காக்டெயில் - வாசக அனுபவம்

நாவல் வடிவமானது இறந்துவிட்டது. இனி கதை எழுத்து என்ற சொல்லாடல் களமானது, தன்னிலிருந்தே ஓடிப் பெருகுவதாய் தன்னையே திரும்பச் சொல்லி பதிவு செய்து கேலி செய்து மறுத்து உருவாகும். எழுதப்படும் போது உருவாவதாய் இருக்கும் என்ற ரேமண்ட் ஃபெடர்மானின் சொற்களோடு துவங்குகின்றது இந்நாவல்.

நாவல் என்பது வாழ்க்கையின் தேடலில் வெளிப்பாடு, ஆன்மிக நோக்குடன் இருக்கவேண்டும் என்று நினைப்பவரானால், உங்களுக்கான நாவல் இதுவல்ல. (நான் பார்த்த அளவில்) டாரண்டினோ போன்றவர்களின் திரைப்படங்களில் கதையோ, தேடலோ ஒரு மண்ணும் இருக்காது, ஆனால் திரைப்படம் மிகவும் வசீகரமாக இருக்கும். அதற்கு காரணம், கதை சொல்லும் நடை, பாங்கு, (இப்போ புதுசா வந்த சொல்லான) ஒயில் (Style) என்று தான் சொல்லமுடியும். அதைப் போலவே இந்நாவலின் நடைதான் இதன் அழகிற்கு காரணம். வாசகர்களை மெல்லிதாக நக்கலடித்து, கவனத்தை ஈர்த்து, சப்பையான விஷயத்தை அழகாக சொல்லும் முறையில் வெற்றி அடைகின்றது இந்நாவல்.

பாசு என்ற எழுத்தாளன் ஒருவனைப் பற்றியது. எல்லா எழுத்தாளர்களைப் போல, தான் மட்டும் தனித்துவமானவன் என்ற தனித்துவமின்மையினை, தனித்துவமாகக் கொண்ட எழுத்தாளன். ஃபோட்டோஷாப் மற்றும் டி.டி.பி மென்கலன்களை இயக்கத்தெரிந்த கொஞ்சம் ஹைட்டெக்கான, பணம் சம்பாதிப்பது வாழ்க்கையின் endsம் அல்ல meansம் அல்ல என்பது போன்ற அதி அற்புத தத்துவங்களை பழகும் மனிதன். தன்னளவில் தன்னை விட்டேத்தி என்று எண்ணிவாழ்பவனின் கதை, காக்டெயில். உபேந்திரா போல, யாக்கே கூல்ட்ரிங்கு என்று கூறி பீரைக் குடித்து தண்ணீரை சேமியுங்கள் அற்பப் பதர்களே என்பதைக் கூறாமல் கூறி, அதை கடைபிடிக்கும் தகையனார் நம் பாசு என்கிற பாலசுப்பிரமணியம்.

சமீபத்தில் படித்ததில், என்னை மிகவும் கவர்ந்த நாவல். இந்நாவலின் கதையினை சொல்லி உங்கள் கழுத்தையறுக்கப் போவதில்லை. ஏனென்றால் கதை என்று அப்படி பெரிதாக ஒன்றும் இல்லை. எனவே இந்நாவில் இருந்து பெற்ற சில போதனைகள், சில fundaக்கள், சில சுவாரஸ்யமான triviaக்கள் இங்கே:

  1. கோல்கொண்டா ரூபி ரெட் ஒயினும், கிங்ஃபிஷர் பியரும் எடுத்துக் கொள்ளவும். ஒரு சாதாரண கண்ணாடி தம்ளரில், ஒரு லார்ஜ் அளவுக்கு ஒயின் ஊற்றுங்கள். பிறகு அந்த தம்ளர் நிறையும் அளவு பியர் ஊற்றுங்கள். இப்போது, பியரின் கசப்புச் சுவை முற்றிலும் மறைந்து, வைனின் துவர்ப்பும் முற்றிலும் மறைந்து, அளவான இனிமைபோடு நாவில் ஒட்டும் பதத்தில், சிறுபிள்ளையும் சப்புக்கொட்டி சாப்பிடும் பதார்த்தம் போல இருக்கும். (இது லெதர் பாரிலேயே பழி கிடக்கும் எழுத்தாள நண்பர் (வேறு யாரு…சாரு நிவேதிதா என்று தான் நினைக்கிறேன்) சொல்லிகொடுத்ததாம்)

  2. ஒரு லார்ஜ் என்பது அறுபது மில்லிமீட்டர். ஸ்மால் என்பது முப்பது மில்லி. மூன்று லார்ஜ்களை கொண்டது ஒரு குவார்ட்டர் (180 மில்லி). ஆனால் ஒரு ஹாஃப் என்பது 360 மில்லி, என்று நினைத்தீர்கள் என்றால், ஜன்ம சாபல்ய மற்று போக மாட்டீர்கள். So get your basics right. ஒரு ஹாஃப் என்பது 375 மில்லி. அதே போல ஃபுல் என்றால் ஒரு லிட்டர் என்று அப்பாவித்தனமாக எண்ணாமல், 375 X 2 = 750 மில்லி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (டீம் பார்ட்டிகளில் சகாக்கள் அனைவரும் நாற்றம்பிடித்த கிங்ஃபிஷர் பீரை அடித்துக் கொண்டு, அதற்கே மப்பேறி உளர்வதை, குடிப்பழக்கம் இல்லாத காரணத்தால் Tropicana ஆப்பிள், பைனாப்பிள், தர்பூஸ், முலாம் பழம் என்று குடித்து என்னைப் போல bladderஐ நிரப்பிக் கொண்டு பார்க்கும் தன்மை கொண்டவர் என்றால், மேற்கூரிய இந்த இரண்டு பாயிண்டுகளும் அடுத்த டீம் பார்ட்டியில் பிஸ்து காட்டுவதற்கு உபயோகப் படலாம் )

  3. ஃபுல் மப்பில் யமஹா ஒட்டிக்கொண்டு, தாறுமாறான வேகத்தில், ஃபளைஓவரில் செல்லவும், எப்படியாவது தட்டுதடுமாறி ஃப்ளைஓவரின் ஒரத்தில் இடித்து கீழே விழவும். பின்னர் உங்களுடை, அரதப் பழைய பைக்/டூ-வீலர் சாகசத்தை மனதில் நினத்துக் கொள்ளவும், ஏதாவது ஒரு பெண்ணிற்கு ரூட் போடுவதற்காகவோ, அல்லது சீன் விடுவதற்காகவோ, அல்லது தற்செயலாக செய்யப் போன வாகன சாகசத்தில் இருந்து, அதிர்ஷ்ட வசமாக தப்பிக்கொண்டதை மனதில் நினைத்துக் கொள்ளவும். அதை உங்கள் திறமையால் தப்பித்ததாக எண்ணிக்கொள்ளவும். ஆக இப்போது நீங்கள் ஒரு இருசக்கர வாகனம் ஓட்டுவதில் தில்லாலங்கடி. ஃப்ளைஓவரில் மூலையில் இருந்து எழுந்து கொண்டு, ஃப்ளைஓவரின் வளைவில் இடதுபக்கம் கொஞ்சம் மேடாகவும், வலதுபக்கம் கொஞ்சம் பள்ளமாகவும் ரோடு போடாத எஞ்ஜினியர்களை மனதாரப் புகழவும். உங்கள் விபத்துக்கு காரணம், நீங்கள் எல்லை, ஹைவேஸ் டிபார்ட்மெண்ட் தான் என்று திருப்திபட்டுக் கொண்டு, ஆஸ்பத்திரியில் சென்று அட்மிட் ஆகவும்.

