அமிர்தசரஸ், சோளக்கருது, வாகா மற்றும் “நாற்காலிகாரர்”
சென்ற வாரம், ஒரு சுற்றுலாவிற்காக தில்லி மற்றும் அமிர்தசரஸ் நகரங்களுக்கு சென்றிருந்தேன். அமிர்தசரஸிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அட்டாரி-வாகா எல்லை. அந்தப் எல்லைப்பகுதியிலிருந்து லாஹூர் வெறும் இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கே தினமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டுக் கொடிகள், ஒரே சமயத்தில் காலையில் ஏற்றப்பட்டு, ஒரே சமயத்தில் மாலையில் இறக்கப் படுகிறது. அந்த எல்லையில் நடந்த சில கூத்துக்களும், என் அனுபவமும் இங்கே.
அதற்கு முன் ஒரு பீடிகை மற்றும் சுயதம்பட்டம். நாட்டுப்பற்று என்றால் தேசியகீதத்தினை நன்றாக தெரிந்துவைத்துக் கொள்வது, எந்த சூழ்நிலையிலும் நாட்டை விட்டுக்கொடுக்காமல் இருப்பது (தன் நாடு தவறு செய்திருந்தால் கூட) என்று என் நண்பர்கள் பலர் கூறுவார்கள். அதற்கு எதிர்வினையாக நானோ, தேசியகீதமும், பழம்பெருமைகளும் ஒருவன் அறியவேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை, செயலில் உருப்படியாக செய்து காட்டுவதே சிறந்தது என்று நான் வாதிடுவேன். இது அடிக்கடி நிகழும் எங்கள் விவாதங்களில் ஒன்று. சில சமயம் விவாதங்களில் என்னை ஒரு anti-nationalist என்றும், விசால பார்வை என்ற பெயரில் நாட்டுப்பற்று அற்றவன் என்றும் நண்பர்கள் என்னை குறை கூறுவார்கள். சரி விஷயத்திற்கு வருவோம்.
என் பெற்றோர்களோடு அமிர்தசரஸ் பொற்கோயிலை கண்டுவிட்டு, வாகா எல்லைக்கு மாலை சுமார் நான்கு மணியளவில் சென்றோம். கிரிக்கெட் மாட்ச் காணவந்த ரசிகர்கள் போல இந்திய கொடியுடன் அங்கே செம கும்பல். மாலை ஆறு மணியளவில் அங்கே நடக்கவிருக்கும் ஒரு parade க்காகத் தான் இவ்வளவு கூட்டம். ஐந்து மணியளவில் கதவை திறந்து அங்கிருந்த ஒரு பெரிய கேலரியில் அமர வைத்தனர். சுமார் ஆயிரத்தி ஐநூறு பேர் உட்காரும் அளவிற்கு, பெரிதாக இருந்தது.
ஒரு பெரிய இரும்புக் கதவு, அதனருகே ஒரு நுழைவாயில் போன்ற சின்னம். இதுதான் அந்த வாகா எல்லை. எல்லையின் மற்ற பக்கத்தில் மின்சாரம் பாய்கின்ற இரும்பு முள்வேலி நீண்டு இருக்கிறது. இந்திய கேலரியில் இருந்து பார்த்தால் பாகிஸ்தான் நுழைவாயிலும், அங்கே அருகே உள்ள ஒரு சிறிய தோட்டமும் தெரிகிறது. பாகிஸ்தான் பக்கமும் அதைப் போலவே ஒரு கேலரி, ஐநூறு பேர் அமரும் வசதியோடு இருந்தது. ஆனால் ஆண்களும் பெண்களும் தனித்தனி பகுதியில் அமர்ந்திருந்தனர்.
இந்திய கேலரியில் இரண்டு பெரிய ஸ்பீக்கர் வைத்து , பல தேசபக்தி பாடல்கள் hi-volumeல் ஒலித்துக் கொண்டிருந்தது. பலர் கைகளைத்தட்டிக் கொண்டு குழுவாக அதே பாடலைப் பாடிக்கொண்டிருந்தனர். இதுவரை எல்லாமே நன்றாக இருந்தது. அதுக்கப்பறம் தான் ஆரம்பித்தது கூத்து. பாகிஸ்தான் கேலரியில் இதை போன்ற ஒரு ஸ்பீக்கரோ எதுவும் இல்லை. அங்கே அமைதியாக அனைவரும் உட்கார்ந்துக் கொண்டிருந்தனர். இந்திய கேலரியில் ஸ்பீக்கர் அலறிக் கொண்டிருந்த அறையில் இருந்து ஒரு ஆள், கையில் மைக்கோடு வந்தார். உச்சஸ்தாயியில் ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத், சாரே ஜஹான்ஸே அச்சா, வந்தே மாதரம் என்று அவர் சொல்ல, இந்திய மக்களும் சொன்னார்கள். பிறகு பாடல் திரும்ப ஒலிக்கும். இது போல ஐந்து முறை நடந்தது. ஆறவது முறை அனைவரும் கத்தி முடிக்க, பாகிஸ்தான் பக்கதிலிருந்தும் மக்கள் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று கத்தினர் (அங்கே மைக் மற்றும் ஸ்பீக்கர் இல்லை). ஆனால் இங்கிருந்தோ மக்கள், உடனே அவர்களை கேரோ செய்வது போல் “ஊஊஊ…ஹிஹிஹி” என்று கூவினர். இதைப் போலும் ஒரு மூன்று முறை நடந்தது. என் அருகில் இருந்த சில இளைஞர்கள், “முர்தாபாத்..முர்தாபாத்” என்றும் கூவினார்கள். நம் மக்கள் செய்தது கண்றாவியாக இருந்தது.
