திரை உலகில் - ஒரு வாசிப்பு அனுபவம்

சட்ட புஸ்தகமெல்லாம் உன்னோட அப்பா மாதிரி முட்டாளுக்குத்தான்…. எவ்வளவு சட்டம் படிக்கிறியோ அவ்வளவு குழம்பிப் போயிடுவே

புஸ்தகமும் அப்படித்தானோ

கோபால பிள்ளை அவனைக் கூர்ந்து பார்த்தார்

உனக்கு மூளை இருக்கு. புஸ்தகம் உன்னைக் குழப்பும்னு நான் நினைக்கல்லை

  • பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய புலிநகக் கொன்றை என்ற நாவலில், கோபால பிள்ளை என்பவருக்கும் கண்ணனுக்கும் நடக்கிற உரையாடல் இது.

புலிநகக் கொன்றையில் வரும் கண்ணனைப் போல், கொள்கைப் பிடிப்பு இல்லாத கொள்கையில் பிடிப்பு இருப்பவன் நான். எனக்கு மூளையும் இருக்கிறது, இந்த புத்தகம் சில விஷயங்களில் என்னை குழப்பியும் விட்டிருக்கிறது.

வெங்கட் சாமிநாதன் கடந்த நாற்பது வருடங்களாக திரைப்படம் மற்றும் அதை சார்ந்த விஷயங்களினைப் பற்றி எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பே இந்த திரை உலகில் புத்தகம். 1960ல் பார்த்த சிறந்த திரைப்படங்களினைப் பற்றிய அவரது கருத்துக்கள் முதற்கொண்டு கமல் கூறும் எனக்கு முக்கியம் perfection அல்ல excellence” என்பதன் விமர்சனம் வரை உள்ளது இந்த கட்டுரைத் தொகுப்பில்.

வெங்கட் சாமிநாதன் என்ற கலை விமர்சகரின் எழுத்துக்களை முதல் முறையாகப் படிக்கும் தமிழ் இலக்கிய அறிவிலி நான். இப்புத்தகம் படிக்க ஆரம்பிக்கும் போது நான் வெ.சா பற்றி அறிந்திருக்கவில்லை. பின்னர் அவரைப் பற்றி இணையத்தில் மேய்ந்த பிறகு தான் அவருக்கு என்று இருக்கிற ஒரு high critic படிமம் எனக்கு தெரிந்தது. இந்த புத்தகமும் அந்த வகையினைச் சார்ந்ததே. இக்கட்டுரைத் தொகுப்பு, என்னை திரைப்படம் என்ற கலையினைப் பற்றி ஒரு நல்ல அகத்தாய்வினை செய்யவும் தூண்டியது.

இந்தப் புத்தகத்தில் உள்ள பொதுவான கருத்துக்கள் சில:

அமெரிக்க திரையுலகமும், தமிழ் திரையுலகினைப் போல் வணிக நோக்கம் கொண்டதே. புதிய பாதகளை, புதிய சொல்முறைகளை, புதிய உலகங்களை அறிமுகப்படுத்தும் செயல்பாடுகளைக் காண நாம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும், ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், ஸ்பெயின் என்றுதான் தேடிச் செல்ல வேண்டியிருக்கும்.

தமிழ் சினிமா என்பது, இன்னமும் நாடகத் தன்மையிலிருந்து முழு விடுதலை பெறாமல், அளவுக்கதிகமான நார்சிஸத்தோடும், கலையினை பாராட்டாமல், கலைஞர்களையும் தொழில் நுணுக்கத்தினையும் மட்டுமே அதிகமாக புகழ்ந்து, ஒரு சகதியில் உழன்று கொண்டிருக்கிறது.

(மேற்சொன்ன இரு கருத்துக்களிலும் விதிவிலக்குகள் நிறையவே உண்டு)

இப்புத்தகம் என்னை குழப்பியது என்பதற்கான காரணங்கள் :

சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம் மட்டுமே. அதில் நாம் கருத்து சொல்கிறேன், புரட்சி செய்கிறேன் என்றால் வேலைக்காவாது. ஏனென்றால், உழைத்து களைத்து வரும் மக்கள், சந்தோஷப்படுவதையே விரும்புகிறார்கள் என்று எனக்கு புகட்டப் பட்டதையே நம்பியிருந்தேன். ஆனால் எளிய விவசாயக் குடும்பங்களை சேர்ந்தவர்கள், நாம் பாமரர் என்றும் அவர்களுடைய மகிழ்ச்சிக்காகத்தான் படம் எடுக்கிறேன் என்று நினைக்கும் பொதுமக்களுக்கு எத்தகைய உயர்ந்த ரசனைத்திறன் உள்ளது என்பதை கர்நாடகாவில் உள்ள கே.வி.சுப்பண்ணா, தன்னுடைய கிராம மக்களுக்கு உலகின் தலைசிறந்த திரைப்படங்களை வெளியிட்டு, மக்கள் அதனை மிகவும் விரும்பி ரசிக்கும் திறனுடையவர்கள் என்று காட்டியுள்ளார்.