  4. தண்ணி ஃபண்டாக்கள் போதும். வேற விஷயத்துக்கு வருவோம். சென்னையில் இருப்பவர் என்றால் உங்களுக்கான சில விஷயங்களை, கூகள் AdSenseஐ விட சென்சிபிளாக ஒரு இடத்தில் வரும் டிப்ஸ் ( விளம்பரம் எண்டும் சொல்லலாம் :) ) என்ற பெயரில் கூறுகிறார், நாவலாசிரியர். பட்டுக்கோட்டை ஒயின்ஸின் சிறப்பான டிஷ், மீன் முட்டை (அயிலை மீனும், கோழி முட்டையும் சேர்த்து செய்தது), சுபா ஒயின்ஸின் சிறப்பம்சம் நெத்திலி மீன், சேலம் ஆர்.ஆர் ஒயின்ஸின் சிறப்பம்சம் கடல் உணவுகள். மறுபடியும், என்னைப் போல Egg-vegetarian ஆக நீங்கள் இருந்தால், உங்களுக்கு சீஸ் - செர்ரி- பைனாப்பிள் என்ற வீட்டிலேயே செய்து கொள்ளக்கூடிய பதார்த்தம் ஒன்றும் உள்ளது. (அதைப் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள தொன்னூறு ரூபாய் கொடுத்து யுனைட்டட் ரைட்டர்ஸ் வெளியிட்டுள்ள காக்டெயில் புத்தகம் வாங்கிக்கொள்ளுங்கள் :) )

  5. டேய், சோத்தமிக்கி, வேறயெதையாவது பற்றி சொல்லு என்று நீங்கள் இந்த விண்டோவினை மூட நினைக்கலாம். அப்படி நினைப்பவர்களை, சோழிங்கநல்லூர் ப்ரத்யங்கரா தேவி உம்மாச்சி கண்ணைக் குத்திவிடுவாள். சரி, அடுத்த விஷயம். சில எழுத்தாளர்களைப் பற்றி காக்டெயில் எனக்கு கூறியவை. இந்த எழுத்தாளர் மிகவும் புத்திசாலி, ஒரு ரெபல், இவர் எழுதிய ஒரே சிறுகதைத் தொகுப்பு, இன்று நிஜம் என்ற நூல் கிடைப்பதே அரிதாம். இளவயதில் அகால மரணமடைந்த இவர், இறக்காமலிருத்திருந்தால் தமிழையே தலைகீழாய் புரட்டிப் போட்டிருப்பாராம். அந்த இவர், சுப்பிரமணிய ராஜூ.

  6. அடுத்த எழுத்தாளர் in-focus, சுந்தர ராமசாமி என்ற பெயரிலும், பசுவய்யா என்ற பெயரிலும் எழுதிக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் எழுத்தாளர். இவர் எழுத்தை படித்த பலர், தன் தலைமுறை ஆப்பரேட்டிங் சிஸ்டம் படித்த இன்ஜியர்களாக அமெரிக்கா சென்று அவுட்லுக் மற்றும் MS-Excel, எக்ஸலாகும் போது, சிலர் மட்டும் புத்தகப் புழுக்களாக, ஓசி டைரியில் கதை எழுதி, சிறுபத்திரிக்கையில் எழுதி அல்லது சிறுபத்திரிக்கை நடத்தி (சரி ரெண்டுத்துக்கும் என்ன வித்தியாசம்), பெண்களைப் பெற்றவர்களை பயமுறுத்தி வைப்பவர்களாம். இப்படி, சுந்தர ராமசாமியின் எழுத்தை படித்தவர்கள் சீரழிந்து கொண்டிருக்க, சுந்தர ராமசாமி மட்டும் தூரதேசங்களில் லொகேஷன் பார்க்கும் இயக்குநர்கள் போல சுற்றிக் கொண்டு இருப்பவராம்.

  7. இறுதியாக, சுதேசமித்திரன் என்ற எழுத்தாளான், முதல் தர ஜனரஞ்சக பத்திரிக்கையின் சிறுகதைப் போட்டியில் இருபதாயிரம் ரூபாய் பரிசு பெற்ற எழுத்தாளன். கால்டவுஸர் போட்டுக்கொண்டு (இப்பல்லாம் வேட்டி கட்டிக்கொண்டு :) ) சென்னையின் வலைப்பதிவு நண்பர்களிடையே புகழ்பெற்ற ஒருவர் நடத்தும் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ள கோபுரம் தாங்கி என்ற புத்தகத்தை எழுதிய எழுத்தாளன், சுதேசமித்திரன். தி.ஜானகிராமனிடமிருந்து நடையினையும், ஜெஃப்ரி ஆர்ச்சரின் சிறுகதைகளை முன்னுதாரணமாகக் கொண்டு, சுஜாதாவிடம் ராணி பத்திரிக்கை படிக்கும் புழுவே என்ற நயன தீட்சையினை வாங்கிய எழுத்தாளன், சுதேசமித்திரன். ஆரம்ப காலத்தில் பாலகுமாரன் மற்றும் ராஜேஷ் குமார் போன்றவர்களின் கதைகளின் பற்று கொண்ட எழுத்தாளன், தன் பேராசிரியரின் பரிந்துரையின் பேரில், ஜே.ஜே சில குறிப்புகள் என்ற நாவலைப் படித்து, தன்னுள்ளே பெரிய மாறுதலைக் கண்ட எழுத்தாளன் , சாரி, எழுத்தாளர், சுதேசமித்திரன். அர்த்தமண்டபம் என்ற வலைப்பதிவு எழுதும், அடோபி போட்டோஷப் தெரிந்த, புதுமையான எழுத்து நடை கொண்ட எழுத்தாளன், சுதேசமித்திரன் என்ற ஷங்கர். அவர் எழுதி வெளிவந்துள்ள நாவல் காக்டெயில்

Spoiler:

கதை இல்லையென்று சொன்னாலும், ஒரு க்ளூ. நான் கூறப் போகும் ஒரு வரிசையில், காக்டெயிலை சேர்த்துக் கொள்ளலாம்.

