இளையராஜாவின் திருவாசகம்
சிதம்பரத்தில் வளர்ந்ததால், என் தாய் சிவபுராணத்தை நான் உருப்போடுமாறு ஒரு கோடைவிடுமுறையில் ஆர்வத்தினை தூண்டினார். மேலும், சிதம்பரம் ஆலயத்தில் மார்கழி மாதம், தீபாராதனையின் போது திருவெம்பாவை படிப்பார்கள். சில சமயம் சிவபுராணமும் உண்டு. அது படிப்பதா பாடுவதா என்று சரியாக சொல்லமுடியாது. கர்நாடக ராகத்தில் எல்லாம் பாடமாட்டார்கள், அதே சமயம் தேமே என்றும் படிக்க மாட்டார்கள். அது வேறுவிதமான, ஆனால் எனக்கு பிடித்தமான ஒரு இசையாக இருந்தது. பெரும்பாலும் பல சைவ ஆலயங்களில் இந்த மாதிரி படிப்பதை (அல்லது பாடுவதை) கேட்டு லயித்துள்ளேன்.
அப்படிப் பட்ட எனக்கு இளையராஜாவின் இந்த ஆரட்டாரியோ முயற்சி மிகுந்த எதிர்பார்ப்பினை தூண்டிவிட்டுருந்தது. ஞாயிறு அன்று வாங்கினேன் இது வரை மூன்று முறை முழுவதாகக் கேட்டேன். எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் ஒன்று, it is good, in fact very good, but it is not fabulous.
காரணம். இசையின் technical aspectsஇன் அறிவிலியாகிய நான், என்னுடைய அனுபவம் கொண்டுதான் கூறமுடியும். இந்த ஆரட்டோரியா முயற்சி முற்றிலும் புதுமையானது, இதைப் போன்ற ஒன்றினை நான் இதுவரைக் கேட்டதில்லை என்றேல்லாம் ஸ்டீஃபன் ஷ்வாட்ஸ் சொல்லியிருந்தார். இது சில பாடல்களுக்கு வேண்டுமானால் உண்மை, ஆனால் இளையராஜாவின் திரைப்பட பாடல்களிலும், பின்ணனி இசையிலும் இந்த ஆரட்டோரியாவில் உள்ளது போன்ற இசையினை கேட்டது போல எனக்கு தோன்றுகிறது.
இன்னொரு சங்கதி, இந்த இசைத்தொகுப்பின் மொத்த நேரம் அறுபது சொச்ச நிமிடங்களே. ராஜேந்திரன் தன் பதிவில் சொன்னது போல, இது எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் அளித்தது. பல நாட்கள், கடுமையாக உழைத்து, மிகப் பெரிய எதிர்பார்பினை ஏற்படுத்தியதாலோ என்னவோ, எனக்கு இந்த ஒரு விஷயம் கொஞ்சம் ஏமாற்றம் அளித்தது.
எனக்கு திருவாசகத்தில் இன்னொரு பிரச்சினை. சில பாடல்கள் மிக எளிதாகப் புரிகிறது (உ.ம் : புல்லாகி பூடாய்… , புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்..), சிலது சுத்தமாக புரியவில்லை. நான் வாங்கிய குறுந்தகடுத் தொகுப்பில் பாடல்வரிகள் அடங்கிய ஒரு புத்தகம் கொடுத்திருந்தனர். அதைப்போலவே அப்பாடல்களுக்கான பொருளினையும் கொடுத்திருக்கலாமோ. இன்னொரு சங்கதி, திருவாசகத்தில் உள்ள சில வரிகள் இப்போது ஏற்புடையதா என்று தெரியவில்லை. உதாரணம், “வளை கையார் கடைக்கண் அஞ்சேன்”. இது சுலபமாக புரிந்து கொள்வதற்கு ஏற்றதாகக் கருதுகிறேன். ஆனால் இதனுடைய context தெரியாமல், ஐயகோ, எவ்வளவு மூடத்தனமான சிந்தனை என்றெல்லாம் சொல்லலாமா என்று தெரியவில்லை. விஷயம் தெரிந்தவர்கள் (ஹரி கிருஷ்ணன் போன்றவர்கள்) சொன்னால் புரிந்து கொள்ள முடியும் என எண்ணுகின்றேன்.
