அமதியுஸ்
வொல்ஃப்கேங் அமதியுஸ் மோட்ஸார்ட் என்ற இசைமாமேதை பற்றி மிலோஸ் ·போர்மேன் இயக்கி 1984இல் வெளிவந்த திரைப்படம். இது பீட்டர் ஷாஃபர் எழுதிய நாடகத்தினை அடிப்படையாகக் கொண்டது. இன்றும் ஐரோப்பாவின் பல இடங்களில் இந்த நாடகம் மேடையேறிய படிதான் இருக்கிறது. (இரண்டு மாதம் முன்பு, பாரீஸில் உள்ள ஒரு சப்வேயில் இருந்த அமதியுஸ் போஸ்டரை, என் கேமராவில் பிடித்தேன்)
மோட்ஸார்ட் அனைத்து கலைஞர்களுக்கும், இலக்கியவாதிகளுக்கும் ஒரு ஃபேண்டஸி, ஒரு ஆதர்சம் என்று தோன்றுகிறது. பல படைப்புகள், நாவல்கள், இசை அர்ப்பணிப்புகள், மோட்ஸார்டினை அடிப்படையாக வைத்து வெளிவந்துள்ளது. அப்படிப்பட்ட ஒன்று தான் இந்த அமதியுஸ் படைப்பு.
இசைக்கலைஞர்களுக்கான ஒரு உறைவிடம் என்று வியன்னாவை அனைவரும் புகழ்வார்கள். 1775இல் வியன்னாவின் அரசவை இசைக்கலைஞராக இருந்தவர் அன்டோனியோ சாலியாரி. இவரும் அக்காலத்தில் ஒரு புகழ்பெற்ற இசைக்கலைஞர். இவர் தான் மோட்ஸார்டின் மீது பொறாமைக் கொண்டு, மோட்ஸார்ட்டுக்கு விஷம் கொடுத்து கொன்றவர், என்று வதந்திக்கப்படுபவர். தன் இறுதிநாட்களில் மனநிலைப் பிறழ்ந்து, நான் தான் மோட்ஸார்டைக் கொன்றேன் என்று கூறியவர். இந்த சாலியாரியின் பார்வையில், சாலியாரி என்ற இசையறிவு கொண்டவர் பார்வையில் மோட்ஸார்டின் வாழ்க்கை, அவருடைய சிறப்பு நம் கண்முன் விரிகிறது.
வயதான சாலியாரி, மனநல மருத்துவமனையில் பியானோ வாசித்தபடி இருக்கிறார். அங்கு வரும் பாதிரி ஒருவர், சாலியாரியிடம் பேச்சு கொடுத்து, confess செய்ய முயற்சிக்கிறார். அப்போது சாலியாரி அவரை ஏளனத்துடன் பார்த்துவிட்டு, தன் கருத்தினை வலியுறுத்த, தன்னுடைய கதையினை அப்பாதிரியிடம் கூறுகிறார். அவருடைய சிறுவயது, அவருக்கான இசையார்வம், ஆனால் அவர் தந்தை அதை ஊக்குவிக்காதது, அதே சமயத்தில் சிறுவயது மோட்ஸார்ட் தேவாலயங்களிலும், அரசவையிலும் பியானோ வாசிப்பது, வயலின் வாசிப்பது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளது என்று கதை நீள்கிறது.
மோட்ஸார்டின் பெருமை நம் அனைவருக்கும் தெரிந்ததே. உண்மையில் நாம் அனைவரும் மோட்ஸார்ட்டின் ஒரு இசையாக்கத்தையாவது கேட்டிருப்போம். “Happy birthday to you” இசை (இதை மோட்ஸார்ட் தன் ஐந்தாம் வயதில் இசையமைத்தாராம்), டைட்டன் வாட்ச் விளம்பரத்திற்கு வரும் இசை என பல இடங்களில் நாம் கேட்டிருக்கிறோம். அந்த மேதையின் இசையினை, இன்னொரு இசை அறிவாளனாகிய சாலியாரி, அதன் சிறப்பினை விளக்கி நாம் கேட்பது கொஞ்சம் புதுமை.