  • தலைவர் Calvin & Hobbes,
  • ஸ்டீஃபன் கிங் எழுதிய Secret Window,
  • ஜான் நாஷ் பற்றிய A beautiful mind,
  • புதுமைச்செம்மல், வித்தியாசப் பம்மல், இரா. பார்த்திபன் இயக்கிய குடைக்குள் மழை
  • ….ம்ம்ம்… இன்னும் சொல்லவேண்டும் என்றால் ரஜினியை முழுங்கி ஏப்பம் விட்ட தங்கத் தலைவி, கலைத்தாய் சோதிகா

Update (After Almost 20 Years - 2/Oct/2023)

This little post gave me so much fun writing, and many friends were very kind enough and encouraging. For all its flaws in the views and content, I still reminisce about my blogging days with so much fondness. Here is me bragging about some comments and recs.

Snapjudge Link

May 19, 2005

கசாகூளம்

திருச்சியில், மண்டல பொறியியல் கல்லூரி என்று முன்பு அழைக்கப்பட்ட National Institute of Technology, Trichyயில் ஆண்டு தோறும் நடக்கும் விழா ஃபெஸ்டம்பர். அதில் ஒருமுறை நடத்தப்பட்ட ஒரு பல்சுவை நிகழ்ச்சிக்கு கசாகூளம் என்று பெயர் வைத்திருந்தினர். கேட்பதற்கு வினோதமாகவும், எனக்கு விசித்திரமாகவும் இருந்தது கசாகூளம் என்ற சொல்.

KasakoolamKasakoolam

ஆங்கிலத்தில், ரிச்சர்ட் க்ளோவர் தொகுத்துள்ள Dag’s dictionary பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம் (இல்லையென்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள் :) ). மொழியினால் வெளிப்படுத்த முடியாத சில செயல்களுக்கு, ஒரு சொல்லை தேர்ந்தெடுத்து அதற்கு ஒரு தத்துபித்து விளக்கமும் கொடுத்தால் அது ஒரு dagword. உதாரணத்திற்கு, Batbiter என்ற சொல்லினை எடுத்துக் கொள்வோம். Batbiter என்றால் சூப்பராக விசப்பட்ட பந்தில், டூபாக்கூர் மாதிரி விளையாடி, beaten ஆன பிறகு, பேட்டில் தான் ஏதோ பிரச்சினை இருப்பது போல் பார்ப்பவர். சுருங்கக்கூறின் நம்ம சவுரவ் கங்குலி மாதிரி.

அதே போல என்னுடைய dagword தான், இந்த கசாகூளம். ரொம்ப சுற்றி வளைக்காமல் கூற வேண்டும் என்றால் Potpourri, Collage, Medley மாதிரி என்று கூறலாம்.

வலைப்பதிவு எழுதுவது ஒருமாதிரி அலுத்துப் போனதாலும், வேறு பல பணிகள் சுவாரஸ்யமாக இருந்ததாலும் இவ்வளவு நாள் என் வலைப்பதிவுக்கு விடுமுறை விட்டிருந்தேன். இனி ஆரம்பம்.

ஆனால் இந்த விடுப்பில், இணையத்தில் நேரம் மிக சுவாரஸ்யமாக போனதற்கு காரணம், கட்டற்ற களஞ்சியம் தான். அட நம்ம விக்கிபீடியாங்க. மேலும், கொஞ்சம் புத்தகங்கள் படிக்கவும் நேரம் கிடைத்து. வலைப்பதியவேண்டுமே என்ற எண்ணம் இல்லாமல் புத்தகம் படிக்கவும், திரைப்படம் பார்க்க முடிந்தது. இனி மேலும் அப்படியே தொடரும் என நினைக்கிறேன். (வலைப்பதிவதும் தொடரும் என எண்ணுகிறேன்)

என் வலைப்பதிவின் உள்ளடக்கத்தினை பிரதிபலிக்குமாறு ஒரு கசாகூளத்தினை (Collage) செய்து, வலைப்பதிவின் முகப்பில் இட்டுள்ளேன். அதை செய்ய உதவிய, கார்த்திக் அவர்களே உங்களுக்கு நன்றி.

April 7, 2005

இரு புத்தகங்கள் - ஒரு பார்வை

நான் இந்த வருடம் படித்ததில் சிறந்த, மிகவும் பிடித்த புத்தகங்கள் எவை என்று அசைப்போட்டுக் கொண்டிருந்தேன். பிஏ.கிருஷ்ணன் எழுதிய புலிநகக் கொன்றை, ஆங்கிலத்தில் மார்க் ஹட்டன் (Mark Haddon) எழுதிய The Curious Incident of the Dog in the Night-Time . இந்த இருநூல்களும் புனைவிலக்கிய (fiction) வகையினை சார்ந்தவை, ஆனால் புனைவு மட்டும் இல்லாமல் உண்மைச் சம்பவத்தை, அனுபவங்களை புனைவு என்னு சட்டை போட்டு கொண்டு சொல்பவை. என்னை மிகவும் கவர்ந்த, இந்த இருநூல்கள் பற்றிய சில கிறுக்கல்கள் (விமர்சனங்கள் அல்ல) :

The Curious Incident of the Dog in the Night-Time - Mark Haddon:

இது ஒரு சிறுவனைப் பற்றிய புத்தகம். இந்த அறிமுகம் போதும் என நான் எண்ணுகிறேன். இந்த புத்தகத்தினை படிக்கும் முன்னால் இதன் கதை அல்லது கதைக்களம் பற்றி முன்கூட்டியே அறியாமல் படியுங்கள். நிச்சயமாக உங்களுக்கு ஆச்சரியம் தரும். கொஞ்சம் அதிகமான இளகிய மனம் உள்ளவர்களை இப்புத்தகம் அழவைத்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன். பலர் இதை வேகமாக முடிக்காமல், வேண்டுமென்றே மெதுவாக, இருநூறு சொச்ச பக்கங்களை ஒரு மாதமாக படிப்பதாகவும் அறிகிறேன். என் இலக்கிய அறிவில், இந்த புத்தக ஆசிரியர் மிகவும் வித்தியாசமான ஒரு கதை சொல்லும் உத்தியைக் கையாண்டுள்ளார்.