இந்த இசைத்தொகுப்பில் எனக்கு பிடித்த பாடல்களை, அதே வரிசையில் பட்டியலிட்டுள்ளேன் :
புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்
கொஞ்சம் நாட்டுபுறம் நடையோ என்று எண்ண வைக்கும் ஆரம்பம். பிறகு தான் தெரிகிறது, மேற்கத்திய செவ்வியலிசையினை, நம்மூர் பாணியில் தன்னான என்று பாடிவிட்டு, அச்சப்பத்து என்ற திருவாசகத்தின் பாடலை பாடுகிறார் ராஜா. எனக்கு இது மிகவும் இனிமையாக இருப்பது போல் தோன்றுகிறது.
பொல்லா வினையேன்
சிவபுராணத்தில் உள்ள பாடல். மிக நீண்ட பாடல் (இருபது நிமிடங்கள் நீள்கிறது). இப்பாடலின் நடுவில், சில வரிகள் ஆங்கில மொழியாக்கப்பட்டு, ரே ஹர்கோர்ட் என்பவராலும் தமிழ் வரிகள் ராஜாவினாலும் பாடப்பட்டுள்ளன.
முத்து நற்றாமம்
ராஜா பாடாத ஒரே பாடல். உன்னி கிருஷ்ணன், மது பாலகிருஷ்ணன், விஜய் யேசுதாஸ், ஆஷா, மஞ்சரி, காயத்ரி போன்றோர் பாடியுள்ளனர். திருப்பொற் சுண்ணம் என்ற திருவாசகப் பாடல். அருமையாக வந்துள்ளது. மற்ற பாடல்களில் சொற்களை அழகாக பிரித்து பாடியவர், இப்பாடலின் துவக்கத்தில் ஏன் அப்படி செய்யவில்லை என்று தெரியவில்லை. முத்து நற்றாமம் என்பது முத்து நல் தாழம் என்று தேடிப் படித்த பின்பு தான் தெரிகிறது.
பூஏறு கோனும்
திருக்கோத்தும்பி என்ற திருவாசகப் பாடல் இது. பவதாரிணியும், ராஜாவும் பாடியுள்ள பாடல். இப்பாடல் எனக்கு மேற்கத்திய செவ்வியலிசை போன்றெல்லாம் தெரியவில்லை, அல்லது இளையராஜாவின் பலபாடல்களினைக் கேட்டதால் வந்த விளைவா என்றும் தெரியவில்லை. ஆனால் கேட்க அருமையாக உள்ளது.
உம்பர்கட்கரசே
ராஜா பாடிய பாடல். நமக்கு அதிகம் பரிச்சயமான “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே” (எட்டாம் வகுப்பு செய்யுள் என்று ஞாபகம்) பாடல் இதில் வருகிறது. பிடித்த பத்து என்ற திருவாசகப் பாடல்.
பூவார் சென்னி மன்னன்
திருவாசகத்தின் யாத்திரைப் பத்து என்ற தொகுப்பில் உள்ள பாடல். இசைத்தொகுப்பின் முதல் பாடல், இளையராஜா பாடியுள்ளார். இது எனக்கு ஒரு மிஸ்டிக் எஃபெக்ட் ஏற்படுத்துவதாக உள்ளது. முதல் பாடல் என்பதால் ஒரு மெஜஸ்டிக் எஃபெக்ட் ஏற்படும் என்ற எண்ணம் என நினைக்கிறேன். ஆனால் மற்ற பாடல்களைப் போல அதிகமாகக் கவரவில்லை.
சுட்டிகள் :
Comments (16)
காஞ்சி பிலிம்ஸ் 19 years ago · 0 Likes
//“வளை கையார் கடைக்கண் அஞ்சேன்”//
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது.
rajkumar 19 years ago · 0 Likes
Very good review.
Anbudan
Rajkumar
Kannan 19 years ago · 0 Likes
தம்பீ!
நல்ல அறிமுகம்.