இது எல்லாம் அடங்கி ஒய்ந்த பின்னர் அந்த கொடியிறக்க நிகழ்ச்சி ஆரம்பித்தது. நம் இந்திய மேஜர் ஒரு, மைக்கில் சென்று எதோ ஒரு கமேன்டை உரக்க கத்தினார். (ந.முத்துசாமியின் “நாற்காலிக்காரர்” என்ற நாடகத்தில் ஒருவர் ராணுவத்தில் கட்டளையிடும் முறையினை கிண்டல் செய்யும் வகையில் “பரே…….ட் தத்தக்….கா புஸ்கா” என்று கத்திவிட்டு, மார்ச் ஃபாஸ்ட் செய்வார். இந்த சமயம் பார்த்து அந்த நாடகம் நியாபகத்தில் வந்து தொலைத்தது). பிறகு இரு நாட்டு வீரர்களும் காலை தலைவரைக்கும் நிமிர்த்தி, மார்ச் ஃபாஸ்ட் செய்து, எல்லைக் கதவுகளை திறப்பார்கள், இரு நாட்டு மேஜர்களும் (மேஜர் என்று தான் நினைக்கிறேன்) ஒரு சமிக்ஞைக்குப் பிறகு கைகுலுக்கி விட்டு, மேலும் சில ஃபார்மாலிட்டீஸ் முடிந்த பிறகு. ஒரே சமயத்தில் கொடியினை இறக்குவார்கள். பின்னர் இரு நாட்டு எல்லைக் கதவுகளும் மூடப்படும்.
எதற்காக இந்த சடங்கு என்று எனக்கு கொஞ்சமும் புரியவில்லை. இந்த கொடியிறக்கத்தினை பார்க்க வரும் மக்களினால் அங்கே சோளக்கருது, பொறிஉருண்டை, கோலா விற்கும் வியாபாரிகளுக்கும், டேக்ஸி ஓட்டுநர்களுக்கும் தான் லாபம். மற்றபடி அதன் மகத்துவம் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.
ஆனால் இது எல்லாம் முடிந்த பிறகு என்னை உருத்தியது, என் அருகில் இருந்த அந்த “முர்தாபாத்” இளைஞர்களும், கேரோ ஆசாமிகளும் தான். எதற்காக இன்னமும் நம் மக்கள், பாகிஸ்தான் மக்களை வெறுக்க வேண்டும். அரசியல்வாதிகளை வெறுப்பதில் வேண்டும் என்றால் அவரவர்களுக்கும் ஒரு நியாயம் இருக்கலாம். மக்களை வெறுப்பதற்கான காரணம் எனக்கு இன்னும் விளங்கவில்லை. நம் தலைமுறையினர் 1947 பிரிவினையினால் ஏற்பட்ட காயங்களை இன்னமும் சொறிந்துக் கொண்டு இருக்கிறார்களா, இல்லை ஒட்டு மொத்த பாகிஸ்தான் மக்களும் தான் காஷ்மீர் பிரச்சினைக்கு காரணம் என்று எண்ணுகிறார்களா?. எனக்கு தெரியவில்லை.
நுட்பமான தகவல் - Engineering Counselling Experience
உங்களுக்கு தமிழ்/தமிழ்நாட்டினை வளர்த்த நல்லவர்களைப் பற்றி அறிய ஆவலா, இந்தியாவில் உள்ள அனைத்து மதக் கடவுள்களின் பெயரைப் பற்றி அறிய ஆசையா, அல்லது சினிமாப் படங்களின் பெயர்களைப் பற்றி தெரிந்து கொள்ள விருப்பமா ? வாருங்கள் சென்னைப் பட்டினத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்திற்கு. படம் போட்டு காட்டி உங்கள் பொது அறிவினை வளர்க்கிறார்கள். ஒரு தம்பியின், பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொண்ட பொறுப்பான அண்ணனின் அனுபவம் இங்கே.
பொறிந்துதள்ளுவதற்கும் நக்கலடிப்பதற்கும் முன்னால் அண்ணா பல்கலைக்கழகத்தின் மிக நேர்த்தியான செயல்முறையினைப் பற்றி பாராட்டியாக வேண்டும். ஒரு அமர்விற்கு நூற்றி ஐம்பது பேர், ஒரு நாளைக்கு ஐந்து அமர்வுகள், இதைப் போல தமிழ்நாட்டில் நான்கு மையங்கள் என அமைத்து சீராக, சிக்கலின்றி, பொறியியல் மாணவர்கள் என்றும் கடமைப்பட்டிருக்க வேண்டிய கலந்தாய்வு நிகழ்ச்சியினை பக்காவாக செய்திருக்கின்றனர்.
ஒரு பெரிய ஹாலில், பெரிய திரையில் காலியிடங்களைப் பட்டியலிட்டு நம்மை உட்கார வைக்கிறார்கள். போதிய மதிப்பெண்கள் இருந்தும் விரும்பிய கல்லூரியில், அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையால் இடம் கிடைக்காத காரணத்தால், அரசியல்வாதிகளின்/அரசியல் கொள்கைகளை குறைகூற வைக்கும் சிந்தனைகள் மாணவர்களுக்கு அனேகமாக இங்கேதான் துளிர்க்கும் என்று நினைக்கிறேன்.
ஒகே. இப்ப மார்க்கெட் நிலவரத்தைப் பற்றி பேசுவோம். இந்த வருட கோர்ஸ்களில் சூடான போனி, ஈ.சி.இ என்கிற எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறைதான். இரண்டாவது ட்ரிப்பிள் ஈ. மூன்றாவது கம்ப்யூட்டர் சயின்ஸ். நான்கவது மெக்கானிக்கல். அடுத்தது வேற எந்த கோர்ஸும் இல்லை என்றால் இந்த ஐ.டி எனப்படும், ஒரு காலத்தில் சூடான போனியாய் இருந்த, தகவல் தொழில்நுட்பம் தான்.
என் தம்பியின் நண்பனுடைய தந்தை இன்னொரு சக தந்தைக்கு அறிவுரை சொல்கிறார்,
“இங்க பாருங்க சார் ! ஐ.டிங்கிறது எப்படின்னா ஏரோப்பிளேன் ஓட்ற மாதிரி. ஏரோப்பிளேன் ஓட்றத்துக்கு அதனோட ஸ்பேர் பார்ட்ஸ் பத்தில்லாம் பைலட்டுக்கு தெரியாதுல்ல. அதுமாதிரி தான். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சா டீப்பா கம்ப்யூட்டர் பத்தி தெரிஞ்சிக்க முடியும், ப்ளேன ரிப்பேர் பண்ற மாதிரி. ஆனா ஐ.டி ல அதெல்லாம் முடியாது. அதுக்கும் மேல, ஏன் சார் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வைக்க ஆசைப்படுறீங்க, இப்பல்லாம் ஊர்ல மூலைக்கு மூலை கம்ப்யூட்டர் ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட் வந்துடுச்சி. ஈ.சி.ஈ இல்ல ட்ரிப்பிள் ஈ சேர்த்து விடுங்க, அப்படியே சைட்ல கம்ப்யூட்டர் கத்துக்க சொல்லுங்க…. ஈ.சி.ஈ படிச்சா, இன்போசிஸ், டி.சி.ஸ், சத்யம், சி.டி.ஸ்ன்னு கேம்பஸ் இண்டர்வியூல கொத்திக்கிட்டு போறாங்க..”