(Spoiler: ஆஸ்பர்ஜர்ஸ் சிண்ட்ரோம் (Asperger’s Syndrome) என்ற வகையான ஆட்டிஸத்தினால் (autism) பாதிக்கப் பட்ட சிறுவன், கிறிஸ்டோஃபர். மிகவும் புத்திசாலி. அவனுடைய எதிர்வீட்டில் இருந்த நாய் ஒன்று கொலை செய்யப்பட்டுள்ளது. அதை துப்பறியும் வேலையில் இறங்குகிறான் அவன். பல கசப்பான உண்மைகளை அறிந்து கொள்ள நேர்கிறது. சில உண்மைகள் மனதை உருக்கியும் உலுக்கியும் விடுகிறது. We are blessed என்றும் உணரவைக்கிறது, கிறிஸ்டோஃபரைப் பார்த்து பொறாமை கொள்ளவும் வைக்கிறது)

புலிநகக் கொன்றை - பிஏ.கிருஷ்ணன் :

இந்த நூலைப் பற்றி சொல்லும் முன்னர், இந்த நூல் பற்றிய சில சுட்டிகளை முதலில் தரவேண்டும்.

  • அ.முத்துலிங்கம் எழுதிய வாசிப்பு அனுபவம்
  • இரா.முருகன் எழுதிய ஒரு அறிமுகம் மற்றும் நாவலசிரியருடன் ஒரு உரையாடல்
  • கே.வி.ராஜா மற்றும் ஹரன் பிரசன்னா எழுதிய வாசிப்பு அனுபவங்கள்
  • ஜெயமோகனுக்கும் நாவலாசிரியருக்கும் நடந்த நீண்ண்ண்ண்ட (ஆனால் ஆரோக்கியமான) அஞ்சல் விவாதம்

இந்த நாவலின் கதையினையும் நான் சொல்லப்போவதில்லை, மேலே உள்ள சில சுட்டிகளில் கதையினை புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள்.

இந்த நாவல் படித்து முடித்த பின்பு, தோன்றிய எண்ணம். அம்மாடி, தமிழ்நாட்டின் வரலாறே சில பக்கங்களில், பல்வேறு பார்வைகளில், மிக எளிமையாக, அழகியல்தன்மை மாறாமல் படித்த திருப்தி. மிக அதிக அளவில் விவரணைகள் இல்லாமல், சம்பாஷணைகளாலும், நிகழ்வுகளாலும் மட்டுமே இந்த நாவல் நகர்ந்தது தான் என்னை மிகவும் கவர்ந்தது. பல்வேறு கதாபாத்திரங்கள் நம்மையும், நம்மை சுற்றியுள்ளவர்களை ஞாபகப்படுத்துவதால் புத்தகத்தில் எனக்கு ஏற்பட்ட லயிப்பு சொல்லிமாளாது. வரலாற்றில் கொஞ்சம் ஆர்வமும், ஒரு குடும்பத்தில் உள்ள ஆட்களை ஞாபகம் வைத்திருக்கும் அளவுக்கு பொறுமையும் இருந்தால் போதும் இந்த புத்தகம் உங்களை திருப்தி படுத்தும் என்று கட்டாயமாகச் சொல்வேன்.

சரி சரி, நான் ஒதுங்கிக் கொள்கிறேன், இந்த இரு புத்தகங்களையும் இன்னும் இருமுறையாவது நான் வாசிக்க வேண்டும்.

December 16, 2004

திரை உலகில் - ஒரு வாசிப்பு அனுபவம்

சட்ட புஸ்தகமெல்லாம் உன்னோட அப்பா மாதிரி முட்டாளுக்குத்தான்…. எவ்வளவு சட்டம் படிக்கிறியோ அவ்வளவு குழம்பிப் போயிடுவே

புஸ்தகமும் அப்படித்தானோ

கோபால பிள்ளை அவனைக் கூர்ந்து பார்த்தார்

உனக்கு மூளை இருக்கு. புஸ்தகம் உன்னைக் குழப்பும்னு நான் நினைக்கல்லை

  • பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய புலிநகக் கொன்றை என்ற நாவலில், கோபால பிள்ளை என்பவருக்கும் கண்ணனுக்கும் நடக்கிற உரையாடல் இது.

புலிநகக் கொன்றையில் வரும் கண்ணனைப் போல், கொள்கைப் பிடிப்பு இல்லாத கொள்கையில் பிடிப்பு இருப்பவன் நான். எனக்கு மூளையும் இருக்கிறது, இந்த புத்தகம் சில விஷயங்களில் என்னை குழப்பியும் விட்டிருக்கிறது.

வெங்கட் சாமிநாதன் கடந்த நாற்பது வருடங்களாக திரைப்படம் மற்றும் அதை சார்ந்த விஷயங்களினைப் பற்றி எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பே இந்த திரை உலகில் புத்தகம். 1960ல் பார்த்த சிறந்த திரைப்படங்களினைப் பற்றிய அவரது கருத்துக்கள் முதற்கொண்டு கமல் கூறும் எனக்கு முக்கியம் perfection அல்ல excellence” என்பதன் விமர்சனம் வரை உள்ளது இந்த கட்டுரைத் தொகுப்பில்.

வெங்கட் சாமிநாதன் என்ற கலை விமர்சகரின் எழுத்துக்களை முதல் முறையாகப் படிக்கும் தமிழ் இலக்கிய அறிவிலி நான். இப்புத்தகம் படிக்க ஆரம்பிக்கும் போது நான் வெ.சா பற்றி அறிந்திருக்கவில்லை. பின்னர் அவரைப் பற்றி இணையத்தில் மேய்ந்த பிறகு தான் அவருக்கு என்று இருக்கிற ஒரு high critic படிமம் எனக்கு தெரிந்தது. இந்த புத்தகமும் அந்த வகையினைச் சார்ந்ததே. இக்கட்டுரைத் தொகுப்பு, என்னை திரைப்படம் என்ற கலையினைப் பற்றி ஒரு நல்ல அகத்தாய்வினை செய்யவும் தூண்டியது.

இந்தப் புத்தகத்தில் உள்ள பொதுவான கருத்துக்கள் சில:

அமெரிக்க திரையுலகமும், தமிழ் திரையுலகினைப் போல் வணிக நோக்கம் கொண்டதே. புதிய பாதகளை, புதிய சொல்முறைகளை, புதிய உலகங்களை அறிமுகப்படுத்தும் செயல்பாடுகளைக் காண நாம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும், ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், ஸ்பெயின் என்றுதான் தேடிச் செல்ல வேண்டியிருக்கும்.

தமிழ் சினிமா என்பது, இன்னமும் நாடகத் தன்மையிலிருந்து முழு விடுதலை பெறாமல், அளவுக்கதிகமான நார்சிஸத்தோடும், கலையினை பாராட்டாமல், கலைஞர்களையும் தொழில் நுணுக்கத்தினையும் மட்டுமே அதிகமாக புகழ்ந்து, ஒரு சகதியில் உழன்று கொண்டிருக்கிறது.