ரொம்பவும் ஆராய்ச்சி செய்து, நல்ல சுட்டிகள் தந்து, நன்றாக எழுதியுள்ளீர்கள். குறைந்த பட்சம் உச்சரிப்பு சுத்தம் இருந்தாலே வாங்கலாம் என்றிருந்தேன். இது (அறிமுகம்)உபயோகமாய் இருக்கும்
ரவிசங்கர் 19 years ago · 0 Likes
i was searching for thiruvasagam review in thamizmanam..and found urs..I have asked my appa to send a Cd to me..but being impatient I heard from the web..I accept with ur views that some songs sound like cine music..but as he explains all music is same for him :)..it may be because that we are so used to hearing his voice in cinema ..may be with just music without lyrics we can feel the symphonic quality..I am a zero in musical knowledge..so i cannot say anything abt quality of music except that it sounds nice..my favourites are the pooverukanum song (bavatharani) and pollar vinayaen..some of his cine songs like thenRal vanthu from avathaaram I first listened causally then found it being appreciated in detail by some music buffs..like that there may be a lot in this album also to apprecaite by qualified person..but it is disappointing that there are just 6 songs
Anonymous 19 years ago · 0 Likes
Good Review Santhosh.
Though not a student of music, I too was disappointed after listening to this much hyped venture by IR. (I should confess that I didn’t buy the CD but downloded from the net). With so much media attention and hype the album lacked the grandeur and it reminded me of his movie music. (I couldn’t but mention that the background music was no better than ‘Strawberry penne’ by ARR). Maybe I am too lame to understand the intricacies of classical music.
‘5 star hotela pazhaya saatham’.
ஆனால் இதனுடைய context தெரியாமல், ஐயகோ, எவ்வளவு மூடத்தனமான சிந்தனை என்றெல்லாம் சொல்லலாமா என்று தெரியவில்லை.<<<<
Don’t worry people would cook- up an acceptable reasoning for that :).
.:dYNo:.
Venkat 19 years ago · 0 Likes
சந்தோஷ்குரு - பல நாட்கள் உழைத்தது என்று மதிப்பிடுவது சரியில்லை. இதுபோன்ற தீவிர முயற்சிகளுக்கு இன்னும் அதிக நாட்கள்கூடப் பிடிக்கலாம். (ரஹ்மான் வருடத்திற்கு எத்தனைப் படங்களுக்கு இசையமைக்கிறார் என்று பாருங்கள். ஹாரிஸ் ஜெயராஜ் அந்நியன் இசையமைக்க ஒருவருடம் வேறெதையும் ஒத்துக்கொள்ளவில்லையாம்). இந்த ஆழத்துடன் இதைச் செய்வதற்கு எடுத்துக் கொண்ட நாட்கள் சரிதான் (அல்லது குறைவு) என்பது என் கணிப்பு.
என்னுடைய முதல் எண்ணங்களை இங்கே பார்க்கலாம்:
http://www.domesticatedonion.net/blog/?item=545
Hari 19 years ago · 0 Likes
திரு சந்தோஷ் குரு, நம்மள விளக்கம் கேட்டிருக்கீங்க. வலைப்பதிவுகள் பக்கம் கொஞ்ச காலமா வருவதில்லை. இப்பத்தான் நம்ம வலைத்தளத்து கவுண்டர்ல இந்தப் பக்கத்துல இருந்து ஆள் நடமாட்டம் கொஞ்சம் அதிகமா இருப்பதைக் கவனித்து இங்கே வந்தேன்.
திருவாசகத்தின் குறிப்பிட்ட அந்த இடம் இந்தக் காலத்துக்குப் பொருந்துமா பொருந்தாதா என்ற விளக்கம் எல்லாம் இருக்கட்டும். ‘கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும் அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே’ அப்படின்னு முண்டாசுக்காரர் பாடியிருக்காரே, அதுக்கும் சிரிச்சுடுவோமா? இல்லாட்டி அதுக்கும் அர்த்தத்தை ‘சமைக்க’ வேணுமா? முண்டாசுக்காரரும் மூடத்தனந்தானா? [நமக்குத் தெரிந்ததெல்லாம் அந்தப் பாட்டில் ஒரே ஒரு லைன்தானே! அதுக்கென்ன, எல்லாத்துக்கும் ஒட்டு மொத்தமா ஒரே சாத்து சாத்திடுவோம். :-)]
இந்த இடம் கருத்து சொல்ல மட்டும்தான். மத்தபடி நம்ம வேலையைச் செய்ய வேண்டிய இடத்தில் செய்யலாம். என்ன காரணமோ தெரியவில்லை. நம்ப பதிவு எல்லார் கண்ணுக்கும் தட்டுப்படுது. நமக்கு மட்டும் மாசக் கணக்கில் ஆட்டம் காட்டுது. வேற எடத்துக்குக் குடி மாறலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறே;ன். அங்கேயோ இல்லை மத்த இடத்திலேயோ சொல்றேன்.
