வலைப்பூ

அடுத்த ஒருவாரத்திற்கு வலைப்பூ பத்திரிக்கையின் ஆசிரியராக நான் பணியாற்றப் போகிறேன். அதற்காக எழுதிய சில பதிவுகள், என் பதிவிலும் நான் இடுகிறேன். வலைப்பூவிற்காக என்னைப் பற்றி நான் எழுதியது.

Disclaimer : இது கொஞ்சம் சுயதம்பட்டம். சுயதம்பட்டத்தை வெறுப்பவர்கள், இதை தவிர்த்துவிடலாம்.

இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஸ்டைல்ல சொல்லனும் என்றால், சென்ற ஜூன் மாதம், சூரியனைச் சுற்றி இருபத்திமூன்று தடவை பயணம் செய்துவிட்டு, இருபத்திநான்காவது சவாரியை மேற்கொண்டுள்ளேன்.

சேலம் அருகே உள்ள பவானி என்னும் ஊரில் பிறந்தேன். சிதம்பரத்திலும், கடலூரிலும் பள்ளி படிப்பு. தஞ்சாவூரில் பொறியியல் இளங்கலைப் படிப்பு. கடந்த இரண்டு வருடமாக சென்னையில் போலீஸ்காரர்களுக்கு போட்டியாக தொப்பை வளர்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளேன் .

நான் ஒரு நல்ல சினிமா பைத்தியம். நல்ல திரைப்படங்கள், விரும்பிப்பார்ப்பேன், நண்பர்களிடம் அதைப்பற்றி சிலாகித்து விவாதம் செய்வேன். ஆனால் புரிந்து கொள்ள கடினமாக இருக்கும் வகையிலான கலைப்படங்கள் எனக்கு பிடிக்காது.

என் அம்மாவினாலும், என் பள்ளியின் தமிழ் அம்மாவினால் தமிழில் மிகவும் ஆர்வம் வந்தது. பல தமிழ் செய்யுளை சூப்பராக கடம் அடித்து வைத்திருப்பேன். சுஜாதாவால் நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈர்க்கப்பட்டவன், இப்போது சுஜாதாவின் கடுமையான விமர்சகர்களால் வலைப்பூக்களில் ஈர்க்கப்பட்டு உள்ளேன். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், ஜே.ஜே சில குறிப்புகள் போன்ற படைப்புகளை இதுவரை படித்ததில்லை ஆனால் படிக்கும் ஆர்வம் இருக்கிறது. தமிழில், நான் படித்ததில், பிடித்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், சுஜாதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், அ.முத்துலிங்கம். நகைச்சுவை எனக்கு மிகவும் பிடித்தது. கிரேஸி மோகன் இப்போது எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவையாளர். சோவின் நக்கலும் நையாண்டியும் எனக்கு பிடிக்கும். இதைத் தவிர எல்லோரையும் போல் கடவுள் பற்றி எனக்கும் கேள்வி எழுந்தது, வேத்தாத்ரி சிந்தனைக் கூடத்தில் விடை கிடைத்து ஓரளவு தெளிவு பிறந்ததனால் கொஞ்சம் ஆன்மீக நாட்டமும் உண்டு.

எப்போது ஒரு நல்ல ரசிகனாகவும், சிறந்த வாசகனாகவும் இருக்க நான் விரும்புகிறேன். நான் உருப்படியாக செய்கின்ற காரியம், என் நண்பர்களோடு இணைந்து மித்ரன் என்ற ஒரு உதவிக்குழுவிற்காக சில வேலைகளை செய்வது. நான் உருப்படியாக செய்யப்போகிற காரியம் தமிழ் மரபு கவிதைக்காக ஒரு compiler.

இந்த வாரம் வலைப்பூவில் சினிமா, பயணம் ஏனைய பிற வெட்டிப் பேச்சுக்களை உங்களிடம் பேச வந்திருக்கிறேன்.

நன்றி : வலைப்பூ


Date
August 16, 2004