(மேற்சொன்ன இரு கருத்துக்களிலும் விதிவிலக்குகள் நிறையவே உண்டு)

இப்புத்தகம் என்னை குழப்பியது என்பதற்கான காரணங்கள் :

சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம் மட்டுமே. அதில் நாம் கருத்து சொல்கிறேன், புரட்சி செய்கிறேன் என்றால் வேலைக்காவாது. ஏனென்றால், உழைத்து களைத்து வரும் மக்கள், சந்தோஷப்படுவதையே விரும்புகிறார்கள் என்று எனக்கு புகட்டப் பட்டதையே நம்பியிருந்தேன். ஆனால் எளிய விவசாயக் குடும்பங்களை சேர்ந்தவர்கள், நாம் பாமரர் என்றும் அவர்களுடைய மகிழ்ச்சிக்காகத்தான் படம் எடுக்கிறேன் என்று நினைக்கும் பொதுமக்களுக்கு எத்தகைய உயர்ந்த ரசனைத்திறன் உள்ளது என்பதை கர்நாடகாவில் உள்ள கே.வி.சுப்பண்ணா, தன்னுடைய கிராம மக்களுக்கு உலகின் தலைசிறந்த திரைப்படங்களை வெளியிட்டு, மக்கள் அதனை மிகவும் விரும்பி ரசிக்கும் திறனுடையவர்கள் என்று காட்டியுள்ளார்.

மேலும் நம் தமிழ் சினிமா நாடகத்தன்மையிலிருந்து விலகாமல் இருக்கிறது என்பதற்கும் பல உதாரணங்களை நாம் சொல்ல முடியும். யதார்த்தம் என்பதன் சுவடே இல்லாமல், மலை உச்சியிலிருந்து தள்ளிவிடும் முன்னர் ஐந்து நிமிட சம்பாஷணைகள். கோபம் வந்ததும் நரம்புபுடைக்க, கண்கள் சிவக்க, வசனங்களுக்கு நடுவில் அவ்வப்போது மூச்சுவிட்டுக்கொண்டு பேசும் நம் கதாபாத்திரங்கள். அந்த காலத்தில் திருவிழா போது கரகாட்டம், காவடியாட்டம் ஆடுவார்கள். நம் திரைப்படத்தில் அரைமணி நேரத்திற்கு ஒரு முறை இப்படி சேஷ்டைகள் வந்து போகின்றன. இதைப்போன்று ஒப்பீடு செய்து கொண்டே போகலாம். ( விளம்பரத்தில் கூட, டி.வியில் வரும் குங்குமம் இதழ் விளம்பரம் என்பது தலையில் கூடை சுமந்து கொண்டு, கீரைம்மா, கீரை என்று விற்கும் யுத்தி உடையது. ஆனால் Hutch விளம்பரமோ கவித்துவமும் அழகுடனும் சேர்ந்து அமைதியாக Wherever you go, our network follows” என்று சொல்லும் யுத்தி உடையது )

சரி இவ்வாறு ஒப்பீடு செய்துகொண்டே, நம்மிடை நல்ல சினிமாக்கள் குறைவு என்று தெரிந்துவிட்ட பிறகு, எவ்வாறு ஒரு நல்ல திரைப்படத்தினை நாம் கண்டுகொள்வது. ஆசிரியர் சொல்கிறார்

திரைப்படத்திற்கு ஒரு கதை வேண்டும் என்று ஒரு சாஸ்திர நியதியும் கிடையாது. ஒரு கருத்து, உணர்ச்சியின் ஒரு இழை அல்லது இழைகளின் தொகுப்பு, அர்த்தம் மிகுந்த, ஆனால் தன்னுள் ஒரு கதையினைக் கொண்டிராத வாழ்க்கையின் ஒரு பகுதி எல்லாமே திரைப்படத்திற்கு உகந்த பொருட்கள் தான்

இப்புத்தகத்தில் இருந்த கட்டுரைகள் பற்றிய என் கருத்துக்கள் :

ஒரு வேகப் பார்வையில் மற்றும் ஆரம்ப குறிப்புகள் கட்டுரையில் நான் மேலே கூறியுள்ள கருத்துக்கள் மிக அழுத்தமாக த்வனிக்கின்றன. ஸர்ஜி ஐஸன்ஸ்டைன், ஆர்ஸன் வெல்ஸ், சத்யஜித்ரே போன்றவர்கள் மீது அபார மதிப்பினை கொண்டிருக்கிறார் ஆசிரியர். சிவாஜியின் theatrical melodramaவினையும், ஸ்ரீதர் மற்றும் பாலச்சந்தரின் திரைப்பாணியினையும், கமல் ஸார் போன்றவர்களையும் கிழி கிழி என்று கிழிக்கிறார். இக்கட்டுரைகளில் உள்ள கருத்துக்கள் உண்மைதான் என்றாலும், அவை அனைத்தும் தமிழ் சினிமாவின் மீது ஒரு அளவுக்கு அதிகமான பெஸ்ஸிமிஸ்டிக் பிம்பத்தினை கொடுக்கிறது. ஆனால் ஒருவகையில் அந்த பெஸ்ஸிமிஸ்டிக் படிமமும் உண்மைதானா என்று சந்தேகப்படவும் வைக்கிறது.

ஒரு படம் ஒரு பார்வை என்ற கட்டுரையில் ஜெயகாந்தன் இயக்கிய உன்னைப் போல் ஒருவன் பற்றி மிக நீளமான ஒரு ஆய்வினைக் கொடுத்துள்ளார். திரைப்படம் என்பதின் உயிரை அறிந்து தமிழில் வந்த முதல் உருப்படியான படம் என்று உச்சி முகர்ந்துள்ளார். (தமிழில் ஜெயகாந்தன், பாலுமகேந்திரா, ஜெயபாரதி, பூமணி தவிர அனைத்து இயக்குநர்களையும் சாடியுள்ளார். அதிலும் ஸ்ரீதர், பாலசந்தர் மற்றும் மணிரத்னத்தினை பற்றி அவரளவில் காழ்ப்புணர்ச்சியில்லாமல் கடுமையாக சாடியுள்ளார்.)

கார்டியாக் என்ற ஜெர்மன் திரைப்படத்தினைப் பற்றி சொல்லும் போது Novelle Vague (புதிய அலை) என்ற திரைப்பட சித்தாந்தத்தின் பின்ணணியினைப் பற்றியும், அந்த திரைக்கதையினைப் பற்றியும் மிக ஆழமான, மிகவும் விரிவான ஆய்வினைக் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவும் அரசியலும் என்ற கட்டுரையில் மிகவும் தெளிவாகவும், ஆழமாகவும் எம்.ஜி.ஆர் என்ற ஒரு phenomenon எப்படி தமிழ்நாட்டில் சாத்தியப் பட்டது என்றும், மற்ற மாநிலங்களில் பிறர் அவரைப் போல் முயன்று ஏன் தோற்றார்கள் என்று ஒரு விரிவான, வியக்க வைக்கின்ற ஆய்வினை கொடுத்துள்ளார். இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கட்டுரை இது.