இந்த மாதிரி ஆளுங்களப் பாத்தாலே, அப்படியே என் பீச்சாங்கையினை அவர்கள் மூஞ்சியில் அப்பவேண்டும் என்று எனக்கு கோபம் வரும். என் கோபத்திற்கு காரணங்கள் :
- இதைப் போன்ற டகில் விடும் ஆசாமிகளுக்கும், சில சமயம் சரியா தவறா என்று ஆராயாமல் பரபரப்புக்காக செய்தினை மக்களிடையே, கேவலமாக பரப்ப நினைக்கும் வெகுஜன ஊடகங்களுக்கும் கொஞ்சமும் வித்தியாசம் இல்லை.
- இதைப் போன்ற ஆசாமிகளால், word of mouth என பரவும் செய்திகள் மக்களிடையே தவறான பிம்பத்தினை உருவாக்குகின்றன. தவறான முடிவுகளை மக்கள் எடுக்கின்றனர்.
- இன்போசிஸ், டி.சி.ஸ், சத்யம், சி.டி.ஸ் போன்ற கம்பெனிக்கள் ஏறக்குறைய எல்லா துறை மாணவர்களையும் வேலைக்கு எடுக்கிறார்கள். இந்த கம்பெனிகளில் வேலைப்பார்க்க கணிணி பொறியியல் தேவை என்று இந்த கம்பெனிகளில் உள்ள ஆட்களிடம் சொன்னாலே, விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.
- நான் ஒரு தகவல் தொழில்நுட்பம் படித்த பொறியாளன் , இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஸ்டூடண்ட்.
Myth: தகவல் தொழில்நுட்பம் என்பது கம்ப்யூட்டரில் உள்ள மென்பொருட்கள் பற்றி மட்டு கத்துக்கொடுக்கப்படும் துறை. கணிப்பொறியியல் துறையில், கணிணி பற்றி மிக ஆழமாக கற்றுத் தருவார்கள் இதில் அப்படி கிடையாது.
Reality: தகவல் தொழில்நுட்பம் என்பது கணிப்பொறியியல் பாதி, மிண்ணனு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பாதி என்று சேர்ந்த கலவையிது. கணிப்பொறியியலில் அடிப்படையாகக் கருதப்படும் algorithms, data structure, compiler design, database design, computer organization போன்ற பாடங்களும் உண்டு, ஜிகினா பொருட்களான visual basic, multimedia, java போன்ற பாடங்களும் உண்டு. மிண்ணனு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் அடிப்படையாகக் கற்றுக் கொள்ளும் data communication and networking, signal processing, electronic circuits and microprocessor basics, image processing போன்ற பாடங்களும் உண்டு. இதைத் தவிர, கணிப்பொறியியலிலும், தகவல்தொடர்பு பொறியியலிலும் இல்லாத ஆனால் கணினி பொறியியலில் வடிவமைப்புக்கு மிகவும் தேவையான combinatorial mathematics என்ற அடிப்படையான பாடமும் உண்டு.
இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இதையெல்லாம் (ஒழுங்காகக்) சொல்லிக் கொடுக்கிற வாத்தியார் இருக்காங்களா அதற்கான கட்டமைப்பு இருக்கிறதா என்று முதலில் பார்க்கவேண்டும். அதைவிட்டு விட்டு எப்போதோ வரும் ஒரு கேம்பஸ் இண்டர்வியூக்காக, அந்த மாணவனின் ஆசையினை சிதைக்காமல் இருப்பது நலம்.
அப்பாடா…பொரிந்தாயிற்று… இப்போ கொஞ்சம் காமெடி (அப்ப இவ்ளோ நேரம் சொன்னது என்னன்னு கேட்டுடாதீங்கோ… நான் நொந்துடுவேன்) :
தமிழ்/தமிழ்நாட்டினை வளர்த்த நல்லவர்களைப் பற்றி அறிய ஆவலா, அவுலா என்றேல்லாம் கேட்டுருந்தேன் இல்லையா… அதற்கான விடைகள்.
முதலில் சினிமா : ஜே.ஜே காலேஜ், சேது இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, நந்தா இஞ்சினியரிங் காலேஜ் … பிதாமகன் காலேஜ் ஆஃப் இஞ்சினியரிங் என்று வந்திருந்தால் கோர்வையாக இருந்திருக்கும், சே… இந்த வருசம் அது இல்லை.
அடுத்தது கடவுளும் கடவுளைச் சார்ந்த பெயர்களும் : ஆதிபராசக்தி, கலசலிங்கம், வெங்கடேஸ்வரா, ராஜராஜேஸ்வரி, செயிண்ட்.ஜோஸப், மொகம்மத் சதக், நூருல் இஸ்லாம், தனலட்சுமி என்று ரொம்பவே நீள்கிறது. (தனலட்சுமி காலேஜினை நடத்தும் அந்த பேராசிரியரின் மகளை என் தந்தை சந்தித்திருக்கிறார். அவருடைய பேர் ரூபா. என் தந்தை ரொம்பவே நக்கலாக, “உங்க தம்பி பேரு என்ன செல்வராஜ்ஜா. நல்லா பேரு வச்சிருக்காரு” என்று கேட்டுவிட்டு வந்திருக்கிறார். அந்த பெண்ணோ அர்த்தம் புரியாமல் முழித்திருக்கிறார். )
சரி என் தம்பியின் கதைக்கு வருவோம். சென்னையில் உள்ள வெங்கடேஸ்வராவில் சீட் இருக்கும் என கணிப்பொறி முன் உக்காந்து, கோவிந்தா ஆன பின்னர். என் தம்பிக்கு சிவகாசியில் உள்ள மெப்கோ கல்லூரியில் இடம் கிடைத்தது. (அவனும் இன்பர்மேஷன் டெக்னாலஜி தான் படிக்கனுங்கிறான்… விதி யார வுட்டுச்சி). கலந்தாய்வு முடிந்து வெளியே வந்தோம், எங்கப்பாவிடம் பலர் இது அருமையான காலேஜ், நீங்கள் கவலையேப் படத்தேவையில்லை என்றெல்லாம் சொல்கின்றார். எனக்கு இப்போது தான் கவலையாக இருக்கிறது.