மேலும் நம் தமிழ் சினிமா நாடகத்தன்மையிலிருந்து விலகாமல் இருக்கிறது என்பதற்கும் பல உதாரணங்களை நாம் சொல்ல முடியும். யதார்த்தம் என்பதன் சுவடே இல்லாமல், மலை உச்சியிலிருந்து தள்ளிவிடும் முன்னர் ஐந்து நிமிட சம்பாஷணைகள். கோபம் வந்ததும் நரம்புபுடைக்க, கண்கள் சிவக்க, வசனங்களுக்கு நடுவில் அவ்வப்போது மூச்சுவிட்டுக்கொண்டு பேசும் நம் கதாபாத்திரங்கள். அந்த காலத்தில் திருவிழா போது கரகாட்டம், காவடியாட்டம் ஆடுவார்கள். நம் திரைப்படத்தில் அரைமணி நேரத்திற்கு ஒரு முறை இப்படி சேஷ்டைகள் வந்து போகின்றன. இதைப்போன்று ஒப்பீடு செய்து கொண்டே போகலாம். ( விளம்பரத்தில் கூட, டி.வியில் வரும் குங்குமம் இதழ் விளம்பரம் என்பது தலையில் கூடை சுமந்து கொண்டு, கீரைம்மா, கீரை என்று விற்கும் யுத்தி உடையது. ஆனால் Hutch விளம்பரமோ கவித்துவமும் அழகுடனும் சேர்ந்து அமைதியாக Wherever you go, our network follows” என்று சொல்லும் யுத்தி உடையது )

சரி இவ்வாறு ஒப்பீடு செய்துகொண்டே, நம்மிடை நல்ல சினிமாக்கள் குறைவு என்று தெரிந்துவிட்ட பிறகு, எவ்வாறு ஒரு நல்ல திரைப்படத்தினை நாம் கண்டுகொள்வது. ஆசிரியர் சொல்கிறார்

திரைப்படத்திற்கு ஒரு கதை வேண்டும் என்று ஒரு சாஸ்திர நியதியும் கிடையாது. ஒரு கருத்து, உணர்ச்சியின் ஒரு இழை அல்லது இழைகளின் தொகுப்பு, அர்த்தம் மிகுந்த, ஆனால் தன்னுள் ஒரு கதையினைக் கொண்டிராத வாழ்க்கையின் ஒரு பகுதி எல்லாமே திரைப்படத்திற்கு உகந்த பொருட்கள் தான்

இப்புத்தகத்தில் இருந்த கட்டுரைகள் பற்றிய என் கருத்துக்கள் :

ஒரு வேகப் பார்வையில் மற்றும் ஆரம்ப குறிப்புகள் கட்டுரையில் நான் மேலே கூறியுள்ள கருத்துக்கள் மிக அழுத்தமாக த்வனிக்கின்றன. ஸர்ஜி ஐஸன்ஸ்டைன், ஆர்ஸன் வெல்ஸ், சத்யஜித்ரே போன்றவர்கள் மீது அபார மதிப்பினை கொண்டிருக்கிறார் ஆசிரியர். சிவாஜியின் theatrical melodramaவினையும், ஸ்ரீதர் மற்றும் பாலச்சந்தரின் திரைப்பாணியினையும், கமல் ஸார் போன்றவர்களையும் கிழி கிழி என்று கிழிக்கிறார். இக்கட்டுரைகளில் உள்ள கருத்துக்கள் உண்மைதான் என்றாலும், அவை அனைத்தும் தமிழ் சினிமாவின் மீது ஒரு அளவுக்கு அதிகமான பெஸ்ஸிமிஸ்டிக் பிம்பத்தினை கொடுக்கிறது. ஆனால் ஒருவகையில் அந்த பெஸ்ஸிமிஸ்டிக் படிமமும் உண்மைதானா என்று சந்தேகப்படவும் வைக்கிறது.