ஒரு நீண்ட பரிச்சயம் என்ற கட்டுரை இங்கமார் பெர்க்மேன் (இங்க்ரிட் பெர்க்மேன் அல்ல ;-) ) பற்றிய ஒரு அறிமுக கட்டுரை எனக்கூறலாம். பெர்க்மேனின் The Seventh Seal மற்றும் Virgin Spring போன்ற படங்கள் பற்றிய ஒரு நல்ல அறிமுகத்தினை தருகிறது.

ஐஸன்ஸ்டைன், பாவ்லாவ், ஜப்பானிய சித்திர எழுத்துக்கள் என்று கட்டுரை மிகவும் அருமை. பேட்டில்ஷிப் பொட்டெம்கின் படத்தின் இயக்குநர் ஸர்ஜி ஐஸன்ஸ்டைன், தான் திரைப்பட கலையின் ஆன்மாவினை அறிந்துகொள்ள உதவியாக இருந்த ஜப்பானிய சித்திர எழுத்துக்கள் பற்றியும், இவான் பாவ்லாவின் சித்தாந்தத்தின் பாதிப்பினைப் பற்றி அருமையாக விளக்குகிறார்.

கலை நோக்கு, தொழில் நுட்பம், தேடல் , கலை இயக்குநரின் வேலை என்ன ?” , பெருமைகளும் சிறுமைகளும் போன்ற கட்டுரைகள் உலகத்தமிழ் இதழுக்காக வெளியானவை. இந்த மூன்று கட்டுரைகள் சமீபத்தில் எழுதியவை, முந்தைய கட்டுரைகளில் இருந்த acerbity இதிலும் குறையவில்லை என்றாலும் கருத்துக்கள் கொஞ்சம் dilute செய்யப்பட்டுள்ளன.

மணிரத்னத்தின் சினிமா, அகிரா குரஸாவாவின் இகுரு , பீர் முகமதுவின் - திரைப்படம் ஒரு வாழும் கலை போன்ற நூல்கள் குறித்து தன் விமர்சனங்களினை தந்துள்ளார். இவற்றில் பீர் முகமதுவின் புத்தகத்தினைப் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

திரைப்பட விழாவினைப் பற்றிய உரையாடல்கள் மற்றும் விமர்சனங்கள் எனக்கு Greek and Latin போல தோன்றியது. காரணம் ஆசிரியர் குறிப்பிடுகின்ற இயக்குநர்கள் மற்றும் திரைப்படங்கள் பற்றி நான் கேள்வி பட்டதே இல்லை (எம் கலை/இலக்கிய அறிவு அப்படி). ஆனால் ஒரு திரைப்படத்தினை எப்படியெல்லாம் பார்க்க வேண்டும் என்று நீங்கள் தேடிக் கொண்டிருந்தீர்கள் என்றால் இவ்வுரையாடல்களில் உங்களுக்கு விடை கிடைக்கலாம். திரைப்படமோ அல்லது எந்த ஒரு கலைப்படைப்போ ரசிகனை சுண்டியிழுத்து கட்டிப்போட வேண்டும், அப்படி இல்லை என்றால் ரசிகனிடத்திலோ அல்லது படைப்பிலோ எதோ பிரச்சினை (அந்த பிரச்சினை சரியா தவறா என்பது முக்கியமல்ல) என்ற கொள்கையினை கொண்டவன் நான். ஆகையால் இந்த உரையாடல்கள் ஒரு vicariousயாக உணர்ச்சிகளை அனுபவிப்பது போன்ற தோற்றத்தினை எனக்கு தந்ததால், என்னை இவ்வுரையாடல்கள் அவ்வளவாக கவரவில்லை.

இந்த புத்தகத்தில் இருந்து takeaways மற்றும் to-do list என்று பார்த்தால் :

  1. ஸர்ஜி ஐஸன்ஸ்டைனின் பேட்டில்ஷிப் பொட்டெம்கின், இங்மார் பெர்க்மெனின் செவந்த் சீல், குராஸாவாவின் ரஷோமான், சத்யஜித்ரேவின் பதேர் பாஞ்சாலி, ஃப்ட்ரிக்கோ ஃபெலினியின் லா டோல்ஸ் விடா, ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன், ஆர்ஸன் வெல்ஸின் சிட்டிஸன் கேன், அக்ரகாரத்தில் கழுதை படங்களைப் பார்க்க வேண்டும்.

  2. பீர் முகமதுவின் - திரைப்படம் ஒரு வாழும் கலை புத்தகத்தினைப் படிக்க வேண்டும் (சென்னையில் எங்கு தேடியும் இது கிடைக்கவில்லை :( )

  3. வெ.சா விதிவிலக்கு என்று கருதுகிற தமிழ் படங்களான திக்கற்ற பார்வதி, தாகம், அவள் ஒரு தொடர்கதை மற்றும் நந்தனார், வள்ளித்திருமணம், பவளக்கொடி போன்ற இசைப்படங்களையும் பார்க்க வேண்டும்.

இந்த புத்தகத்தில் குறை என்று பார்த்தால் :

எழுத்துப்பிழைகளும் அச்சுப்பிழைகளும் நிரம்பியுள்ளது (கொஞ்சம் அதிகமாகவே). நினைத்திருந்தால் காவ்யா பதிப்பகத்தார் எளிதில் சரி செய்திருக்கலாம்.

மேலும், பல கட்டுரைகளில் உள்ள சொற்றொடர்களின் கட்டமைப்பு, தலையினைப் பிய்த்துக் கொள்ள வைக்கிறது. சில சமயம் மூன்று அல்லது நான்கு முறைபடித்தால் மட்டுமே (சில சமயம்) விளங்குகிறது. (எடுத்துக்காட்டு: கார்டியாக்குக்கு நகைக்கலையில் அல்லாது வேறு எதிலும் ஈடுபாடு கிடையாது. தன் மாளிகையை விட்டு, அநேகமாக அவன் வெளியே போவதே அவன் வழியில் கார்ட்டியாக்குக்கு தன் மகளிடம் அன்பும் பாசமும் உண்டு)

திரைப்பட விமர்சனம், திரைப்பட விழா விமர்சனம், திரைப்பட புத்தகங்களின் விமர்சனம் என்று இப்புத்தகத்தினை பிரித்திருக்கலாம்.

தமிழ் சினிமாவின் 80 ஆண்டு கால வரலாற்றில் ஒரு நல்ல நடிகனை நாம் தமிழில் கண்டதில்லை. ஒரு நல்ல திரைப்படத்தினை நாம் பெற்றதில்லை. நம் வாழ்வோடு உறவு கொண்ட அர்த்தமுள்ள திரைப்படத்தை தந்ததில்லை. பத்தாயிரக் கணக்கிலான அந்த அம்பாரக் குவியலில் சினிமா என்ற சாதனத்தின் பொருள் தெரிந்து இனம் காணக்கூடிய ஒன்றுகூட நமக்கு கிடைக்கவில்லை என்றும் வெதும்புகிறார் வெ.சா. தமிழ் சினிமா வெ.சா வெறுக்கும் அளவுக்கு அவ்வளவு மோசமா என்ன ?. எனக்கு விடை தெரியவில்லை.