மத்தபடி நல்ல பயனுள்ள பதிவு. நன்றி.
Sanjeeth 19 years ago · 0 Likes
சந்தோஷ், இப்பதிவிற்கு மாணிக்க வாசகர் மற்றும் இளையராஜாவின் திருவாசகம் என்ற தலைப்பிட்டிருக்கலாம். இரண்டையும் Review-த்திருக்கிராய் ;). முதலில் இளையராஜாவின் திருவாசகம் பற்றிய comment இந்த review முழுவதும் “fails to deliver what it promises” என்ற அடிப்படையில் அமைதுள்ளது. அப்படி சொல்வது சரியில்லை. உதாரணமாக ” இந்த ஆரட்டோரியா முயற்சி முற்றிலும் புதுமையானது, இதைப் போன்ற ஒன்றினை நான் இதுவரைக் கேட்டதில்லை என்றேல்லாம் ஸ்டீஃபன் ஷ்வாட்ஸ் சொல்லியிருந்தார்.” இது அவரது தனிப்பட்ட கருத்து. அவ்வளவே. God and Music was never for the common man(idhu punch dialogue, romba yosika vendaam).இது common manuக்கு கொண்டு செல்லும் முயற்சியாகவே எனக்குப் படுகிறது. இப்பொழுது மாணிக்க வாசகர் திருவாசகம் பற்றி ;)
“வளை கையார் கடைக்கண் அஞ்சேன்”. இது ஒரு poetic usage-ஆகவே தோன்றுகிறது. அந்த அர்த்தத்தில் இருந்தால், இப்போது மட்டும் அல்ல எப்போதும் பொருந்தாது
Santhosh Guru 19 years ago · 0 Likes
பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
எல்லோரும் இதை விமர்சனம், review என்று கூறியுள்ளீர்கள். இசை பற்றிய விஷயம் நன்கு அறிந்தவர்கள் (வெ.சா, வெங்கட், லலிதா ராம் போன்றோர்) விமர்சிக்கலாம். நான் செய்தது ஒரு அனுபவ பகிர்ந்து கொள்ளலே அன்றி வேறு எதுவும் இல்லை.
ஹரி, உங்கள் மறுமொழிக்கு என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு முட்டாள்தனமாக, பாரதி நிவேதிதா அம்மையாரை பார்க்கும் முன்பு இப்படி எழுதியிருப்பாரோ என்றெல்லாம், தோன்றுகிறது. மறுபடியும் சொல்கிறேன் எனக்கு அந்த சூழல் தெரியவில்லை, அதன் காரணமும் தெரியவில்லை. ஆகையால் வாயை மூடிக்கொள்கிறேன். விஷயமறிந்தவர்கள் சொல்வதைக் கேட்டுவிட்டு (படித்துவிட்டு) ஒரு முடிவுக்கு நான் வரவேண்டும். நீங்கள் எந்த இடத்தில் இதைப்பற்றியெல்லாம் கூறுகிறீர்களோ, முதல் ஆளாக வந்து அதைப் படிக்கும் ஆர்வத்தோடு இருக்கிறேன் (எங்கே என்றும் சொல்லிவிடுங்கள் ;) ).
வெங்கட், உங்கள் கூற்று உண்மையே. ஆனால் ரஹ்மானைப் போலவோ, ஹாரிஸ் ஜெயராஜைப் போலவோ ராஜா அதிகமாக நேரம் எப்போது எடுத்துக் கொள்வாரா என்று தெரியவில்லை. ராஜா என்றால் வேகம் அதே சமயத்தில் தரம் என்று தான் நான் நம்புகிறேன். அதனால் தான் நிறைய எதிர்பார்த்தேன்.
Hari 19 years ago · 0 Likes
திரு. சந்தோஷ், தெரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்கிறீர்கள். இந்தக் குறிப்பிட்ட வகையான வரிகளை எந்த வகையான கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள் என்பதைப் பொருத்தே பொருள் உணர்தல் சாத்தியம்.