ரீல் சுத்தலாம் வாங்க - Recently Watched Movies
சமீபத்தில் பார்த்த மான்ஸ்டர், அழகிய தீயே பற்றிய என் கருத்துக்கள்
மான்ஸ்டர் !!!
புள்ளி புள்ளியாக முகம் முழுவதும் கொஞ்சம் தேமல், கொஞ்சம் கருப்பும் கொஞ்சம் மஞ்சள் நிறமும் கலந்த கறையோடும், கோணல்மானலாக இருக்கும் பற்கள், கொஞ்சம் சதைப் போட்ட உருவம், கொஞ்சம் ஆண்மைக் கலந்த நடை மற்றும் ஆண் போன்ற பாவனைகள் என இருந்து தொடர் கொலை செய்யும் ஒரு விலைமாது, எய்லோவாக நடித்துள்ளார் சார்லீஸ் தேரோன். அவர்தான் படத்தின் உயிர் நாடி.
கதை என்று பார்க்கப் போனால், அவருக்கு ஒரு பெண் நட்பு கிட்டுகிறது. அந்த பெண்ணோடு தனியாக வாழ்கிறாள். எய்லோவிற்கு விலைமகள் தவிர வேறு வேலை எதுவும் கிடைக்காததால், அதைத் தொடர்ந்து செய்ய முயற்சிக்கிறார். ஒரு நாள் கசப்பான சம்பவம் நடக்கிறது, அதிலிருந்து தப்ப ஒரு கொலை செய்கிறார். பிறகு சந்தர்ப்பங்களால் பல கொலைகள் செய்து போலீஸில் பிடிபட்டு electrocute செய்யப்படுகிறாள்.
கொஞ்சம் மெதுவாக செல்கிறது படம். எய்லோ, அன்பு மறுக்கப்பட்ட சமுதாயத்தால் தான் அந்த நிலைமைக்குள்ளாகி இறக்கிறார், என்பதை நடுநிலைமையில் சொல்ல முயற்சிக்கிறார் இயக்குநர். ஆனால் நமக்கு அது புரிந்தாலும், அவளுடைய சில கொலைகளும் கொடூரங்களும், எய்லோவின் மீது பரிதாப்பட முடியாமல், அவளை வெறுக்கச்செய்கிறது. படத்தில் கடைசி பதினைந்து நிமிடங்கள் தான் உணர்ச்சிக் குவியலான தருணங்கள். சார்லீஸ் தேரோன், அசத்தியிருக்கிறார். படம் ஆரம்பித்த சில நேரத்திலேயே, அவரைப் பார்த்ததும் ஒரு வெறுப்பு வருகிறது. பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, பச்சாதாபம் வருவது போன்ற தருணத்தில், அவருடைய ஒரு செயலால் எரிச்சலும் கோபமும் பீறிட்டு எழுகிறது. அதுதான் சார்லீஸ் தேரோனின் வெற்றி என எண்ணுகிறேன்.
அழகிய தீயே !!!
என்னடா ரொம்ப ரொம்ப டீஸண்டான படம் என்றேல்லாம் சொல்கிறார்களே, அப்படி என்னத்தான் இருக்கிறது என தெரிந்து கொள்ள சென்றேன். படம் ஆரம்பித்து பத்தாவது நிமிடம் ரம்பா தொப்புளைக் காட்டிக் கொண்டு ரொம்ப அசிங்கமாக இல்லாமல் கொஞ்சம் அசிங்கமாக ஆடுகிறார். இது தேவையே இல்லை, இந்த பாடல் இல்லாமலேயே படம் நன்றாக வந்திருக்கும்.
படத்தில் ஒரு இடத்தில் கூட சிகரெட் பிடிக்கும் காட்சி கிடையாது. அவ்வளவு ஒழுக்கமான படம் என்று சொன்னார்கள். ஆனால் பிரகாஷ் ராஜ், ஹீரோ அவரது நண்பர்கள், ஹீரோயின் முன் ஒரு பார்ட்டியில் மது அருந்துகிறார்கள். ஏன் இந்த முரண்பாடோ. இதையும் தவிர்த்திருக்கலாம்.
பிறகு நாய்க்குட்டி என்று நினைத்துக் கொண்டு ஒரு விலைமாதுவின் வீட்டுக்கு போய், குட்டி என்று ஒரு ஐந்து நிமிடம் , so called காமெடி ஒன்று நடக்கிறது. இதையும் தவிர்த்திருக்கலாம்.
குற்றம் கண்டுபிடிக்காமல், மேற்கூறிய மூன்றினையும் தவிர்த்துப் பார்த்தால் படம் ரொம்பவே டீசண்டான படம். “நாம்” என்ற ஒரு மிக நல்ல படத்தினை எடுத்து, அது வந்ததற்கான சுவடே தெரியாததால், இந்தப் படத்தினை கொஞ்சம் அதிகமாகவே மார்க்கெடிங் செய்திருக்கிறார். என்ன செய்வது சுள்ளான், நோஞ்சான் கிட்டே போட்டி போடனுமே. கதைப்பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். ரொம்பவும் மிகைப்படுத்தாமல் ஒரு துணை இயக்குநரின் வாழ்க்கையினை படம் பிடித்துள்ளார் இந்த இயக்குநர்.
ஆனால் ஒன்று இந்த திரைப்படத்தின் இயக்குநர், ரொம்பவும் ரசித்து ரசித்து படத்தின் சில காட்சிகளை அமைத்திருக்கிறார். வசனமும் அதே போல் (அக்னி குண்டம், கறந்த பால், …. ). இரண்டு பாடல்கள் மட்டுமே மனதில் நிற்கிறது. மென்மையான சில வசனங்களும், மெலிதான நகைச்சுவை இழைந்தோடுவது தான் இந்த படத்தின் வெற்றி, சுவாரஸ்யம்.