(திரை உலகில் - வெங்கட் சாமிநாதன். காவ்யா வெளியீடு. விலை : 85 ரூபாய்)

December 14, 2004

Performance Appraisal

நான் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கும் எனது பொறியியல் கல்லூரிக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. எங்கள் கல்லூரியில், அஸெஸ்மெண்ட் கமிட்டி ஏதாவது வந்தால் போதும். கல்லூரி ஜொலிக்க ஆரம்பித்துவிடும். புது சுண்ணாம்புப் பூச்சு, மெஸ்ஸில் அறுசுவை நடராஜன் சாப்பாடு என்று அலங்காரமாகிவிடும். அதைப் போலவே, எங்கள் அலுவலகத்தில் வெளிநாட்டு க்ளையண்ட் யாராவது வந்தால் போதும், பூத் பங்களா போல் இருக்கும் எங்களது ஒயிட்ஸ் ரோடு அலுவலகம் அசத்தலாகிவிடும். சிவப்பு கம்பளமென்ன, பூந்தொட்டிகளில் ஒரு வார வாடகைக்கு எடுத்துவந்த அலங்கார செடிகள் என்ன, ஷூ பாலிஷ் போடும் மெஷின் என்ன, எங்களுடைய மேஜைகளுக்கு திடீரென வந்த சுத்தம் தான் என்ன. அப்பப்பா.

அதைப்போல இன்னொன்று தேர்வு. செமஸ்டர் தேர்வு நெருங்கி வந்தால் போதும். அப்போது தான் சிலபஸ் புரட்ட ஆரம்பித்து, எதை படிக்காமல் விடலாம் என்று முதலில் யோசித்து, எதைப் படிக்க வேண்டுமோ அதை படிக்காமல், முன்பே படித்தவனிடம் கொஞ்சம் கதை கேட்டு, தேர்வில் போய் hints develop செய்து மார்க் வாங்கிவிடலாம். இந்த ( 1 , 2 ) இரண்டு பேர்தான் நான் எழுதும் தேர்வுகளின் கதையாசிரியர்கள்.

இந்த தேர்வினைப் போலவே, அலுவலகங்களுக்கு என்ன என்று தேடினால், பொதுவாக டிசம்பர் மாதங்களில் நடக்கும் performance appraisal. டிசம்பர் நெருங்கும் நேரம் வந்தாலே போதும். பிரமோஷன் கிடைக்க/எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எல்லா team leadersக்கும், project leadersக்கும் projectன் மேல், அதில் உள்ள மக்களின் மேல் ஒரு அளவுகடந்த அன்பு வழிய ஆரம்பித்துவிடும். அடிக்கடி மீட்டிங் போட்டு team building என்ற பேரில் கடியை போடுவார்கள். ஊக்கமளக்கிற வகையில் பேசுகிறேன் என்று கூறி தூக்கம் வரவைப்பார்கள் (ஆகா, கவித கொட்ட ஆரம்பிச்சுடுச்சே…த்ஸு..த்ஸு). Projectன் best practices எல்லாம் exhibit செய்ய வேண்டும் என்று சொல்லி மணிக்கணக்கில் மைக்ரோஸாஃப்ட் ஆஃபிஸில் வேலையைக் கொடுப்பார்கள். மற்ற leadersகளிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக் காட்ட பல கிலோபைட் கணக்கில் ப்ரெஸெண்டேஷன்களையும், டாக்குமெண்ட்களையும் அடித்து தள்ளுவார்கள்.

சரி நான் என் மேட்டருக்கு வரேன். இந்த performance appraisal , in spirit ஒரு மிக நல்ல concept. அதை ஒழுங்காக செயல்படுத்தினால், நம்மைப் பற்றி ஒரு நல்ல அகத்தாய்வினையும் செய்ய முடியும், திறமைகளை வளர்த்து சீக்கிரம் முன்னேறவும் முடியும்.

நான் இந்த வருட ஆரம்பத்தில், ஒரு டாக்குமெண்ட்டில் நான் பார்த்த திரைப்படங்கள், நாடகங்கள், படித்த புத்தகங்கள் பற்றி குறிப்பு எடுப்பதை ஒரு வழமையாகக் கொண்டிருந்தேன். ஆக நான் பார்த்த அந்த திரைப்படங்களினைப் பற்றிய ஒரு பார்வைதான் இது. (இதுக்குத் தான் இவ்ளோ பில்டப்பு)

இந்த வருடம், இன்று வரை சரியாக அறுபது திரைப்படங்களினைப் பார்த்திருக்கிறேன். ஒரு திரைப்படத்திற்கு சராசரியாக நாற்பது ரூபாய் என்று வைத்துக் கொண்டால் கிட்டத்திட்ட 2500 ரூபாயினை, என் ஒரு மாத சம்பளத்தின் ஏழில் ஒரு பகுதியினை இதற்காகவே செலவு செய்திருக்கிறேன்.

இந்த வருடம் நான் பார்த்ததிலே எனக்கு மிகவும் பிடித்த படங்கள் :