ஒரு படம் ஒரு பார்வை என்ற கட்டுரையில் ஜெயகாந்தன் இயக்கிய உன்னைப் போல் ஒருவன் பற்றி மிக நீளமான ஒரு ஆய்வினைக் கொடுத்துள்ளார். திரைப்படம் என்பதின் உயிரை அறிந்து தமிழில் வந்த முதல் உருப்படியான படம் என்று உச்சி முகர்ந்துள்ளார். (தமிழில் ஜெயகாந்தன், பாலுமகேந்திரா, ஜெயபாரதி, பூமணி தவிர அனைத்து இயக்குநர்களையும் சாடியுள்ளார். அதிலும் ஸ்ரீதர், பாலசந்தர் மற்றும் மணிரத்னத்தினை பற்றி அவரளவில் காழ்ப்புணர்ச்சியில்லாமல் கடுமையாக சாடியுள்ளார்.)

கார்டியாக் என்ற ஜெர்மன் திரைப்படத்தினைப் பற்றி சொல்லும் போது Novelle Vague (புதிய அலை) என்ற திரைப்பட சித்தாந்தத்தின் பின்ணணியினைப் பற்றியும், அந்த திரைக்கதையினைப் பற்றியும் மிக ஆழமான, மிகவும் விரிவான ஆய்வினைக் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவும் அரசியலும் என்ற கட்டுரையில் மிகவும் தெளிவாகவும், ஆழமாகவும் எம்.ஜி.ஆர் என்ற ஒரு phenomenon எப்படி தமிழ்நாட்டில் சாத்தியப் பட்டது என்றும், மற்ற மாநிலங்களில் பிறர் அவரைப் போல் முயன்று ஏன் தோற்றார்கள் என்று ஒரு விரிவான, வியக்க வைக்கின்ற ஆய்வினை கொடுத்துள்ளார். இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கட்டுரை இது.

ஒரு நீண்ட பரிச்சயம் என்ற கட்டுரை இங்கமார் பெர்க்மேன் (இங்க்ரிட் பெர்க்மேன் அல்ல ;-) ) பற்றிய ஒரு அறிமுக கட்டுரை எனக்கூறலாம். பெர்க்மேனின் The Seventh Seal மற்றும் Virgin Spring போன்ற படங்கள் பற்றிய ஒரு நல்ல அறிமுகத்தினை தருகிறது.

ஐஸன்ஸ்டைன், பாவ்லாவ், ஜப்பானிய சித்திர எழுத்துக்கள் என்று கட்டுரை மிகவும் அருமை. பேட்டில்ஷிப் பொட்டெம்கின் படத்தின் இயக்குநர் ஸர்ஜி ஐஸன்ஸ்டைன், தான் திரைப்பட கலையின் ஆன்மாவினை அறிந்துகொள்ள உதவியாக இருந்த ஜப்பானிய சித்திர எழுத்துக்கள் பற்றியும், இவான் பாவ்லாவின் சித்தாந்தத்தின் பாதிப்பினைப் பற்றி அருமையாக விளக்குகிறார்.

கலை நோக்கு, தொழில் நுட்பம், தேடல் , கலை இயக்குநரின் வேலை என்ன ?” , பெருமைகளும் சிறுமைகளும் போன்ற கட்டுரைகள் உலகத்தமிழ் இதழுக்காக வெளியானவை. இந்த மூன்று கட்டுரைகள் சமீபத்தில் எழுதியவை, முந்தைய கட்டுரைகளில் இருந்த acerbity இதிலும் குறையவில்லை என்றாலும் கருத்துக்கள் கொஞ்சம் dilute செய்யப்பட்டுள்ளன.

மணிரத்னத்தின் சினிமா, அகிரா குரஸாவாவின் இகுரு , பீர் முகமதுவின் - திரைப்படம் ஒரு வாழும் கலை போன்ற நூல்கள் குறித்து தன் விமர்சனங்களினை தந்துள்ளார். இவற்றில் பீர் முகமதுவின் புத்தகத்தினைப் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