சாலியாரிக்கு மோட்ஸார்ட்டின் இசைமீது ஒரு மாபெரும் மதிப்பு, வியப்பு. சாலியாரி, இறைவன் இட்ட கட்டளையினால்தான், தான் இசையமைப்பாளர் ஆனதாகவும், சிறந்த இசையாக்கத்தினை படைத்துக் கொண்டிருப்பதாக நினைக்கும் போது, மோட்ஸார்ட்டின் ஒரு இசையாக்கத்தினைக் கேட்க நேர்கிறது. நெகிழ்ந்து போகிறார், அதே சமயம் கடவுளிடம் கோபம் கொள்கிறார், இப்படிப் பட்ட இசையினை தன்மூலம் வெளியிடாததால். அதுவரை சால்ஸ்பர்க்கில் ஆர்க்பிஷப்பிடன் வேலை செய்து கொண்டிருந்த மோட்ஸார்ட், வியன்னாவின் இசையார்வம் மிக்க, அரசன், புரவலன், யோஸஃப் II இன் அழைப்பின் பேரில், வியன்னாவிற்கு வருகிறார். சாலியாரி மோட்ஸார்ட்டின் மீது வியப்பு கொண்டிருந்தாலும், பொறாமையினால் உதவி செய்வது போல உபத்திரவம் செய்வது என்று கதை செல்கிறது. பல அருமையான, காலத்தால் அழியாத இசைப்படைப்புகளான ஃபிகாரோவின் திருமணம், மந்திரப் புல்லாங்குழல் மற்றும் பலவற்றினை படைக்கிறார். குடியினாலும், ஊதாரித்தனத்தாலும் வறுமையிலும், உடல் நலக்குறைவிலும் உழல்கிறார் மோட்ஸார்ட். உலகத்தின் அனைத்து மேதமைகளும், இளவயதிலேயே இறக்கவேண்டும் என்ற எழுதா விதிக்கேற்ப, தன் முப்பத்தி ஆறாம் வயதில் இறக்கிறார்.
(மோட்ஸார்ட் எப்படி இறந்தார் என்பது ஒரு மர்மமான (அதாவது பல கான்ட்ரவர்ஸி தியரிகள் கொண்ட) விஷயம். சில அவர் குடித்து குடித்து நலத்தை கெடுத்துக் கொண்டார் என்றும், சாலியாரி விஷம் கொடுத்தார் என்றும், கரு மனிதன் ஒருவன் அவரைக் கொலை செய்திருக்கலாம் என்று பல விளக்கங்கள், வதந்திகள் உண்டு.)
திரைப்படம் மிகவும் சுவாரஸ்யாமாக செல்கிறது. அருமையான காட்சியமைப்பு, உடைகள் மற்றும் பிற உபகரணங்கள், அப்படியே இருநூற்றாண்டுகளுக்கு முன் இருந்த வாழ்வை பார்ப்பது போன்ற ஒரு படிமம் தோன்றுகிறது. படத்தில் மோட்ஸாட்டாக நடித்தவர் டாம் ஹல்ச்சே. ஒரு இளம்-தாந்தோன்றித்தனமான மேதையை நம் கண்முன்னே நன்றாகவே நிறுத்துகிறார். ஆனால் அவரை மிஞ்சியவர் சாலியாரியாக நடித்த முர்ரே ஆப்ரஹாம். அட்டகாசமான நடிப்பு. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், மோட்ஸார்ட்டின் இசையினை எழுத்து வடிவில் முதலில் பார்த்துவிட்டு, அதன் இருந்த சிறப்பை அவர் விவரிக்கும் காட்சி மிகப் பிரமாதம். அவருடைய நடிப்பு என்னை அக்காட்சியினை மட்டும் ஒரு பத்து பதினைந்து தடவை பார்த்தேன்.
