இரு புத்தகங்கள் - ஒரு பார்வை
நான் இந்த வருடம் படித்ததில் சிறந்த, மிகவும் பிடித்த புத்தகங்கள் எவை என்று அசைப்போட்டுக் கொண்டிருந்தேன். பிஏ.கிருஷ்ணன் எழுதிய புலிநகக் கொன்றை, ஆங்கிலத்தில் மார்க் ஹட்டன் (Mark Haddon) எழுதிய The Curious Incident of the Dog in the Night-Time . இந்த இருநூல்களும் புனைவிலக்கிய (fiction) வகையினை சார்ந்தவை, ஆனால் புனைவு மட்டும் இல்லாமல் உண்மைச் சம்பவத்தை, அனுபவங்களை புனைவு என்னு சட்டை போட்டு கொண்டு சொல்பவை. என்னை மிகவும் கவர்ந்த, இந்த இருநூல்கள் பற்றிய சில கிறுக்கல்கள் (விமர்சனங்கள் அல்ல) :
The Curious Incident of the Dog in the Night-Time - Mark Haddon:
இது ஒரு சிறுவனைப் பற்றிய புத்தகம். இந்த அறிமுகம் போதும் என நான் எண்ணுகிறேன். இந்த புத்தகத்தினை படிக்கும் முன்னால் இதன் கதை அல்லது கதைக்களம் பற்றி முன்கூட்டியே அறியாமல் படியுங்கள். நிச்சயமாக உங்களுக்கு ஆச்சரியம் தரும். கொஞ்சம் அதிகமான இளகிய மனம் உள்ளவர்களை இப்புத்தகம் அழவைத்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன். பலர் இதை வேகமாக முடிக்காமல், வேண்டுமென்றே மெதுவாக, இருநூறு சொச்ச பக்கங்களை ஒரு மாதமாக படிப்பதாகவும் அறிகிறேன். என் இலக்கிய அறிவில், இந்த புத்தக ஆசிரியர் மிகவும் “வித்தியாசமான” ஒரு கதை சொல்லும் உத்தியைக் கையாண்டுள்ளார்.
(Spoiler: ஆஸ்பர்ஜர்ஸ் சிண்ட்ரோம் (Asperger’s Syndrome) என்ற வகையான ஆட்டிஸத்தினால் (autism) பாதிக்கப் பட்ட சிறுவன், கிறிஸ்டோஃபர். மிகவும் புத்திசாலி. அவனுடைய எதிர்வீட்டில் இருந்த நாய் ஒன்று கொலை செய்யப்பட்டுள்ளது. அதை துப்பறியும் வேலையில் இறங்குகிறான் அவன். பல கசப்பான உண்மைகளை அறிந்து கொள்ள நேர்கிறது. சில உண்மைகள் மனதை உருக்கியும் உலுக்கியும் விடுகிறது. We are blessed என்றும் உணரவைக்கிறது, கிறிஸ்டோஃபரைப் பார்த்து பொறாமை கொள்ளவும் வைக்கிறது)
புலிநகக் கொன்றை - பிஏ.கிருஷ்ணன் :
இந்த நூலைப் பற்றி சொல்லும் முன்னர், இந்த நூல் பற்றிய சில சுட்டிகளை முதலில் தரவேண்டும்.
- அ.முத்துலிங்கம் எழுதிய வாசிப்பு அனுபவம்
- இரா.முருகன் எழுதிய ஒரு அறிமுகம் மற்றும் நாவலசிரியருடன் ஒரு உரையாடல்
- கே.வி.ராஜா மற்றும் ஹரன் பிரசன்னா எழுதிய வாசிப்பு அனுபவங்கள்
- ஜெயமோகனுக்கும் நாவலாசிரியருக்கும் நடந்த நீண்ண்ண்ண்ட (ஆனால் ஆரோக்கியமான) அஞ்சல் விவாதம்
இந்த நாவலின் கதையினையும் நான் சொல்லப்போவதில்லை, மேலே உள்ள சில சுட்டிகளில் கதையினை புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள்.
இந்த நாவல் படித்து முடித்த பின்பு, தோன்றிய எண்ணம். அம்மாடி, தமிழ்நாட்டின் வரலாறே சில பக்கங்களில், பல்வேறு பார்வைகளில், மிக எளிமையாக, அழகியல்தன்மை மாறாமல் படித்த திருப்தி. மிக அதிக அளவில் விவரணைகள் இல்லாமல், சம்பாஷணைகளாலும், நிகழ்வுகளாலும் மட்டுமே இந்த நாவல் நகர்ந்தது தான் என்னை மிகவும் கவர்ந்தது. பல்வேறு கதாபாத்திரங்கள் நம்மையும், நம்மை சுற்றியுள்ளவர்களை ஞாபகப்படுத்துவதால் புத்தகத்தில் எனக்கு ஏற்பட்ட லயிப்பு சொல்லிமாளாது. வரலாற்றில் கொஞ்சம் ஆர்வமும், ஒரு குடும்பத்தில் உள்ள ஆட்களை ஞாபகம் வைத்திருக்கும் அளவுக்கு பொறுமையும் இருந்தால் போதும் இந்த புத்தகம் உங்களை திருப்தி படுத்தும் என்று கட்டாயமாகச் சொல்வேன்.
சரி சரி, நான் ஒதுங்கிக் கொள்கிறேன், இந்த இரு புத்தகங்களையும் இன்னும் இருமுறையாவது நான் வாசிக்க வேண்டும்.