திரைப்பட விழாவினைப் பற்றிய உரையாடல்கள் மற்றும் விமர்சனங்கள் எனக்கு Greek and Latin போல தோன்றியது. காரணம் ஆசிரியர் குறிப்பிடுகின்ற இயக்குநர்கள் மற்றும் திரைப்படங்கள் பற்றி நான் கேள்வி பட்டதே இல்லை (எம் கலை/இலக்கிய அறிவு அப்படி). ஆனால் ஒரு திரைப்படத்தினை எப்படியெல்லாம் பார்க்க வேண்டும் என்று நீங்கள் தேடிக் கொண்டிருந்தீர்கள் என்றால் இவ்வுரையாடல்களில் உங்களுக்கு விடை கிடைக்கலாம். திரைப்படமோ அல்லது எந்த ஒரு கலைப்படைப்போ ரசிகனை சுண்டியிழுத்து கட்டிப்போட வேண்டும், அப்படி இல்லை என்றால் ரசிகனிடத்திலோ அல்லது படைப்பிலோ எதோ பிரச்சினை (அந்த பிரச்சினை சரியா தவறா என்பது முக்கியமல்ல) என்ற கொள்கையினை கொண்டவன் நான். ஆகையால் இந்த உரையாடல்கள் ஒரு vicariousயாக உணர்ச்சிகளை அனுபவிப்பது போன்ற தோற்றத்தினை எனக்கு தந்ததால், என்னை இவ்வுரையாடல்கள் அவ்வளவாக கவரவில்லை.

இந்த புத்தகத்தில் இருந்து takeaways மற்றும் to-do list என்று பார்த்தால் :

  1. ஸர்ஜி ஐஸன்ஸ்டைனின் பேட்டில்ஷிப் பொட்டெம்கின், இங்மார் பெர்க்மெனின் செவந்த் சீல், குராஸாவாவின் ரஷோமான், சத்யஜித்ரேவின் பதேர் பாஞ்சாலி, ஃப்ட்ரிக்கோ ஃபெலினியின் லா டோல்ஸ் விடா, ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன், ஆர்ஸன் வெல்ஸின் சிட்டிஸன் கேன், அக்ரகாரத்தில் கழுதை படங்களைப் பார்க்க வேண்டும்.

  2. பீர் முகமதுவின் - திரைப்படம் ஒரு வாழும் கலை புத்தகத்தினைப் படிக்க வேண்டும் (சென்னையில் எங்கு தேடியும் இது கிடைக்கவில்லை :( )

  3. வெ.சா விதிவிலக்கு என்று கருதுகிற தமிழ் படங்களான திக்கற்ற பார்வதி, தாகம், அவள் ஒரு தொடர்கதை மற்றும் நந்தனார், வள்ளித்திருமணம், பவளக்கொடி போன்ற இசைப்படங்களையும் பார்க்க வேண்டும்.

இந்த புத்தகத்தில் குறை என்று பார்த்தால் :

எழுத்துப்பிழைகளும் அச்சுப்பிழைகளும் நிரம்பியுள்ளது (கொஞ்சம் அதிகமாகவே). நினைத்திருந்தால் காவ்யா பதிப்பகத்தார் எளிதில் சரி செய்திருக்கலாம்.

மேலும், பல கட்டுரைகளில் உள்ள சொற்றொடர்களின் கட்டமைப்பு, தலையினைப் பிய்த்துக் கொள்ள வைக்கிறது. சில சமயம் மூன்று அல்லது நான்கு முறைபடித்தால் மட்டுமே (சில சமயம்) விளங்குகிறது. (எடுத்துக்காட்டு: கார்டியாக்குக்கு நகைக்கலையில் அல்லாது வேறு எதிலும் ஈடுபாடு கிடையாது. தன் மாளிகையை விட்டு, அநேகமாக அவன் வெளியே போவதே அவன் வழியில் கார்ட்டியாக்குக்கு தன் மகளிடம் அன்பும் பாசமும் உண்டு)

திரைப்பட விமர்சனம், திரைப்பட விழா விமர்சனம், திரைப்பட புத்தகங்களின் விமர்சனம் என்று இப்புத்தகத்தினை பிரித்திருக்கலாம்.

தமிழ் சினிமாவின் 80 ஆண்டு கால வரலாற்றில் ஒரு நல்ல நடிகனை நாம் தமிழில் கண்டதில்லை. ஒரு நல்ல திரைப்படத்தினை நாம் பெற்றதில்லை. நம் வாழ்வோடு உறவு கொண்ட அர்த்தமுள்ள திரைப்படத்தை தந்ததில்லை. பத்தாயிரக் கணக்கிலான அந்த அம்பாரக் குவியலில் சினிமா என்ற சாதனத்தின் பொருள் தெரிந்து இனம் காணக்கூடிய ஒன்றுகூட நமக்கு கிடைக்கவில்லை என்றும் வெதும்புகிறார் வெ.சா. தமிழ் சினிமா வெ.சா வெறுக்கும் அளவுக்கு அவ்வளவு மோசமா என்ன ?. எனக்கு விடை தெரியவில்லை.

(திரை உலகில் - வெங்கட் சாமிநாதன். காவ்யா வெளியீடு. விலை : 85 ரூபாய்)


Date
December 14, 2004