விமர்சகர்கள் கூறும் குறைகளான கவர்ச்சியான மோட்ஸார்ட் மனைவி, பிறகு மடத்தனமான ஒரு சிரிப்பு to be precise - a giggle, மோட்ஸார்ட்டினை ஒரு maverick genius போல தோன்றவைக்க கொஞ்சம் நாடகத்தனமான characterization போன்ற விஷயங்களை எல்லாம் விட்டுத்தள்ளி, நம்மை ரசிக்க வைக்கிறது இப்படத்தின் திரைக்கதை. மோட்ஸார்ட்டின் மேதமையினை மட்டும் அறிந்து கொள்ளாமல், சாலியாரி என்ற இசைக்கலைஞன், கடவுளை தான் அப்பழுக்கில்லாமல் நம்பியதும், அந்த கடவுள் தன்னை ஏமாற்றிவிட்டு மோட்ஸார்ட்டின் வழியாக இசையினை கொணர்ந்து வஞ்சித்ததுமாக கதை செல்கிறது. படத்தின் இறுதியில் அருமையான வசனம் ஒன்று இருந்தது. மனம் பிறழ்ந்த சாலியாரி, இறைவன் தன்னை வஞ்சித்து, தன் மூலம் சராசரியான இசையினையும், மோட்ஸார்டின் மூலம் அபாரமான, சிறந்த இசையினையும் வெளிப்படுத்தியதாக எண்ணிக்கொண்டிருக்கிறார். தன் கதையினை இது வரை கேட்டுக் கொண்டிருந்த பாதிரியினைப் பார்த்து சொல்கிறார், I will speak for you, Father. I speak for all mediocrities in the world. I am their champion. I am their patron saint. Mediocrities everywhere… I absolve you. I absolve you. I absolve you. I absolve you. I absolve you all.
எழுச்சி, வீரம், பிரம்மாண்டம் போன்ற உணர்வுகள் தான், எனக்கும் மோட்ஸார்டின் இசையினை இப்படத்தில் கேட்டவுடன் தோன்றியது. ஒருவித வசீகரமும், ஈர்ப்பும் உண்டாக்கியது இந்தவித இசை. குறிப்பாக, The Abduction from the Seraglio கேட்டப் போது வந்த பிரமிப்பு, எழுச்சி கலந்த உணர்வினை வார்த்தைகளில் என்னால் கூற இயலவில்லை. சில நாட்களுக்கு முன் தி.ஜானகிராமனின் ஒரு சிறுகதையினைப் பற்றிய ஆங்கில மொழிபெயர்ப்பினை (Message என்ற தலைப்பில்) பற்றி நான் படிக்க நேரிட்டது. (இன்னும் அதன் மூலத்தினை படிக்கவில்லை). அதில் இருந்த அந்த மேற்கத்திய இசையாளர், ·பிலிப் போல்ஸ்கா, நாதஸ்வர வித்வான் பிள்ளையின் இசையினைக் கேட்டு லயித்து நிற்பார் (Pillai is amazed that a Tyagaraja composition yearning for peace should fill a foreigner with that very feeling). அமதியுஸ் படத்தின் சில இசையாக்கத்தினை கேட்கும் போது, எனக்கு அந்த ஃபிலிப்பின் உணர்வு நன்றாகப் புரிகிறது.
மேற்கத்திய செவ்வியலிசையாகட்டும், எந்நாட்டு செவ்வியலிசையாகட்டும் அதில் உள்ள ஜீவனும், வசீகரமும் அனைவரையும் கவரும் தன்மை பெற்றவை. நாம் நம்முடைய receiverஇனை சரியாக இசைத்து வைத்திருந்தால் எவ்விசையினையும் மெய்மறந்து ரசிக்கலாம் என்று எண்ணுகிறேன். அதற்குத் தேவை ஒரு தூண்டுகோல் மட்டுமே. அலுக்க வைக்கும் விவரணைகளைக் கொண்டிருந்தாலும், சோழ மன்னர்களின் வரலாற்றின் மீது அடங்கா ஆர்வத்தை உண்டாக்கிய பொன்னியின் செல்வனைப் போல, மேற்கத்திய செவ்வியலிசை மீது எனக்கு ஆர்வம் பிறந்ததற்கு அமதியுஸ் ஒரு முக்கிய காரணம்.
பின் குறிப்புகள் :
எல்லோரையும் போல நானும், Mozart என்பதை மொசார்ட் என்று தான் உச்சரித்துக் கொண்டிருந்தேன். வியன்னாவில், மொசார்ட்டின் வீடு எங்கு உள்ளது என்று ஒரு அம்மையாரிடம் கேட்டு அவர் விழிக்க, அருகில் இருந்த இன்னொரு பெண்மணி, அவர்கள் மோட்ஸார்ட்டின் வீட்டிற்கான வழியினை கேட்கிறார்கள் என்று கூறி எங்களைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்கள் (நாங்களும் வழிந்துவிட்டு இடத்தை வேகமாக காலி செய்து கொண்டு ஓடினோம்). அதனால் தான் பதிவெங்கும் மோட்ஸார்ட் என்று எழுதியுள்ளேன் . அதே போல, Bach என்பது பாக் இல்லை பாஹ் என்றும், Beethoven என்பது பீத்தோவன் இல்லை, பெத்தோவன் என்றும் மற்றவர்கள் ஏளனம் செய்யாமலேயே அறிந்து கொண்டோம்.
