்ளைஓவரின் வளைவில் இடதுபக்கம் கொஞ்சம் மேடாகவும், வலதுபக்கம் கொஞ்சம் பள்ளமாகவும் ரோடு போடாத எஞ்ஜினியர்களை மனதாரப் புகழவும். உங்கள் விபத்துக்கு காரணம், நீங்கள் எல்லை, ஹைவேஸ் டிபார்ட்மெண்ட் தான் என்று திருப்திபட்டுக் கொண்டு, ஆஸ்பத்திரியில் சென்று அட்மிட் ஆகவும்.
தண்ணி ஃபண்டாக்கள் போதும். வேற விஷயத்துக்கு வருவோம். சென்னையில் இருப்பவர் என்றால் உங்களுக்கான சில விஷயங்களை, கூகள் AdSenseஐ விட சென்சிபிளாக ஒரு இடத்தில் வரும் டிப்ஸ் ( விளம்பரம் எண்டும் சொல்லலாம் :) ) என்ற பெயரில் கூறுகிறார், நாவலாசிரியர். பட்டுக்கோட்டை ஒயின்ஸின் சிறப்பான டிஷ், மீன் முட்டை (அயிலை மீனும், கோழி முட்டையும் சேர்த்து செய்தது), சுபா ஒயின்ஸின் சிறப்பம்சம் நெத்திலி மீன், சேலம் ஆர்.ஆர் ஒயின்ஸின் சிறப்பம்சம் கடல் உணவுகள். மறுபடியும், என்னைப் போல Egg-vegetarian ஆக நீங்கள் இருந்தால், உங்களுக்கு “சீஸ் - செர்ரி- பைனாப்பிள்” என்ற வீட்டிலேயே செய்து கொள்ளக்கூடிய பதார்த்தம் ஒன்றும் உள்ளது. (அதைப் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள தொன்னூறு ரூபாய் கொடுத்து யுனைட்டட் ரைட்டர்ஸ் வெளியிட்டுள்ள காக்டெயில் புத்தகம் வாங்கிக்கொள்ளுங்கள் :) )
டேய், சோத்தமிக்கி, வேறயெதையாவது பற்றி சொல்லு என்று நீங்கள் இந்த விண்டோவினை மூட நினைக்கலாம். அப்படி நினைப்பவர்களை, சோழிங்கநல்லூர் ப்ரத்யங்கரா தேவி உம்மாச்சி கண்ணைக் குத்திவிடுவாள். சரி, அடுத்த விஷயம். சில எழுத்தாளர்களைப் பற்றி காக்டெயில் எனக்கு கூறியவை. இந்த எழுத்தாளர் மிகவும் புத்திசாலி, ஒரு ரெபல், இவர் எழுதிய ஒரே சிறுகதைத் தொகுப்பு, “இன்று நிஜம்” என்ற நூல் கிடைப்பதே அரிதாம். இளவயதில் அகால மரணமடைந்த இவர், இறக்காமலிருத்திருந்தால் தமிழையே தலைகீழாய் புரட்டிப் போட்டிருப்பாராம். அந்த இவர், சுப்பிரமணிய ராஜூ.
அடுத்த எழுத்தாளர் in-focus, சுந்தர ராமசாமி என்ற பெயரிலும், பசுவய்யா என்ற பெயரிலும் எழுதிக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் எழுத்தாளர். இவர் எழுத்தை படித்த பலர், தன் தலைமுறை ஆப்பரேட்டிங் சிஸ்டம் படித்த இன்ஜியர்களாக அமெரிக்கா சென்று அவுட்லுக் மற்றும் MS-Excel, எக்ஸலாகும் போது, சிலர் மட்டும் புத்தகப் புழுக்களாக, ஓசி டைரியில் கதை எழுதி, சிறுபத்திரிக்கையில் எழுதி அல்லது சிறுபத்திரிக்கை நடத்தி (சரி ரெண்டுத்துக்கும் என்ன வித்தியாசம்), பெண்களைப் பெற்றவர்களை பயமுறுத்தி வைப்பவர்களாம். இப்படி, சுந்தர ராமசாமியின் எழுத்தை படித்தவர்கள் சீரழிந்து கொண்டிருக்க, சுந்தர ராமசாமி மட்டும் தூரதேசங்களில் லொகேஷன் பார்க்கும் இயக்குநர்கள் போல சுற்றிக் கொண்டு இருப்பவராம்.
இறுதியாக, சுதேசமித்திரன் என்ற எழுத்தாளான், முதல் தர ஜனரஞ்சக பத்திரிக்கையின் சிறுகதைப் போட்டியில் இருபதாயிரம் ரூபாய் பரிசு பெற்ற எழுத்தாளன். கால்டவுஸர் போட்டுக்கொண்டு (இப்பல்லாம் வேட்டி கட்டிக்கொண்டு :) ) சென்னையின் வலைப்பதிவு நண்பர்களிடையே புகழ்பெற்ற ஒருவர் நடத்தும் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ள “கோபுரம் தாங்கி” என்ற புத்தகத்தை எழுதிய எழுத்தாளன், சுதேசமித்திரன். தி.ஜானகிராமனிடமிருந்து நடையினையும், ஜெஃப்ரி ஆர்ச்சரின் சிறுகதைகளை முன்னுதாரணமாகக் கொண்டு, சுஜாதாவிடம் ராணி பத்திரிக்கை படிக்கும் புழுவே என்ற நயன தீட்சையினை வாங்கிய எழுத்தாளன், சுதேசமித்திரன். ஆரம்ப காலத்தில் பாலகுமாரன் மற்றும் ராஜேஷ் குமார் போன்றவர்களின் கதைகளின் பற்று கொண்ட எழுத்தாளன், தன் பேராசிரியரின் பரிந்துரையின் பேரில், ஜே.ஜே சில குறிப்புகள் என்ற நாவலைப் படித்து, தன்னுள்ளே பெரிய மாறுதலைக் கண்ட எழுத்தாளன் , சாரி, எழுத்தாளர், சுதேசமித்திரன். அர்த்தமண்டபம் என்ற வலைப்பதிவு எழுதும், அடோபி போட்டோஷப் தெரிந்த, புதுமையான எழுத்து நடை கொண்ட எழுத்தாளன், சுதேசமித்திரன் என்ற ஷங்கர். அவர் எழுதி வெளிவந்துள்ள நாவல் “காக்டெயில்”
Spoiler:
கதை இல்லையென்று சொன்னாலும், ஒரு க்ளூ. நான் கூறப் போகும் ஒரு வரிசையில், காக்டெயிலை சேர்த்துக் கொள்ளலாம்.
- தலைவர் Calvin & Hobbes,
- ஸ்டீஃபன் கிங் எழுதிய Secret Window,
- ஜான் நாஷ் பற்றிய A beautiful mind,
- புதுமைச்செம்மல், வித்தியாசப் பம்மல், இரா. பார்த்திபன் இயக்கிய குடைக்குள் மழை
- ….ம்ம்ம்… இன்னும் சொல்லவேண்டும் என்றால் ரஜினியை முழுங்கி ஏப்பம் விட்ட தங்கத் தலைவி, கலைத்தாய் சோதிகா
Update (After Almost 20 Years - 2/Oct/2023)
This little post gave me so much fun writing, and many friends were very kind enough and encouraging. For all its flaws in the views and content, I still reminisce about my blogging days with so much fondness. Here is me bragging about some comments and recs.