ஜனகணமன : வலைப்பூ

சமீபத்தில் மாலன் எழுதி வெளிவந்த ஜனகணமன குறுநாவல் பற்றிய என் வாசிப்பு அனுபவம்.

தமிழில் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தினை பின்ணணியாகக் கொண்ட நாவல் என்றதும் இதன் மேல் ஆர்வம் பிறந்தது. ஏற்கனவே டாமினிக் லேப்பியர் மற்றும் லேரி காலின்ஸின் , நள்ளிரவில் விடுதலை நூலைப் படித்து அதில் பலநாட்கள் கட்டுண்டு இருந்தேன். அதில் உள்ள அத்தியாயத்தினை படிப்பது, முடித்தவுடன் அந்த சம்பந்தமாக ஹே ராம் படத்தில் வரும் காட்சிகளை ஓட்டிப் பார்ப்பது என்று ரொம்பவும் ரசித்து படித்தேன். ஹிண்டு பத்திரிக்கையின் விமர்சனத்தில் வேறு இதைப் பற்றி வெகுவாக சிலாகித்து எழுதியிருந்தார் ஒருவர். ஆகையால் சென்ற சனியன்று நியு புக்லேண்டில் இந்த புத்தகத்தினை வாங்கினேன். இரு அமர்வில் படித்து முடித்தேன். கொஞ்சம் அதிகமாகவே எதிர்ப்பார்த்த எனக்கு மிஞ்சியது ஏமாற்றமே.

இதற்குக் காரணம், முன்னுரையில் ஆசிரியர், இந்த புத்தகத்தினை எழுத உதவியாக இருந்த நூல்கள் எனக்குறிப்பிடும் நள்ளிரவில் விடுதலை என்ற நூலினை ஏற்கனவே படித்ததால் தான். அதிகமான விவரணைகள் இல்லாமல், கதையினை தெளிவாகவும், மிக வேகமாகவும் நடத்திச் செல்கிறார் ஆசிரியர். கதை விறுவிறுப்போடு போகும் தருணத்தில், பதிமூன்றாம் அத்தியாத்தில் வரும் ஒரு ஃப்ளேஷ்பேக், விறுவிறுப்பினை சற்றே குறைக்கிறது, மற்ற எந்த இடத்திலும் தங்கு தடையின்றி ராஜ்தானி போல் சர்ரென்று பறக்கிறது.

ஹே ராம் படத்தில், காந்தியைக் கொல்ல நினைத்து பிறகு காந்தியவாதியாகும் பாத்திரத்தினை, சாகேத ராமனாக அருமையாக நுழைத்து அந்த பாத்திரத்தின் மூலம் காந்தியின் பெருமையினை சொல்ல நினைத்தது கமலின் முயற்சி. ஆனால் மாலன் காந்தியின் பாதுகாப்பு அதிகாரியாக ஒரு போலீஸ் அதிகாரியாக ரமணனை நுழைத்து அவர் மூலம் சம்பவங்களைக் காட்டுகிறார். பாத்திரங்களின் சம்பாஷணைகள் அனைத்தும் ரொம்ப சரளமாகவும், நம் இப்போது பேசுகின்ற பாணியில் இருப்பது கதைக்கு வெகு லகுவாக நகர்த்திச் செல்கிறது.

இந்த புத்தகத்திற்கு ஆசிரியர் எழுதிய முன்னுரையில் தன் இளவயது சம்பவத்தினை நினைவுபடுத்திகிறார். அதில் அவர் கூறும் கருத்துதான் மகாத்மாவின் மாண்புக்கு ஒரு சிறிய சான்று. அது என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு நாள் சாப்பாட்டு மேஜையில் அவர் குடும்பத்தினர் காரசாரமாக காந்தியினைப் பற்றி விவாதித்திக் கொண்டு இருக்கின்றனர். ஆசிரியர் (மாலன்):

காந்தி ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத பாஸிஸ்ட் என்றும், அவரொத்த வயதினர், காந்தி ஒரு நம்பிக்கை துரோகி என்றும், அவர் ஒரு ஹிப்போகிரேட் என்றும், அவர் ஒரு மோசமான கணவர் என்றும் பொரிந்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது நேருவைப் பற்றியும், இந்திரா காந்தியைப் பற்றியும், ராஜாஜியினைப் பற்றியும் எழுந்த இதைவிட கடுமையான விமர்சனங்களுக்கு நெத்தியடி கொடுத்த அவருடைய அன்னை, போங்கடா… என்று ஏதோ சொல்ல வாய் திறந்தார். வார்த்தை வராமல் முகம் சிவக்க, கண்கள் கலங்கி விசும்பி அழுதார். துக்கம் தொண்டையைக் கவ்வியிருந்தது. காந்தியை ஓர் அரசியல்வாதியாகப் பார்க்கவில்லை. வாழ்விக்க வந்த எம்மான் என்று தெய்வமாகப் பார்த்தனர். அவருடைய அரசியல் நேர்மையும், சுயநலமின்மையும் impeccable.

ஆனால் பின்னட்டையில் இருந்த ஒரு கருத்து என்னை சங்கடப் படுத்தியது, எனக்கு பிடிக்கவில்லை. முதன் முதலாக, அரசியலோடு மதத்தைப் பிணைத்து நடத்தியவர் காந்தி. அந்த அரசியல் அவரைச் சாப்பிட்டது. கல்கி ராஜேந்திரன் இப்புத்தகத்தின் முன்னுரையில் சொன்னது போல, காந்தி அரசியிலையும், இறையுணர்வையும் பிணைத்தாரே அன்றி, மதத்தினை அல்ல. ஆனால், இதற்கு ஆசிரியரின் பதிலோ இது மிகவும் சப்ஜக்டிவ் என்று இருக்கும் எண்ணுகிறேன்.

என்னைப் போல ஹே ராம் படத்தினை ஐம்பது தடவைக்கு மேல் நீங்கள் பார்க்கவில்லையென்றால், நள்ளிரவில் விடுதலை என்ற புத்தகத்தினை படிக்கவில்லை என்றால், இந்த புத்தகம் உங்களுக்கு இது பிடிக்கலாம்.

(ஜனகணமன; ஆசிரியர் : மாலன் ; வெளியீடு: கிழக்கு பதிப்பகம், சென்னை; விலை : நாற்பது ரூபாய்)

நன்றி : வலைப்பூ


Date
August 20, 2004