நீங்கள் பாரதியின் மேல் சகோதரி நிவேதிதையின் தாக்கத்தை அளவுக்கதிகமாக நினைத்துக் குழப்பிக் கொள்கிறீர்கள். She of course has her place in the life of Bharati. ஆனால், நிவேதிதையைச் சந்தித்த உடனே பித்தளை, தங்கமானதைப் போல் ஏதும் நடந்துவிடவில்லை. அந்த அளவுக்கு பாரதி பித்தளையுமில்லை.
மேலும், பாரதி நிவேதியைச் சந்தித்தது எப்போது? காசியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்று திரும்பும்போது. அது நடந்தது 1906-ல். அச்சமில்லை அச்சமில்லை பாடல் வெளி வந்தது ‘மாதா மணிவாசகம்’ என்ற தொகுப்பில். இந்தத் தொகுப்பு வெளி வந்தது 1914ல். அதாவது சந்திப்பு நடந்து எட்டு ஆண்டுகள் கழித்து.
இது போன்ற வரிகளில் - சரியாகச் சொன்னால் அடிகளில் - பயிலும் உணர்வு வேறு. சில நாளில் எழுத முயல்கிறேன். அதற்குள் என் வலைப்பதிவு சரியானால் அங்கு. இல்லாவிட்டால் மடற் குழுக்களில்.
Vinodh Kumar 19 years ago · 0 Likes
“வளை கையார் கடைக்கண் அஞ்சேன்”
சந்தோஷ் என்னுடைய பொழிப்புரை இதோ :-)
வளை கையார் கடைக்கண் பார்வைக்கு விழும் அச்சம், விச்வாமித்திரர் முதல் இந்த காலத்து பல துறவிகள் வரை இருந்திருக்கிறதை நாம் அறிந்திருப்பதை போல் மாணிக்கவாசகரும் அறிந்திருக்கலாம்;-) ஆதலால் இந்த துறவிகளுக்கே உரிய கடைக்கண் அச்சம் நீங்கியவனாய், சிவனை நேசிக்கும் உண்மையான சிவனார் என்று தம்மை பறைசாற்றிக் கொண்டு மற்ற துறவிகளை கிண்டல் செய்கிறார் போலும் ;-)
-Vinodh (Checkout விசை)
ரவிசங்கர் 19 years ago · 0 Likes
பொருளாதாரக் காரணங்களால் தான் இந்த முயற்சி தாமதமானது என அனைவரும் அறிவர். 13 நாட்களில் இசைக்குறிப்பு எழுதி முடித்ததாக அவரே சொல்லியுள்ளார். அதனால் இவ்வளவு நாள் இசையமைத்தது ஆறே ஆறு பாடல்களுக்குத் தானா என்று கேட்பது சரியாகாது. சிவப் புராண வரிகளுக்கு மேலும் கீழும் மாற்றி மாற்றி ( மெட்டமைதி கருதி) இசையமைத்துள்ளார். இது ஏற்புடையதாகத் தோன்ற வில்லை. இலக்கிய அறிமுகம் இல்லாதோர் உண்மையிலேயே திருவாசகமும் இப்படித் தான் எழுதப் பட்டிருக்கும் என நினைத்துக் கொள்ள வாய்ப்புண்டு. அப்புறம் கடைசி பாடலில் அவர் பேசியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.ஒரு வேளை டி.வி.டி வாங்காத மக்களுக்கு இந்த படைப்பாக்கத்தைப் பற்றி சிறு அறிமுகம் தர எண்ணியிருக்கலாம். அந்த பாடலின் முடிவும் திருவாசகம் அல்லாத வரிகளுடன் முடிவதை கவனிக்க வேண்டும்.(வாதவூரடிகள் வாழ்க..). முடிக்கிற படியே ஆரம்பிக்கவும் அவர் எண்ணியிருக்கலாம். ஆனால் அதற்காக அவரை கன்னா பின்னா வென்று விமர்சிக்கத் தேவையில்லை. ஒருவருடைய படைப்பில் எதையும் செய்யும் உரிமை கலைஞனுக்கு உண்டு.