ஆனால் ஒன்று சுள்ளானோடும், மச்சியோடும் ஏனைய பிற படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இது எத்தனையோ மேல். அதற்காக இதைப் பார்க்கலாம்.
– நன்றி : வலைப்பூ
சிவாஜி : வலைப்பூ
எனக்கு பரிச்சயமான சிவாஜி, “தெரியிலயேப்பா….” என்று உருக்கமாகவும், “எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயா… மானங்கெட்டவனே” என்று தெலுங்கினை தாய்மொழியாகக்கொண்ட வீரபாண்டிய கட்டபொம்முவின் வசனத்தை சுத்த தமிழில் கர்ஜிப்பவர்தான். என் நண்பர்கள் போல நானும் அவரை சரியான ஓவர்-ஆக்டு நடிகர் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன். அவரை மார்லன் ப்ராண்டாவோடு ஒப்பிடுவது எல்லாம் டூமச் என்று நினைத்திருந்தேன்.
அசோகமித்தரன் கூட இந்த மாத உயிர்மையில் ஒரு கட்டுரையில் “அன்னையின் ஆணை என்ற படத்தைப் பார்த்தபின் அறிஞர் அண்ணா சிவாஜி கணேசனை தமிழ்நாட்டு மார்லன் பிராண்டோ என்று பாராட்டியதாகச் சொல்வார்கள். அன்னையின் ஆணை 1958இல் வெளிவந்தது. அது வெளிவந்தபோது அண்ணா மட்டுமல்ல, ஆங்கில மொழிப் படங்களைக் கரைத்துக் குடிக்கும் என் நண்பர் ஒருவர்கூட அப் படத்தைப் பாராட்டியதோடு என்னையும் கட்டாயம் போய்ப் பார் என்றார். அப்படத்தைப் பார்த்தபின் என் நண்பரின் சிபாரிசுகளை ஏற்பதில் எனக்குத் தயக்கம் ஏற்பட்டது. மார்லன் பிராண்டோவுக்கும் சிவாஜி கணேசனுக்கும் பொருத்தம் மிகக் குறைவு. நடிப்பில் எது முக்கியம் என்பதில் இருவரையும் சம்பந்தப்படுத்தவே முடியாது. இருவர் ரசிகர்களும் மிகவும் வேறுபட்டவர்கள்.”
சமீபத்தில் ஞானியின் ஒரு நேர்காணல்கள் தொகுப்பு ஒன்று படிக்க கிடைத்தது. அதில் சோ விடம் கண்ட ஒரு மிக நீண்ட செவ்வி (interview) இருந்தது. அதில்,
ஞானி: நீங்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பெரிய நடிகர்களோடு நடித்து இருக்கிறீர்கள். அவர்களைப் பற்றிய உங்கள் கணிப்பு என்ன ?
சோ: சிவாஜி ஒரு மிகப்பெரிய நடிகர். எங்களுடைய காட்சி முடிந்ததும் நாங்கள் தளத்தைவிட்டு போய்விடுவோம், ஆனால் அவர் அப்படியில்லை ……. சிவாஜி தான் நடிக்கும் போது, அதை பார்த்துக் கொண்டிருப்பவர்களின் முகபாவங்களை கவனமாகப் பார்ப்பார். யாரவது அதிருப்தி அடைந்த மாதிரி இருந்தால், மறுபடியும் அந்தக் காட்சியினை படமாக்கச்சொல்வார். ஒரு முறை எந்த படம் என்று ஞாபகம் இல்லை, விஜயகுமாரி இறந்து விட்டார், அதைத்தாங்காமல் சிவாஜி அழவேண்டும். அவர் அழுது, நடித்து முடித்தார். அங்கிருந்த அனைவரும் அவரை பாராட்டி கைதட்டினார்கள். ஆனால் நான் கைத்தட்டவில்லை. அங்கிருந்து நகர்ந்துவிட்டேன். பிறகு மதிய உணவின் போது, அவருடைய அறையில் உணவருந்த என்னைக் கூப்பிட்டார். அப்போது எல்லோரும் கைத்தட்டினார்களே, உனக்கு கையில்லை ஏன் தட்டவில்லை, அல்லது என் நடிப்பு சரியில்லையா என்று கேட்டார். நான் அதற்கு, நீங்கள் ரொம்பவே அதிகப்படியாக நடிக்கிறீர்கள். அந்த மெலோடிராமா காட்சிக்கு அவ்வளவு ஓவர்-ஆக்ட் தேவையில்லை என்றேன். அவர் சிரித்துவிட்டு, அங்கேயே அதைக்காட்சியினை அடக்கமாக, அதே சமயம் அழுத்தமாகவும் , மிகவும் யதார்த்தமாகவும் நடித்துக் காட்டினார். அதைப்பார்த்து விட்டு இதுதான் சரியான நடிப்பு என்றேன். அவரோ சிரித்துவிட்டு “பைத்தியக்காரா, இதே மாறி நடிச்சா உனக்கு மட்டுந்தான் பிடிக்கும் ஜனங்களுக்கு பிடிக்காது” என்று கூறினார். அது மட்டுமில்லாமல் வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை, காட்சியில் உள்ளது போல் ஆர்ப்பாட்டமில்லாமல், அடக்கமாகவும் , அழுத்தமாகவும் கூட நடித்துக்காட்டினார். ஆக, சிவாஜி ஒவர்-ஆக்ட் செய்யத்தான் லாயக்கி என்று சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டேன். அவருக்கு சகலவிதமாகவும் நடிக்க தெரிந்திருந்தது. அவர் காலத்திற்கு ஏற்றவாறு, மக்களின் ரசனைக்கேற்றவாறு நடித்தவர்…..
இதைப் படித்த சில நாட்களிலேயே தேவர்மகன் திரைப்படத்தினை காணும் வாய்ப்பு கிடைத்தது. சோ சொன்னது மிகவும் சரி என்று அறிந்தேன். தமிழ் சினிமா உபயோகிக்காத மிகச்சிறந்த நடிகர்களின் சிவாஜியும் ஒருவர்.