என்னாடா, இந்த மேற்கத்திய செவ்வியலிசை கடியாக இருக்கிறேதே என்று ஆரம்பத்தில் உங்களுக்கு தோன்றுமானால், சில ஸ்டான்லி க்யூப்ரிக் படங்களைப் பாருங்கள். செவ்வியலிசையினை திரைப்படங்களில் அருமையாக பயன்படுத்தியவர் க்யூப்ரிக். குறிப்பாக Eyes Wide Shut படத்தில் செவ்வியலிசையினை பின்ணனி இசையாக பயன்படுத்துவதன் மூலம் காட்சிகளில் அட்டகாசமாக விறுவிறுப்பினை ஏற்படுத்தியிருப்பார். அதைப் போலவே, A Clockwork Orange, 2001 : A Space Odyssey போன்ற படங்களிலும் அந்த பாணி இசையினை நன்கு உபயோகித்திருப்பார். கண்டிப்பாக உங்களுக்கும் ஆர்வம் ஏற்படும்.
மோட்ஸார்டின் இசையினை எந்த எந்த படத்தில் உபயோகித்துள்ளனர் என்று IMDBஇல் ஒரு தேடல் செய்தேன். வந்த ரிசல்ட் ஒரு ஸ்க்ரீன்ஷாட் இது. படத்தினை பாருங்கள் கொஞ்சம் டூ மச் என்று நீங்களே ஒப்புக்கொள்வீர்கள் ;). (இப்போது சரி செய்து விட்டனர், IMDB ஆட்கள் :)) )
Comments (12)
Boston Bala 19 years ago · 0 Likes
too too much-thaan ;-)
-/பெயரிலி. 19 years ago · 0 Likes
நிறையத் தகவல்கள் இருப்பதால் நீண்டபதிவாகத்தானே வேண்டும்? பதிவுக்கு நன்றி. பாத்திரத்தின் சித்தரிப்பினைப் பார்க்கும்போது முர்ரே ஏப்ரகாம் நல்ல தேர்வாகத்தான் இருக்கவேண்டும். கிட்டத்தட்ட நாஸர் போன்ற நடிகர் அவர். நல்லவனா கெட்டவனா என்று சொல்லமுடியாத இரண்டுமே கலந்த பாத்திரங்களும் இரண்டிலே எந்த விதமாகவும் எந்தக்கணத்திலும் மாறக்கூடிய பண்புள்ள பாத்திரமாவும் நடிக்கக்கூடியவர் அவர். Umbreto Eco இன் The Name of the Rose இலே ஸ்பானிஷ் குற்றவிசாரணை Gui ஆக வருவார்; அண்மையிலே Thir13een Ghost இலே வில்லன். கொடூரத்தினை முகத்திலே அப்பிக்கொண்டு வரக்கூடியவர்.
Kannan 19 years ago · 0 Likes
நன்று சந்தோஷ்! //உலகத்தின் அனைத்து மேதமைகளும், இளவயதிலேயே இறக்கவேண்டும் என்ற எழுதா விதிக்கேற்ப//
நானும் இதைப் பார்த்துப் பொறாமைப் பட்டிருக்கிறேன்(!?) இவர்கள் எல்லாம் இப்படிச் சிறுவயதில் சாதித்து இறப்பதை அவர்கள் உழலும் உலகின் mediocrity ஐப் பொறுத்துக் கொள்ள முடியாத தன்மையைக் குறிப்பதாகவும், இறப்பதன் மூலம் இத் தன்மையினால் எழும் arrogance ஐ நம் முகத்தில் அறைவதாகவும் கற்பனை பண்ணிக் கொள்வேன்! எல்லாம் இருக்கட்டும், தகடு கைக்கு சீக்கிரம் வந்து சேரட்டும்…
Narain 19 years ago · 0 Likes
தகடு தகடு எங்க ராசா.. அடுத்தமுறை சென்னைக்கு வரும்போது ஒரு ப்ரெஷ் காப்பி. இப்போதுதான் நீங்கள் தந்த பீத்தோவனை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
பெயரிலி, இதே அலைவரிசையில் நீங்கள் கொஞ்சம் படங்களை சொன்னால், அத்தகடுகளையும் தேட முடியும். முர்ரே ஏப்ரகாம் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். நீங்கள் சான்றிதழ் தந்திருப்பதால், பண்பட்ட நடிகனாக இருக்கவேண்டும். ஆகவே, முர்ரேயின் வேறு படங்கள் இருப்பின் பதியவும்.