இசை விமர்சனங்களத் தாண்டி, இளையராஜாவின் இந்த முயற்சி திருவாசகத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியத்தை வருங்கால சந்ததிக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற அவருடைய நோக்கம் நிச்சயம் நிறைவேறும். பாடல்களின் முழு உள் அர்த்தம் தெரியாமல் இந்த பாடல்களை ரசிக்க சிரமப்பட்டேன். தேடிப்பிடித்ததில், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் பொழிப்புரை, விளக்கவுரை தந்திருந்தார்கள். அங்குள்ள நூலகத்தில் மின்னஞ்சல் முகவரி தந்து புத்தகங்களைப் படிக்கலாம். (இதே தளத்தில் கோயில்களில் ஓதப்படுவது போல திருவாசகத்தை வாசிக்கும் ஒலிக் கோப்பும் இருக்கிறது. அதைக் கேட்டு விட்டு மீண்டும் இளைய ராஜாவைக் கேட்கும் போது தான் அவர் எவ்வளவு எளிமையாக இனிமையாக குழந்தைகளும் எளிதில் பாடும் படி இசைஅமைத்திருக்கிறார் என உணர முடியும்)படித்த பின் உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருந்தது. பள்ளி செல்லும் வயதில் சில தமிழ் செய்யுள் மனனப் பாடல்களில் திருவாசகமும் இருந்தது என்றாலும், ஏதோ ஒப்பேற்றுவதற்காகத் தான் அப்பொழுது படித்தது. விவரம் தெரிந்து நல்ல இசையுடன் கேட்கும் பொழுது நன்றாக இருக்கிறது.
இந்த இசைத் தொகுப்பு பிரபலமாகும் பட்சத்தில் பின் வருவன் நிகழும் என எதிர்பார்க்கலாம்:
கோயில்களில் வெற்று இயந்திர மணியோசைக்குப் பதில் இந்த இசைத் தொகுப்பு ஒலியேற்றப்படும். ரண்டக்க ரண்டக்க பாடும் குழந்தைகள் நமச்சிவாயம் வாழ்கவும் விரும்பிப் பாடுவார்கள். கண்டிப்பாகப் பள்ளிக்கூடத் தமிழ் ஐயாக்கள் இந்த மெட்டுகளை மாணவர்களுக்குப் பரப்புவார்கள்.
மேற்கண்டவாறு நடந்தால் சந்தோஷம் தான். ஒரு குறுந்தட்டை வாங்கி என் அக்கா பையனுக்குத் தரவுள்ளேன்.(கொக்குப் பற பற என மழலை மொழியில் பாடிக் கொண்டிருக்கிறான்)
எல்லாரும் பொழிப்புரையைப் படிக்க உதவியாக இருக்கும் விதத்தில் பின் வரும் தகவல் உதவியாக இருக்கும் என நம்புகிறேன். வலைதள முகவரி http://www.tamilvu.org/coresite/html/cwhomepg.htm ல் உள்ள நூலகம்
இசைத் தொகுப்பில் உள்ள பாடல்- திருவாசகத் தொகுப்பில் இடம் பெறும் தலைப்பு
1.பூவார் சென்னி மன்னன் - 45. யாத்திரைப் பத்து
பொல்லா வினையேன் - 1. சிவ புராணம்
பூவேறு கோனும் - 10. திருக்கோத்தும்பி
உம்பர்கட்கு அரசே - 37. பிடித்தப் பத்து
முத்து நல் தாமம் - 9. திருப்பொன் சுண்ணம்
புற்றில வாழ் - 35. அச்சப் பத்து
Santhosh Guru 19 years ago · 0 Likes
@ரவி: தமிழ் இணைய பல்கலைக்கழக சுட்டிக்கு மிக்க நன்றி.
@வினோத் : :-)
@சஞ்சீத் : “fails to deliver what it promises”. நீ என் கருத்தை ரொம்ப சிம்ப்ளிஃபை செய்துவிட்டாய் :(. நான் அந்த அடிப்படையில் எழுதவில்லை. Promise is most given when the least is said
ரவிசங்கர் 19 years ago · 0 Likes
Meaning of thiruvasagam songs sung by ilayaraja are now available at http://ta.wikibooks.org/wiki/திருவாசகம்
இளையராஜா இசையமைத்த திருவாசகப்பாடல்களுக்கான பொருள் தரும் இணைய முகவரி
http://ta.wikibooks.org/wiki/திருவாசகம்
Santhosh Guru 19 years ago · 0 Likes
Thanks a lot, Ravi !!!
karhikeyan 8 years ago · 0 Likes
No words