– நன்றி : வலைப்பூ
ஜனகணமன : வலைப்பூ
சமீபத்தில் மாலன் எழுதி வெளிவந்த “ஜனகணமன” குறுநாவல் பற்றிய என் வாசிப்பு அனுபவம்.
தமிழில் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தினை பின்ணணியாகக் கொண்ட நாவல் என்றதும் இதன் மேல் ஆர்வம் பிறந்தது. ஏற்கனவே டாமினிக் லேப்பியர் மற்றும் லேரி காலின்ஸின் , “நள்ளிரவில் விடுதலை” நூலைப் படித்து அதில் பலநாட்கள் கட்டுண்டு இருந்தேன். அதில் உள்ள அத்தியாயத்தினை படிப்பது, முடித்தவுடன் அந்த சம்பந்தமாக “ஹே ராம்” படத்தில் வரும் காட்சிகளை ஓட்டிப் பார்ப்பது என்று ரொம்பவும் ரசித்து படித்தேன். ஹிண்டு பத்திரிக்கையின் விமர்சனத்தில் வேறு இதைப் பற்றி வெகுவாக சிலாகித்து எழுதியிருந்தார் ஒருவர். ஆகையால் சென்ற சனியன்று நியு புக்லேண்டில் இந்த புத்தகத்தினை வாங்கினேன். இரு அமர்வில் படித்து முடித்தேன். கொஞ்சம் அதிகமாகவே எதிர்ப்பார்த்த எனக்கு மிஞ்சியது ஏமாற்றமே.
இதற்குக் காரணம், முன்னுரையில் ஆசிரியர், இந்த புத்தகத்தினை எழுத உதவியாக இருந்த நூல்கள் எனக்குறிப்பிடும் “நள்ளிரவில் விடுதலை” என்ற நூலினை ஏற்கனவே படித்ததால் தான். அதிகமான விவரணைகள் இல்லாமல், கதையினை தெளிவாகவும், மிக வேகமாகவும் நடத்திச் செல்கிறார் ஆசிரியர். கதை விறுவிறுப்போடு போகும் தருணத்தில், பதிமூன்றாம் அத்தியாத்தில் வரும் ஒரு ஃப்ளேஷ்பேக், விறுவிறுப்பினை சற்றே குறைக்கிறது, மற்ற எந்த இடத்திலும் தங்கு தடையின்றி ராஜ்தானி போல் சர்ரென்று பறக்கிறது.
“ஹே ராம்” படத்தில், காந்தியைக் கொல்ல நினைத்து பிறகு காந்தியவாதியாகும் பாத்திரத்தினை, சாகேத ராமனாக அருமையாக நுழைத்து அந்த பாத்திரத்தின் மூலம் காந்தியின் பெருமையினை சொல்ல நினைத்தது கமலின் முயற்சி. ஆனால் மாலன் காந்தியின் பாதுகாப்பு அதிகாரியாக ஒரு போலீஸ் அதிகாரியாக ரமணனை நுழைத்து அவர் மூலம் சம்பவங்களைக் காட்டுகிறார். பாத்திரங்களின் சம்பாஷணைகள் அனைத்தும் ரொம்ப சரளமாகவும், நம் இப்போது பேசுகின்ற பாணியில் இருப்பது கதைக்கு வெகு லகுவாக நகர்த்திச் செல்கிறது.
இந்த புத்தகத்திற்கு ஆசிரியர் எழுதிய முன்னுரையில் தன் இளவயது சம்பவத்தினை நினைவுபடுத்திகிறார். அதில் அவர் கூறும் கருத்துதான் மகாத்மாவின் மாண்புக்கு ஒரு சிறிய சான்று. அது என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு நாள் சாப்பாட்டு மேஜையில் அவர் குடும்பத்தினர் காரசாரமாக காந்தியினைப் பற்றி விவாதித்திக் கொண்டு இருக்கின்றனர். ஆசிரியர் (மாலன்):
“காந்தி ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத பாஸிஸ்ட்” என்றும், அவரொத்த வயதினர், “காந்தி ஒரு நம்பிக்கை துரோகி” என்றும், “அவர் ஒரு ஹிப்போகிரேட்” என்றும், “அவர் ஒரு மோசமான கணவர்” என்றும் பொரிந்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது நேருவைப் பற்றியும், இந்திரா காந்தியைப் பற்றியும், ராஜாஜியினைப் பற்றியும் எழுந்த இதைவிட கடுமையான விமர்சனங்களுக்கு நெத்தியடி கொடுத்த அவருடைய அன்னை, “போங்கடா…” என்று ஏதோ சொல்ல வாய் திறந்தார். வார்த்தை வராமல் முகம் சிவக்க, கண்கள் கலங்கி விசும்பி அழுதார். துக்கம் தொண்டையைக் கவ்வியிருந்தது. காந்தியை ஓர் அரசியல்வாதியாகப் பார்க்கவில்லை. “வாழ்விக்க வந்த எம்மான்” என்று தெய்வமாகப் பார்த்தனர். அவருடைய அரசியல் நேர்மையும், சுயநலமின்மையும் impeccable.
ஆனால் பின்னட்டையில் இருந்த ஒரு கருத்து என்னை சங்கடப் படுத்தியது, எனக்கு பிடிக்கவில்லை. “முதன் முதலாக, அரசியலோடு மதத்தைப் பிணைத்து நடத்தியவர் காந்தி. அந்த அரசியல் அவரைச் சாப்பிட்டது”. கல்கி ராஜேந்திரன் இப்புத்தகத்தின் முன்னுரையில் சொன்னது போல, காந்தி அரசியிலையும், இறையுணர்வையும் பிணைத்தாரே அன்றி, மதத்தினை அல்ல. ஆனால், இதற்கு ஆசிரியரின் பதிலோ “இது மிகவும் சப்ஜக்டிவ்” என்று இருக்கும் எண்ணுகிறேன்.
என்னைப் போல “ஹே ராம்” படத்தினை ஐம்பது தடவைக்கு மேல் நீங்கள் பார்க்கவில்லையென்றால், “நள்ளிரவில் விடுதலை” என்ற புத்தகத்தினை படிக்கவில்லை என்றால், இந்த புத்தகம் உங்களுக்கு இது பிடிக்கலாம்.