இம்மாதிரி பதிவுகளில்தான் மாண்டீயின் அருமை புரிகிறது. Monti we miss you ;-(((
Santhosh Guru 19 years ago · 0 Likes
பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு, நன்றிகள் பல.
பெயரிலி, முர்ரே ஆப்ரஹாம் நடித்து நான் பார்த்த முதல் படம் இது. சந்தேகமே இல்லாமல் இப்படத்தில் சிறந்த நடிப்பு இவருடையது தான். இன்ன பிற தகவல்களுக்கு நன்றி.
கண்ணன், அடுத்த முறை சந்திக்கும் போது (அடுத்த வாரம் :)) ), தகடு நிச்சயம்.
நாராயண், அடுத்த முறை சென்னையில் சந்திக்கும் போது (அடுத்த வாரத்துக்கு அடுத்த வாரம் :)) ), தகடு நிச்சயம் :)). மாண்டி வலைப்பதிவை விட்டுவிட்டு சென்றது மிகவும் unfortunate தான் :(
பா.பா: :))
-/பெயரிலி. 19 years ago · 0 Likes
நாராயண், முர்ரே ஏப்ரஹாம் ஒரு குணசித்திரநடிகர்தான். நட்சத்திர அந்தஸ்து அதிகம் வாய்த்தவரல்லர். அல் பசினோவுக்குப் பெயர் வாங்கித்தந்த scarface இலே நடித்திருக்கின்றார். இன்னும் சில படங்களிலே வந்ததும் போனதும் தெரியாத நேரம் சின்னச்சின்ன வேடங்களிலே பார்த்திருக்கிறேன் (பல மாபியா வகைப்பாத்திரங்கள் & பொலிஸ் பாத்திரங்கள்).
இவரது முகமும் Robert Davi என்ற இன்னொரு நடிகரின் முகமும் இலகுவிலே மாறுபட்டுவிடக்கூடியவை
Thangamani 19 years ago · 0 Likes
நிறைய தகவல்களைத் தந்து, ஆவலையும் தூண்டியது. நன்றி.
அல்வாசிட்டி.விஜய் 19 years ago · 0 Likes
பல காலமாக இந்த படம் கையில் கிடைத்தும் அறிமுகமில்லாததால் பிறகு பார்க்கலாமென தள்ளி போட்டு வந்த படம்…
மறுபடியும் கிடைத்தால் விடக்கூடாது.
Santhosh Guru 19 years ago · 0 Likes
//ஆவலையும் தூண்டியது// - Thanks Thangamani.
//மறுபடியும் கிடைத்தால் விடக்கூடாது.// விஜய், கண்டிப்பாக பாருங்கள். Good intro to Mozart and Western Classical Music.
இராதாகிருஷ்ணன் 19 years ago · 0 Likes
பதிவிற்கு நன்றிகள்!
Vinodh Kumar 19 years ago · 0 Likes
எப்போதும் போல் உங்கள் வலைப்பதிவில் information entropy அதிகமாகத் தான் இருக்கிறது! பாராட்டுகள்! -Vinodh http://visai.blogspot.com
Santhosh Guru 19 years ago · 0 Likes
ராதாகிருஷ்ணன் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி
நன்றி வினோத். Information Entropy, அப்படீங்கிற பதம் நல்ல high-funda தான் :)). ஐசக் அசிமோவோட , தி லாஸ்ட் க்வெஸ்டின் entropyய அடிப்படையா வச்சு வந்த கதையாமே. அதை மாதிரி தமிழ்லயும் நீங்க ஒரு சிறுகதை எழுதுங்க. அப்படியே என்ட்ரோப்பிக்கு தமிழ்ல நல்ல பதம் ஒன்று சொல்லுங்க.