  • Casablanca - இதற்கான காரணம்
  • Raging Bull - ராபர்ட் டி நிரோவின் பிரமாதமான நடிப்பு, Martin Scorcese வின் இயக்கம்
  • The Insider - உண்மைக் கதை, ரஸ்ஸல் க்ரொவ் மற்றும் அல் பசினொவின் நடிப்பு
  • The Messenger - ழான் எனப்படும் Joan of Arc பற்றிய கதை
  • Midnight Cowboy - ராபர்ட் டி நிரோ மற்றும் ஜான் வாய்ட்டின் நடிப்பு
  • The Last Samurai - சமுராய்கள் பற்றிய கதை மற்றும் டாம் க்ரூஸ் மற்றும் கென் வாட்டனபேவின் நடிப்பு
  • Passion of the Christ - தெரிந்த கதைதான் என்றாலும் படமாக்கிய விதம் எனக்கு பிடித்திருந்தது
  • Lock Stock and Two Smoking Barrels - டாரண்டினோ பாணியில் சொல்லப்பட்ட சில தாதாக்களின் கதை
  • Wonderboys - மைக்கல் டக்ளஸ் மற்றும் டாபி மெகையர் இருவரின் அலட்டலில்லாத நடிப்பு, தெளிவான மற்றும் எளிமையான திரைக்கதை
  • Scarface - தலைவர் அல் பசினோ தான் காரணம்
  • Paycheck - நல்ல த்ரில்லர் மற்றும் ஒரு Sci-fi
  • Finding Nemo & Shrek 2 - காரணமே வேண்டாம், இரண்டு முறை பார்த்தாலும் அலுக்காது
  • Morning Raga - நல்ல கதை, ஷபனாவின் நடிப்பு, மணி ஷர்மா மற்றும் அமித் ஹேரியின் அற்புதமான இசை
  • விருமாண்டி - வித்தியாசமான கதை சொல்லும் பாணி (மோசமான கிளைமேக்ஸ் என்றாலும் கூட), இளையராஜாவின் இசை, கமலின் இயக்கம்.
  • ஆய்த எழுத்து - மாதவன், பாரதிராஜா மற்றும் மீரா ஜாஸ்மீனின் நடிப்பு, எனக்கு மிகவும் பிடித்த கதை, கொஞ்சம் வித்தியாசமான திரைக்கதை
  • 7/G ரெயின்போ காலனி - (ரொம்ப சூப்பரான கதை இல்லையென்றாலும்) நல்ல திரைக்கதை, யுவன் ஷங்கர் ராஜாவின் அசத்தலான இசை
  • கனவு மெய்ப்பட வேண்டும் - பாராட்டப் படவேண்டிய படம், நல்ல கதை, மகேஷின் இசை, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மோகனசுந்தரம் கதாபாத்திரம்
  • கில்லி - பாப்கார்ன் கோக்கோடு சென்று மூளையினை உபயோகிக்காமல் அனுபவிக்க வேண்டிய மசாலா படம்
  • வசூல்ராஜா - முன்னாபாய் பார்க்கவில்லை அதனால் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது
  • த்வீபா (Dweepa - Kannada) - கிரீஷ் காசர்வள்ளியின் படம் இது. சௌந்தர்யாவின் அருமையான நடிப்பும், கிரீஷின் திரைக்கதை மற்றும் இயக்கம்
  • தேவ் - ஓம் பூரி, அமிதாப்பின் நடிப்பு, கோவிந்த் நிஹ்லானியின் அனல் பறக்கும் வசனம் மற்றும் இயக்கம்
  • லக்ஷயா & நாச் - சிம்பிளான கதை ஆனால் சொல்லப்பட்ட விதம் பிடித்திருந்தது
  • காக்கி - சூப்பர் மசாலா

ஒரு ஃப்ரேமாக வெறுத்து வெறுத்து பார்த்த படங்கள்:

  • Gothika - தலைவலி
  • ஜெய் - கண்றாவி
  • மன்மதன் - நினைப்புதான்,குப்பையிலும் கடைந்து எடுத்த குப்பை. வித்தியாசமாம், மண்ணாங்கட்டி.
  • எங்கள் அண்ணா - பாதியிலே ஓடிவந்துட்டோம்
  • ருத்ராக்ஷ் - கொடுமைடா சாமி

சில படங்கள் மற்றவர்கள் சூப்பர் என்றார்கள், ஆனால் என் மனதில் அவ்வளவாக ஒட்டவில்லை. அவை (Sanjuro , The Guns of Navarone, Monster, Troy, Mary Poppins, ஆட்டோகிராஃப்)

மற்றபடி காசையும் வீணாக்கியோ அல்லது தூக்கத்தை கெடுத்தோ பார்த்தவை (Veer Zaara, Chameli, அருள், M.குமரன், எதிரி, செல்லமே, பேரழகன் Once upon a time in Mexico, Spiderman 2, ……)

இதைப்போல் கண்டமேனிக்கு படம் பார்த்து வைத்திருக்கிறேன் நான். பொதுவாக தீபாவளி வந்தால் இப்படித்தான் கண்டபடி பலகாரம் தின்றுவிட்டு மலங்க மலங்க முழிக்கும் போது, பாட்டி கருப்பு நிறத்தில் குமட்டிக் கொண்டு வரவைக்கும் ஒரு லேகியத்தினை வாயில் திணித்து வயிற்றை சரி செய்வாள்.

அந்த வகையில் கன்னாபின்னாவென படம் பார்த்து வைத்திருக்கிறேன். அதிர்ஷ்ட வசமாக வெங்கட் சாமிநாதனின் திரை உலகில் என்ற லேகியத்தினையும் தின்று விட்டேன். அடுத்த பதிவில் என் வாசிப்பு அனுபவத்தினையும், இந்த performance appraisal மூலம் வந்த முடிவினையும் அடுத்த பதிவில் எழுதுகின்றேன்.

November 26, 2004

அமிர்தசரஸில் சில ஆத்மி”க்கள்

என்னுடைய ப்ராத்மிக் ஹிந்தி அறிவினையும், என் தம்பியின் ராஷ்ட்ரபாஷா அறிவினையும் நம்பி இரு ஆத்மாக்கள் அமிர்தசரஸ் வரை சென்று வரலாம் என்று ரிஸ்க் எடுத்தார்கள். என் தம்பியும் நானும் ஒரளவு ஹிந்தி பேத்தி அமிர்தசரஸ் வரை சமாளிச்சிட்டோம். அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே உள்ளே தங்குமறைக்கான அலுவலகத்தின் அருகே அனைவரும் தூக்கக் கலக்கத்தில் நின்று கொண்டிருந்தோம்.

அப்பாவோ, என் தம்பி மற்றும் என்னுடைய ஹிந்தி உதவி இல்லாமலேயே சமாளிக்கலாம் என்று அந்த அலுவலகத்தில் உள்ள ஒரு கவுண்ட்டருக்குச் சென்று தன் யுனைட்டட் இந்தியா இன்ஷூரன்ஸ் விசிட்டிங் கார்டினைக் காட்டி , We want room” என்றார்.

ஆனால் அங்கே இருந்த சர்தார்ஜி, அதைப் பார்க்காமல், ஹிந்தியில் (பஞ்சாபியாக கூட இருந்திருக்கலாம்) எதோ சொன்னான்.

என் அப்பாவோ, No. Hindi, only English”

சர்தார்ஜி, என்ன நினைத்தாரோ என்னவோ, உரத்த குரலில் கித்னி ஆத்மி ?” என்றார்.

என் தந்தை ரொம்பவும் அறிவாளித்தனமாக, No. I’m not from Army. I’m insurance”.

அங்கிருந்த இன்னொரு சர்தார்ஜியுடன் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தனர். பிறகு, கித்னி ஆத்மி ?” என்று கூறினார்.

என் தந்தை விடாக்கண்டன் , No. Army, insurance, insurance”

ரெண்டு சர்தார்ஜிக்களும் ரொம்ப சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தூக்கக் கலக்கத்தில் இருந்த நான் விழித்துக்கொண்டு, ஆகா அப்பா மானம் கப்பலேறுதே என்று அரக்க பரக்க சென்று. ச்சார் ஆத்மி. கம்ரா ஹேனா ?”, என்று தத்துபித்தி சமாளித்தேன்.

September 14, 2004