(ஜனகணமன; ஆசிரியர் : மாலன் ; வெளியீடு: கிழக்கு பதிப்பகம், சென்னை; விலை : நாற்பது ரூபாய்)
நன்றி : வலைப்பூ
எட்டயபுரம் : வலைப்பூ
எங்களுடைய மித்ரன் குழுவின் ஒரு திட்டத்திற்கான கள ஆய்வுக்காக நாங்கள் (நான், சஞ்சீத், பாலசுந்தர்) சென்ற வாரயிறுதியில் எட்டையபுரம் சென்றோம். ஒரு கிராமத்தையோ அல்லது ஒரு பின்தங்கிய பகுதியினையோ தேர்ந்தெடுத்து, அங்குள்ள மக்களுக்கு ஒரு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பது, அங்குள்ள மக்களின் கல்விக்கு உதவுவது என்ற கொள்கையினை தற்போது கொண்டது, மித்ரன் சுய ஆர்வக்குழு.
பாரதி பிறந்த ஊர் என்ற காரணத்தால் நாங்கள் அந்த பகுதியினை தேர்ந்தெடுக்கவில்லை. எங்கள் குழுவில் உள்ள ஒரு நண்பருக்கு (பாலசுந்தர்) மிகவும் பரிச்சயமானது, மிகவும் பின் தங்கியுள்ளது என்ற காரணத்தால் மட்டுமே நாங்கள் அதை தேர்ந்தெடுத்தோம். எங்களுடைய பயணமும் கள ஆய்வும், ஸ்பென்ஸர் ப்ளாஸா, சத்யம் தியேட்டர் மட்டும் அறிந்திருந்த எங்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தியது.
எட்டயபுரத்தினை சில இடங்களில் எட்டையாபுரம் என்றும் எழுதுகின்றனர். அங்கே இருந்த ஒரு ஊராட்சி பேர்ப்பலகையில் கூட எட்டையாபுரம் என்று தான் இருக்கிறது. எட்டப்பன் ஆட்சி செய்த ஊர் என்பதால், மரியாதையாக எட்டையா வின் ஊர், என்பதை அப்படி கூறுகின்றனர் என்று நாங்களே ஒரு சொல்மூலம் கண்டுபிடித்தோம். இந்த ஊரைப் பற்றியும், இதன் சரித்தரத்தின் மறுபக்கத்தினைப் பற்றி சஞ்சீத செய்த பதிவு இங்கே.
சுமார் இருபதாயிரம் பேர் வசிக்கும் ஊர். விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்ட ஊர் இது. நெசவுத்தொழிலும், தீப்பெட்டி தயாரித்தலும் தான் இங்குள்ள மக்களின் முக்கியமான தொழிலாக தற்போது உள்ளது. நெசவிலும் கைத்தறிதான் பிரதானமாக உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வீடுகளின் வாசலிலும் ஒரு கைத்தறி இருக்கிறது. கைத்தறி தொழிலாளர்களின் மிகப்பெரிய வாடிக்கையாளர் தமிழ்நாடு அரசின் போ-ஆப்டெக்ஸ் தான். ஆடைகளை அவர்கள் வாங்கிக்கொண்டாலும் கோ-ஆப்டெக்ஸில் விற்ற பிறகு தான் இவர்களுக்கு பணம் வரும். இந்த ஊரின் கைத்தறி ஆடைகள் பிரபலாமாகமல் இருப்பதற்கு ஒரே காரணம், அனைத்து துணிகளுமே டிஸைன் (டிஸைனை புட்டா என்று அழைக்கின்றனர்) எதுவும் இல்லாத ப்ளைன் வெரைட்டியாக இருப்பதுதான் காரணம். இப்போது தான் அவர்களின் கூட்டுறவு சங்கம் மூலம், சென்னையில்லுள்ள NIFT மூலமாக புட்டா போட்ட சேலைகளை நெசவு செய்வதற்கான பயிற்சிகளை அளிக்கின்றனர். அந்த பயிற்சி முடிந்து, புட்டா போட்ட சேலைகளை நெசவு செய்ய ஆரம்பித்தால் நல்ல வருமானம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சினை, inaccessiblity to the market.
நல்ல நுணுக்கமான டிஸைன்களுடைய நேர்த்தியான கைத்தறி ஆடைகளுக்கு நகரங்களிலும், வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இவர்களுக்கு நல்ல வேலைப்பாடுகள் நிறைந்த சேலைகளை நெசவு செய்வதைப் பற்றி பயிற்சி கொடுத்து, நேர்த்தியான ஆடைகளை செய்யவைக்க அங்குள்ள கூட்டுறவு சங்கத்தால் முடியும். ஆனால் அதற்கான வாடிக்கையாளரை பிடிப்பதுதான் மிகப் பெரிய சவால். அங்குள்ள மக்கள், ஒரு மிகப்பெரிய வாடிக்கையாளரிடம், இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு தொடர்ந்து ஆடைகள் வாங்குமாறு ஒரு ஒப்பந்தம் இருந்தால் மிகவும் நம்பிக்கையோடு தொழில் மேற்கொள்ள முடியும் என்று எண்ணுகின்றனர்.
விவசாயத்தை பொருத்த மட்டில் இங்கு அரிசி போன்ற தண்ணீர் அதிகம் தேவைப்படுகின்ற பயிர்களை இப்போது யாரும் பயிரிடுவதில்லை. வெகு சிலர் தான் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர் என்றாலும், அவர்களும் சோளம் போன்ற குறைந்த அளவு தண்ணீர் உறிஞ்சும் பயிர்களைத்தான் சாகுபடி செய்கின்றனர். ஆகவே இங்கு alternative பயிர்கள் தான் மிகச்சிறந்த வழி என்று அருகே உள்ள ஒரு கல்லூரியின் பேராசிரியரும், பாலசுந்தரின் தந்தையும் உரைத்தார்.
கள ஆய்வில், நாங்கள் தெரிந்துக் கொண்டது. நெசவுத்தொழிலாளர்களின் உற்பத்தி பொருட்களுக்கு ஒரு நல்ல நீண்ட நாள் வாடிக்கையாளருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொடுப்பது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விவசாயம் என்று அங்கே பார்த்தால், சித்த மருத்துவத்துக்காகவும் ஹெர்பல் பொருட்களாக்காக உபயோகிக்கப்படும் , மிக குறைந்த அளவே தண்ணீர் உறிஞ்சும், சில செடிகளையும் அங்கே வளர்க்கமுடியும். அதைத்தவிர அங்கு மாடுகள் கொஞ்சம் நிறையவே இருக்கின்றன, அதன் மூலம் இயற்கை உரங்களை குறைந்த மூதலீட்டில் உற்பத்தி செய்யமுடியும்.
இங்கே நான் அதிகம் கவரப்பட்டது நெசவுத்தொழில் மீதுதான். ஒரு தறியில் துணி நெய்வதை இப்போது நான் என் வாழ்வில் முதல்முறையில் பார்த்தேன். கைத்தறியின் நுட்பங்களை மிகவும் அருகிலிருந்து, அது வேலை செய்யும் முறையினைப் பார்த்தேன். என்னை கைத்தறியில் சும்மா நெய்து பார் என்று சொன்னால், சத்தியமாக, என்னால் இருபது நிமிடங்களுக்கு மேல் வேலை செய்ய முடியாது. அதற்கேற்ற ஸ்டேமினா கிடையாது. நன்றாக அழுத்தி நெய்யவேண்டும், இல்லையேல் துணியின் தரம் கேட்டுப்போகும். ஆனால் இங்கேயோ பல பாட்டிகள், பல பெண்கள், தனியாளாக ஒரு சேலையினை (ஆறடி இருக்கும்) ஒரே நாளில் நெய்துவிடுகின்றனர். சரி இவ்வளவு கஷ்டப்பட்டு நெசவு செய்ய வேண்டுமா, ஏன் ஆட்டோமேட் செய்து, விசைத்தறி மூலம் இந்த வேலையினை சுளுவாக செய்யக்கூடாது என்று என் மூளை கேட்டது.
அங்கிருக்கும் ஒரு விசைத்தறிக்கும் நாங்கள் சென்று பார்த்தோம். விசைத்தறி ஒரு மிகப்பெரிய ராட்ச்சஸன். கைத்தறியில் ஒரு மணி நேரம் மக்கள் செய்வதை , பத்து நிமிடங்களில் அடித்து நகர்த்துகிறது அது. ஒரு விசைத்தறியின் விலை சுமார் முப்பத்தைந்து முதல் ஐம்பதாயிரம் வரை ஆகும். ஒரு கைத்தறியின் விலையோ மூவாயிரம் முதல் எட்டாயிரம் வரை ஆகும். சரி அப்படியே கடன் அது இது என்று விசைத்தறியினை வாங்கிப்போட்டால், அதனால் மாதச்செலவும் அதிகரிக்கும், அந்த செலவுக்கு ஏற்றார்போல விற்பனையும் இருக்க வேண்டும். எங்களின் மரமண்டைகளுக்கு அப்போதுதான் உலகமயமாக்கல், தாரளமயமாக்கலின் பிரச்சனைகள் தெளிவாகவும் சூடு போட்டது போல உறைத்தது.
பின் எங்கள் நண்பர்களோடு விவாதித்துக் கொண்டிருக்கும் போது ஒரு யோசனை எழுந்தது. அந்த ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள விசைத்தறியினைப் போலவே, மிகக்குறைந்த விலையில், சற்றே குறைந்த ஆட்டோமேஷன் உடன், ஆனால் உற்பத்தி திறனைகூட்டும் வகையில் ஏன் ஒரு விசைத்தறியினை வடிவமைக்க கூடாது. நம் ஐ.ஐ.டி அல்லது தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள் இது போன்ற திட்டத்தினை ஏற்று வடிவமைத்துக் கொடுத்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். நம் ஐ.ஐ.டி போன்ற கல்லூரிகளில் கட்டாயம் இது போன்று சில திட்டங்கள் செய்ய வேண்டும் என்று துடிப்புடன் கட்டாயம் மாணவர்கள் இருப்பார்கள். அவர்கள் இது போன்ற ஒரு இயந்திரத்தினை வடிவமைத்தால், கட்டாயம் கிராமங்களிடையே உற்பத்தி என்பது பெருகும், பெரிய மில் ஓனர்களும் கிராமங்களுக்கு out-source செய்துவிட்டு ஏனைய பிற சிறப்பான வேலைகளை பார்க்கலாம்.
Trivia: இந்த நெசவுக்கும் கணிப்பொறி சேமிப்புக்கும் மிக நெருங்கிய நட்பு ஒன்று இருக்கிறது. இந்த கைத்தறியில் வேலைப்பாடுகள் நிறைந்த, சரிகை, சேலை போன்றவற்றை செய்வது சற்று கடினமாக இருந்திருக்கும் போல. அதனால் நம் மக்கள் ரொம்ப காலம் முன்பே, துளையட்டைகள் எனப்படும் punched-cards நுட்பத்தினை உபயோகப்படுத்தியுள்ளனர். தறியின் மேல் பகுதியில், நமக்கு ஏற்ற டிசைன் வருவதற்கேற்ப, பல துளையட்டைகளை ஒரு கோர்வையாக வைத்துள்ளனர். ஒவ்வொரு முறையும் தறியினை அடிக்கும் போது, அந்த துளையட்டைகள் ஒன்றொன்றாக நகர்கிறது. அந்த துளைக்கேற்றார் போல், துணியில் வேலைப்பாடுகள் வருகின்றது. அந்த கோர்வையான துளையட்டைகளை பார்க்கும் போது ஒன்றும் விளங்கவில்லை, ஆனால் அந்த அட்டைகளால், யானை, குதிரை, மாங்காய், போன்ற வேலைப்பாடுகளை சரிகையிலும், துணியிலும் பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. இந்த நெசவில் உபயோகப்படுத்திகின்ற துளையட்டையைப் பார்த்துதான், கணிப்பொறியிலும் துளையட்டையினை உபயோகப்படுத்தும் வழக்கம் வந்தது என்று இந்த சுட்டி சொல்கிறது.
நன்றி: வலைப்பூ